ஓப்பன் தியேட்டர் புரடக்ஷன்ஸ் மற்றும் மின் மேக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க பாரதிராஜாவின் மகன் மனோஜ் , பாரதிராஜாவின் சிஷ்யர் பாக்யராஜின் மகன் சாந்தனு, பாக்யராஜின் சிஷ்யர் பாண்டியராஜனின் மகன் பிருத்வி மூவரும் இணைந்து நடிக்க, செந்தில் குமார் இயக்கி இருக்கும் படம் வாய்மை .
தனது மகனை சின்ன வயசில் இருந்து பாசமுடன் வளர்க்கும் ஒரு தாய்க்கு, அவன் அநியாயமாக தவறான தீர்ப்பால் தூக்குத் தண்டனை கைதியாக்கப் பட்டால் எப்படி இருக்கும் என்பதையும், அவனை மீட்க அந்த தாய் நடத்தும் பாசப் போராட்டம் (யாரு கதைன்னு புரியுதா? பேரறிவாளன் !)….
அவனை மீட்க முயலும் நல்லவர்கள் …. அதன் சட்டப் போராட்டம் .. அதில் ஆக்ஷன் , செண்டிமெண்ட். சமுதாயத்தை நோக்கிய சில கூரிய கேள்விகள் ….
— இப்படிப் போகும் இந்தப் படத்தில் கே. பாக்யராஜ், கவுண்டமணி, தியாகராஜன். பூர்ணிமா பாக்யராஜ் என்று பல சீனியர் கலைஞர்களும் இருக்கிறார்கள்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட, பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்
” இந்த நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிட்டப்ப நான் வர விரும்பல. ஏன்னா என் மகன் விசயத்தில் திரையுலகம் எனக்கு ஆதரவா இல்ல. ஒரு சிலரைத்தவிர யாரும் எங்களுக்கு உதவ முன்வரல. ஆனாலும் இந்தப் படம் ஒரு தாயின் வேதனையையும் பிள்ளையின் துன்பத்தையும் சொல்லி இருக்கும் அற்புதமான படம் என்பதால் வந்தேன் ” என்று கனல் கொளுத்திப் போட்டிருந்த நிலையில் ,
மதியம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக் குழு .
படத்தின் தயாரிப்பாளர் நாகராஜன் பேசும் போது ” நாங்க பொற்கொல்லர்கள் . சில நகைகள் செய்யும்போது இன்னும் இன்னும் சிறப்பா செய்யற ஆசையில , சேதாரம் கொஞ்சம் அதிகமாகும்போது கூட இழப்பை பத்தி கவலைப் பட மாட்டோம் . அதனால்தான் டைரக்டர் செந்தில்குமார் ஆரம்பத்தில் சொன்னதை விட செலவு அதிகமான போதும், அவர் மேலும் மேலும் படத்தை செதுக்குவதை உணர்ந்ததால், அமைதியாக ஏற்றுக் கொண்டோம் ” என்றது…. நிஜமாகவே பொன் ‘மொழி ‘
இதை முன்னெடுத்துப் பேசிய தயாரிப்பு ஆலோசகரும், இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருப்பவருமான வெங்கட்
“இது போன்ற தயாரிப்பாளர்கள் சினிமா மீது வைக்கும் நேசத்தில் நூற்றில் ஒரு பங்கை கூட கார்ப்பரேட் கம்பெனிகளால் வைக்க முடியாது. அவர்களுக்கு ஈமெயில் , பேலன்ஸ் சீட் … இவைதான் தெரியும் . நாகராஜ் போன்றவர்கள் இன்னும் சினிமாவுக்கு வர வேண்டும் .
பலரும் என்னிடம் தங்களது கதையை சொல்லி கருத்துக் கேட்பதைப் போலவே செந்தில்குமாரும் என்னிடம் ஆரம்பத்தில் வந்து கருத்துக் கேட்டார் . அப்புறம் நானும் இந்தப் படத்தில் நடிகன் ஆனேன் . மிக சிறப்பான கதை , வசனம் , கிளைமாக்ஸ் ஆகியவை இந்தப் படத்தின் பலம் . ‘இந்த நாட்டில் இலவசமா அரிசி கிடைக்குது , மின்சாரம் கிடைக்குது , சைக்கிள் கிடைக்குது , கம்பியூட்டர் கிடைக்குது . ஆனா இலவசமா நீதி கிடைக்குதா ?’ என்ற ஒரு வசனம் போதும் உங்களுக்கு உதாரணத்துக்கு ” என்றார் .
“ஆரம்பத்தில் சினிமாவுக்கு வர எங்கப்பா எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்காரு . ஆனா அதுல 20 சதவீத கஷ்டத்தை நான் இந்த ஒரு படத்துலையே பட்டுட்டேன் ” என்றார் சாந்தனு .
“தாஜ்மகால் படத்துல நான் நடிச்சத எல்லாம் மறந்துடுங்க. இப்போ வேற மாதிரி வர்றோம் ” என்று உற்சாகம் காட்டினார் மனோஜ்.
“ஒரே படத்துல பாக்யராஜ் சார், கவுண்டமணி சார், பூர்ணிமா மேடம் , தியாகராஜன் சார் இவங்க கூட நடிச்சது பெரிய அனுபவம் “– இது பிருத்வி.
இயக்குனர் செந்தில் குமார் பேசும்போது
” எனக்கு சினிமா தவிர எதுவும் தெரியாது . அதனால கதை ரெடி பண்ணின உடன ஊருல உள்ள பணக்காரங்கள லிஸ்ட் எடுத்தேன் . எல்லார்கிட்டயும் போன்ல பேசினேன் . அப்படி கிடைச்சவர்தான மின் மேக்ஸ் மணி சார், அப்புறம் வந்தவர் நாகராஜன் ” என்றார். கிட்டத்தட்ட தயாரிப்பளர்களை பைனான்சியர் மாதிரி ஆக்கி விட்டு படத்தின் தயாரிப்பையும் தலையில் சுமந்திருக்கிறார் செந்தில்குமார் .
“ரொம்ப ஆர்வத்தோடு படம் எடுத்திருக்கிறார் செந்தில்குமார் . சாந்தனு, மனோஜ் , பிருத்வி எல்லாம் சிறப்பா பண்ணி இருக்காங்க . படம் நல்லா வந்திருக்கு ” என்றார் பாக்யராஜ் .
வாழ்த்துகள் !