வாலு @ விமர்சனம்

vaalu 1

சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி..ராஜேந்தர் வெளியிட , நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் சிம்பு, சந்தானம், ஹன்சிகா நடிக்க,  கதை திரைக்கதை வசனம் எழுதி விஜய் சந்தர் இயக்கி இருக்கும் படம் வாலு . எவ்வளவு தூரம் நீள்கிறது ? பார்க்கலாம் .

ஷார்ப்பும் (சிம்பு) டயரும் (சந்தானம்) நெருங்கிய நண்பர்கள்.

மகனிடம் எதையும் எதிர்பாராத அப்பா (நரேந்திரன்) பாசமான அம்மா, வெளியே சண்டை போட்டாலும் உள்ளே ஊழிப் பாசம் காட்டும் சகோதரி ஆகியோருடன் இருக்கும் ஷார்ப்புக்கு,   பிரியா (ஹன்சிகா) மீது காதல் வருகிறது . ஆனால் அவள் இவனை நண்பனாக ஏற்றுக் கொள்வதே பெரும்பாடாக இருக்கிறது .

இதற்கிடையில் மாநகரின் முக்கிய மார்க்கெட்டின் முக்கிய வியாபாரியும் அடியாள் பலம் நிறைந்த கந்து வட்டி தாதாவுமான அன்பு (ஆதித்யா) என்பவனின் அடியாட்களோடு ஷார்ப்புக்கு  ஏற்படும் விரோதம் வளர்கிறது . ஒரு முறை அது அன்புவுக்கும் தெரிய வர, ஷார்ப் பக்கம் நியாயம் இருப்பதாள் ஷார்ப்புக்கு ஆபத்தில்லாமல் போகிறது .

vaalu 3

ஷார்ப் தன் காதலை போராடி மெல்ல மெல்ல ஒரு நிலையில் பிரியாவிடம் சொல்ல , பிரியாவோ தனக்கு தன் மாமன் மகனுடன் நிச்சயம் ஆகி விட்டதாகவும் அவனுடன்தான் திருமணம் என்றும் கூறுகிறாள். ஆனால் பிரியாவுக்கும் அவளது மாமன் மகனுக்கும் திருமணம் நடப்பதற்குள் அவளுக்கு காதலை உணர வைக்க முடியும் என்று திட்டமிடும் ஷார்ப், நண்பன் டயர் மற்றும் அம்மா அப்பா தங்கை உதவியுடன் செயல்படுகிறான் .

ஒரு நிலையில் ஷார்ப்புக்கும் பிரியாவுக்கும் முட்டிக் கொள்கிறது. அன்புவின் ஆட்களுக்கும் ஷார்ப்புக்கும் பகை அதிகம் ஆகிறது. பிரியா விஷம் குடிக்க…. . அதன் பின்னர் என்ன ஆனது என்பதே இந்த வாலு .

சிம்பு படம் வந்துதான் எத்தனை நாள் ஆச்சு ? வேறொரு நடிகன் மட்டும் இப்படி ஒரு பெரிய கேப் விட்டால் அப்படி ஓர் ஆள் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய் இருக்கும் . ஆனால் சிம்புவைப் பார்க்க சும்மா கூட்டம் கட்டி ஏறுகிறார்கள் ரசிகர்கள் . அப்படி ஒரு ஒப்பனிங் . இந்த ரசிகர்கள் தன் மீது கொண்டிருக்கும் அன்பை உணர வேண்டிய கடமை சிம்புவுக்கு இருக்கிறது .

சிம்புவும் சந்தானமும் போட்டிக்கு ஏட்டியாகவும் ஏட்டிக்குப் போட்டியாகவும் பேசிக் கொள்வதிலேயே படம் ஓடுகிறது .

vaalu 4அதில் பல இடங்கள் ரசிக்கவும் வைக்கின்றன . நகைச்சுவை, காதல்,  பதட்டம் , கோபம் , குறும்பு, கோமாளித்தனம் எல்லாவற்றையும் அட்சர சுத்தமாக செய்கிறார் சிம்பு.சண்டைக்காட்சிகளிலும் கவர்கிறார் . நடனம் .. சொல்லணுமா என்ன ?

சந்தானம் வசன நகைச்சுவைக்கு அப்பாற்பட்டு முகபாவங்களிலும் முன்கால் வைக்கிறார் .

ஹன்சிகாவை முடிந்தவரை அழகாகக் காட்டுகிறார்கள் . நடிப்பு வழக்கங்கள். பின்னணிக் குரல் கொடுத்தவர் வாழ்க !

அப்பாவாக நடித்திருக்கும் நரேன் கதாபாத்திரத்தை மிக அழகாக உள்வாங்கி நடிக்கிறார் . அந்தத் தங்கை நடிகையும் அப்படியே .

 அம்மாவாக நடிக்கும் அம்மா ரஞ்சனியம்மா..  என்னம்மா ஆச்சு? வாயில் தேளை வைத்துக் கொண்டு டப்பிங் பேசியது போல இப்புடி ஒரு மாடுலேஷனில் தமிழ் பேசறீங்க? சும்மா கொத்திக் குத்திக் குதறி கொல வெறி காட்றீங்களேம்மா …ஜுனூன் தமிழை விட மோசமா இருக்கேம்மா .

Vaalu-Movie-Simbu-Hansika-Still-2

எஸ் எஸ் தமனின் இசையில் பாடல்கள் ஒகே . சக்தியின் ஒளிப்பதிவில் டாலடிக்கிறது ஃபிரேம்கள்.

ஷார்ப்புக்கும்ம் அவன் அப்பாவுக்குமான புரிதல்,ஷார்ப்புக்கும் அவன் தங்கைக்குமான ஆழ் மனப் பாசம் போன்ற ஏரியாக்களில் ஜொலிக்கிறது விஜய் சந்தரின் திரைக்கதை மற்றும் இயக்கம் .

சந்தானமும் ரவுடியும் நாடு ரோட்டில் இரவு முழுக்க நிற்கும் அந்த உதார் காமெடியும் , கவுன்சிலர் காமெடியும் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறது.

ஹெல்மெட் போடாத டூவீலர் ஓட்டிகள், ரசீது கொடுக்காமல் காசு பிடுங்கும் டிராஃபிக் போலீஸ் குருவி, காக்கா,  கொக்கு யதார்த்தத்தின் பிரதிபலிப்பு . 

மருத்துவமனை நாடகம் , அதில் வரும் டுவிஸ்ட் இரண்டும் வழக்கமானதுதான் என்றாலும் அந்த டுவிஸ்டுக்கே டுவிஸ்ட் கொடுக்கும் இடம் பலே

vaalu 2வழக்கமான காதல் , நட்பு , மது என்று புளித்துப் போன ஏரியாக்கள்தான் படத்தின் குறை. இன்னும் கொஞ்சம் நல்ல கதையை எடுத்துக் கொண்டு இவ்வளவு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளையும் அதற்குக் கொடுத்து இருந்தால்…

வாலு தானே வளைந்து வளைந்து சுருண்டு ஒரு சிம்மாசனமாகவே மாறி இருக்கும்.

எனினும் , நண்பர்களுக்கு இடையேயான யதார்த்தமான பழகியலை பிரதிபலிக்கும் வகையில் வாலு கவர்கிறான் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →