ஓசானியா ஏ ஜே ஆர் சினி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்க , ஜிதின் ராஜ், கானா சிவா உட்பட பல்துறை இசைக் கலைஞர்களான இளைஞர்கள் , இளம்பெண்கள் பலர் படத்தில் தங்களுக்கான பாடல்களை தாங்களே பாடி இசைக்கருவிகள் வாசித்து நடிக்க, இசையமைப்பாளரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துனருமான ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பதோடு முதன் முதலாக எழுதி இயக்கி இருக்கும் படம் ‘வானவில் வாழ்க்கை ‘ .
இந்த வானவில் எவ்வளவு வண்ணமயமாக இருக்கிறது? பார்க்கலாம் .
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட – அதே நேரம் டெல்லியில் இருந்து சென்னைக்கு கல்லூரிக்கு படிக்க வரும் ஒரு மாணவன், சங்கீதம் தெரிந்த அய்யராத்தில் பிறந்த மாணவி , இவர்களைப் போலவே இன்னும் சில காஸ்மாபாலிட்டன் மாணவ மாணவியர்.. என்று கல்லூரியில் இசைக்குழு வைத்திருக்கும் ஒரு மாணவக் குழு ஒன்று , ஆல் இந்தியா மியூசிக் காம்பெட்டிஷனில் முதல் பரிசு வாங்கி சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு பெருமை சேர்த்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை .
இதில், அனாதையாக ஏழ்மையாக இருந்தாலும் அதை நண்பகளிடம் வெளிப்படுத்தினால் பரிதாபப்பட்டு பண உதவி என்று வந்து விடுவார்கள் என்பதால், அதை மறைக்கும் சரவணன் என்ற ஒரு ஏழை மாணவன் கதாபாத்திரம் , திமிர் பிடித்த ஒரு சீனியர் மாணவி கதாபாத்திரம் , கானா பாட்டுப்பாடி இந்த குரூப் மாணவ மாணவியரை கலாய்த்து , பிறகு நண்பர்களாகும் கானா பாட்டு நண்பர்கள் என்று இன்னும் சில கதாபாத்திங்கள் .. தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!
நகரத்து மாணவர்கள் கிராமத்துக்கு போவது , இயற்கையான தண்ணீரையும் காற்றையும் சிலாகிப்பது , புளூ கிராஸ் கதாநாயகி, நட்பு காதல் மாற்றம் என்று மிக எளிதான காட்சிகள் .
கடைசி நேர காம்பெட்டிஷன் காட்சிகளில் கூட இன்னும் சிறப்பாக செய்து இருக்கலாம் .
விளையாட்டுக்களில் வெல்லும் மாணவர்களுக்கு அதற்கென தனி மதிப்பெண்ணும் வேலை வாய்ப்பில் முன்னுரிமையும் வழங்கப்படுவது போல இலக்கியம் , இசை உள்ளிட்ட துறைகளில் சாதிக்கும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்… அதே போல மேற்கத்திய இசைப் படிப்பை நமது பல்கலைக் கழகங்களில் பட்டப் படிப்பாக வைக்க வேண்டும்( நமது மண்ணின் பாரம்பரிய இசைக்கு எல்லாம் பட்டப்படிப்பு வந்துருச்சா ஜேம்ஸ் வசந்தன்?) என்று இரண்டு கோரிக்கைளை வைக்கிறது இந்தப் படம் . ஆனால் ஒரு படத்துக்கு இது மட்டுமே போதுமா ?
ஃபாஸ்ட் ஃபார்வார்ட் ஆங்கிலப் படத்தின் பாதிப்போ என்னவோ நண்டும் சிண்டுமாக குஞ்சும் கொலவானுமாக படத்தில் பதினேழு பாடல்கள்.
அவற்றில் ஒன்று பாரதியார் பாடல் என்பதோடு பாடல்களில் தமிழ் மொழி உணர்வை மாநிலப் பற்றை தூக்கிப் பிடித்து இருப்பதை பாராட்டலாம் .
வானவில் வாழ்க்கை .. கருப்பு வெள்ளை !