சிதாரா இன்டர்நேஷனல், பார்ச்சூன் போர் சினிமாஸ் , ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் சார்பில் சூர்யதேவார நாக வம்சி மற்றும் சாய் ஸௌஜன்யா தயாரிப்பில் தனுஷ், சம்யுக்தா , சமுத்திரகனி , ஆடுகளம் நரேன் நடிப்பில் வேணி அட்லூரி இயக்கி இருக்கும் படம்.
1990களில் நரசிம்மராவ் ஆட்சியில் கல்வி தனியார் மயமாக்கப்பட்டபோது, அரசுப் பள்ளிகளை ஒழித்துக் கட்ட தனியார் பள்ளி முதலாளிகள் செய்த பல வஞ்சக செயல்களை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை .
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நல்ல முறையில் பாடம் நடத்த தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை அனுப்புவதாக அனுமதி பெற்று மிக மோசமான ஆசிரியர்களை அனுப்பி மேலும் அரசுப் பள்ளிகளை பலவீனமாக்கி அதை தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக்க முயல்கிறார் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் ( சமுத்ரக்கனி)
அப்படி அனுப்பபட்ட கடைநிலை ஆசிரியர் ஒருவர் (தனுஷ்) அந்த ஊர் பிள்ளைகளின் நிலைமை பார்த்து உண்மையாகவே அரசுப்பள்ளி மாணவர்களை ஒழுங்காகப் படிக்க வைக்க, அதற்கு ஒரு ஆசிரியை ( சம்யுக்தா) உதவ, விஷயம் தனியார் பள்ளித் தலைவருக்குத் தெரிந்து ..ஆசிரியரை ஒழித்துகட்ட உதவ என்ன நடந்தது என்பதே படம் .
தனுஷ் வழக்கம் போல சிறப்பாக நடித்துள்ளார். சம்யுக்தா விளம்பரப்பட நாயகி போல படம் முழுக்க ஃபிரஷ் ஆக இருக்கிறார் . சமுத்திரக்கனி வில்லனாக! கவுரவ தோற்றத்தில் பாரதிராஜா .
ஜி வி பிரகாஷ் குமாரின் இசையில் அடி ஆத்தி பாடலும் பின்னணி இசையும் தீம் மியூசிக்கும் அருமை . சண்டைக்காட்சிகள் சிறப்பு .
படம் முழுக்க நல்ல வசனங்களும் பக்குவமில்லாத வசனங்களும் இருக்கின்றன. .
சோழவரம் பகுதியில் பாதிக்கு மேல் தெலுங்கர்கள் என்ற வசனத்தின் நோக்கம் தவறாக உள்ளது. கல்வியை பிரசாதம் என்று சொல்வது மடமை. அது எதிர்பார்ப்பில்லாமல் அம்மா போடும் அன்பான சோறு . இங்கே அம்மா என்பது அரசு .
படம் முழுக்க தெலுங்குப் படத்துக்கான காட்சிகள் அதிகம் இருக்கின்றன. பழமையான பாணி
எனினும் கல்வி குறித்து போராடிய ஆசிரியரின் கதை , அவருக்கும் மாணவர்களுக்குமான மரியாதைக்குரிய பந்தம் அருமை .
மாணவர்களின் கல்விக்கு எதிரானதாக கூறப்படும் திரையரங்குகளை வைத்தே மாணவர்களுக்கு ஆதரவான காட்சி இவற்றால் பாராட்டுக்குரிய படமாகிறது வாத்தி