‘வாயில வட சுடும்’ வந்தா மல படப் பாடல்

இசை அமைப்பாளர் சாம் டி ராஜ்
இசை அமைப்பாளர் சாம் டி ராஜ்

ஆர்யா நடித்த கலாபக் காதலன் படத்தை இயக்கிய இகோர் இயக்கத்தில், கெய்கர் பிலிம் புரடக்ஷன் சார்பில் மலேசியாவைச் சேர்ந்த ஜெயராதாகிருஷ்ணன்  மற்றும் நவ குமாரன் இவர்களுடன் கொரியாவைச் சேர்ந்த கிம் சூன் ஜாங் ஆகியோர் தயாரிக்க, இளம் இசையமைப்பாளர் சாம் டி ராஜ் இசையில் உருவாகி இருக்கும் படம் ‘வந்தா மல’

சென்னையில் காலகாலமாக வாழும் மக்களின் மொழியில் அமைந்த இந்தப் படத்தின் பாடல்களுக்கு,   நகர்ப்புற  சென்னையின்  நேட்டிவிட்டி இசையை…..  சரியான இசைக் கருவிகள் , அருமையான மெட்டுகள் , பொருத்தமான குரல்கள் மூலம் மிக சிறப்பாகக்  கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் சாம் டி ராஜ் .

 இப்படி முழுமையாக சென்னைத் தமிழுடன் அதற்கேற்ற இசையைக்  கலந்து ஒரு படத்தின் எல்லாப் பாடல்களும் இதுவரை அமைந்ததில்லை என்ற நிலையில்,  படத்தின் பாடல்கள் செம ஹிட் அடித்து இருக்கிறது .

Vandha Mala Press Meet Stills (23)

எல்லாரையும் அப்படி உற்சாகமாக  ரசிக்க வைக்கும் இந்தப் படத்தின் பாடல்களில், சுகுமார் எழுதிய  வாயில வடைசுடு என்ற பாடல் ரொம்ப சுவாரஸ்யமான ஒன்று

நியாய அநியாயம் பற்றிக் கவலைப்படாமல், கவர்ச்சிகரமான – நம்ப வைக்கிற –  சாமர்த்தியமான பேச்சை  வைத்தே எல்லாரையும் கவிழ்த்து,  தனக்கு வேண்டியதை பெற்றுக் கொள்பவர்களையும் கெத்து காட்டியே எல்லாரையும் சமாளித்து காலத்தை ஓட்டுபவர்களையும்  பார்த்து….

“அவன் வாயில வடை சுட்டே பொழைச்சுக்குவான் ” என்று சொல்வது ஒரு பேச்சு வழக்கு.

அதையே ஆரம்பமாக வைத்து ‘வாயில வட சுடு’ என்ற வரியோடு துவங்கும் பாடலின் முதல் அட்ராக்ஷனே,  அந்த ஆரம்ப வரிகள்தான் .

இயக்குனர் இகோர்
இயக்குனர் இகோர்

காசு பணமும் காரிய வெற்றியும்தான் முக்கியம் . அதனால கொஞ்சம் அப்படி இப்படி இருந்து புத்தியோடு பொழைச்சுக்கோ என்று சொல்லும்படியான பாடல்கள் தமிழுக்கு புதுசு இல்லை .

“ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே. காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே” என்ற புகழ்பெற்ற வரியை உள்ளடக்கிய,  ”தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாதடி ” என்ற பராசக்தி பாடல் உட்பட, இந்த வகைப் பாடல்கள் நிறைய உண்டு .

அந்த வகையில் ”சாமர்த்தியமாக பேசியே காரியம் சாதித்துக் கொள்” என்ற அக்கறையோடு அட்வைஸ் பண்ணுகிற பாட்டாக, வந்தா மல படத்தில் வரும்   இந்த வாயில வட சுடு பாட்டு அமைந்திருக்கிறது .

”ஆன்னா ஊன்னா அறுபத்தி ரெண்டு
ஆச்சா பூச்சா எழுபத்தி ரெண்டு
வாயில வடை சுடு
நீ வாயில வடை சுடு ”

-என்பதுதான் பல்லவியின் முதல் வரி .

Vandha Mala Movie Stills
வாயில வடை சுடுவது என்றால் என்ன  என்பதற்கு பெரிதாக ‘அருஞ்சொற்பொருள்’  விளக்கம் எல்லாம் கொடுக்காமல், மேற்சொன்ன வரிகளில்  உணர்வு ரீதியாக வார்த்தைகளை அமைத்து இருப்பது,  இந்த வரிகளை  ரசிக்க முக்கியக் காரணமாக அமைந்து இருக்கிறது.

அதை அவ்வளவு வேகமான டிரம்ஸ் இசையுடன் கூடிய டியூன்  , அதைத் தொடரும் நேர் மாறான துள்ளலான தத்தகாரம் என்று போட்டு சூடாகக் கொடுக்கிறார் இசை அமைப்பாளர் . பாடலே அந்த தத்தகாரத்தில்தான் ஆரம்பிகிறது . 

”வாய ஒண்ண மட்டும் வச்சு
உலகத்தையே  மாத்திக் காட்டு
வாயில வடை சுடு
நீ வாயில வடை சுடு

– என்று தொடர்கிற அடுத்த வரிகளில் வாயில வட சுடுவதன் ‘அல்டிமேட் சக்தி(?!?)’யை சொல்கிறார்கள் .

vandha mala 4

“முட்டை வந்துச்சா கோழி வந்துச்சா
நமக்கு தேவை ஆம்லெட்டு மச்சான்
வாயில வடை சுடு
வாயில வடை சுடு”

— என்ற வரிகளோ வாயில வட சுடும் விவகாரத்தில் ‘கடமை பற்றி கவலைப் படாதே மச்சி; பலன்தான் முக்கியம்’ என்பதை,  ‘பக்குவமாக’ சொல்கிறது.

”சுண்டைக் கோழி உன்னை நினைச்சா
சூப்பர் மேனா ஆயிக் காட்டு
வாயில வடை சுடு
நீ வாயில வடை சுடு ”

— இந்த வரிகளில் வாயில வட சுடுவதன் பவரை காட்டுகிறர்கள்.

vandha mala 2

சட்டென்று மெட்டு , ஆர்க்கெஸ்ட்ரேஷன் எல்லாமும் மாற , டேப் அடிக்குள் நுழைகிறது இசை.

அதைத் தொடர்ந்து வரும்

”உருட்டிப் போட்டா போண்டா
அட  உதறிப் போட்டா பக்கோடா
உலகம் ஒரு உருண்ட மாமா
ஏண்டா வுழ்ந்து பெரண்ட?”

— என்ற வரிகளில்,   வாயில சுடும் வடை  சுவையாக அமையாமல் போனால் , அதற்காக மனம் உடையாமல் எப்படி அதையே மாற்றிப் போட்டு பேசி காரியம் சாதிக்க வேண்டும் என்று,  பஞ்ச(த்துக்கு) தந்திரம் சொல்கிறது பாடல். 

vantha mala 5

அடுத்து வரும்

”சொட்டைத் தலையில எண்ணெயதேய்ச்சா
முடி முளைக்கும்னு மிளகா அரைக்கலாம்
வாயில வடை சுடு
நீ வாயில வடை சுடு”

– என்கிற வரிகள்…. ‘நாட்டில் முட்டாப் பயல்களுக்கு பஞ்சமே இல்லை . எனவே லாஜிக் எல்லாம் பார்க்காமல் என்ன வேண்டுமானலும் சொல்லி வாயில வட சுட்டுப் பிழைசுக்கோ ‘  சொல்கிறது. 

சரி அப்படி வாயில வட சுடுவதால் பிரச்னை வந்து சிக்கிக் கொண்டால் ?

”ஆயிரம் காக்கா வந்தா என்ன?
ஒத்தக் கல்லுல பறந்து போகும்
வாயில வட சுடு நீ வாயில வட சுடு”

–என்று மஸ்து காட்டுகிறது இந்த வரிகள்.

பாடலாசிரியர் சுகுமார்
பாடலாசிரியர் சுகுமார்

அதாவது ‘பயப்படாமல் தில்லா சமாளிக்கணும் . ஏன்னா அவன் எல்லாம் கூட வாயில வட சுட ஆசைப்படுகிற — ஆனால் அந்த திறமை இல்லாத ஆளாகத்தான் இருப்பான்’ என்று தில்லு சொல்லி முடிகிறது இந்தப் பாட்டு .

பாடல் முழுக்க வா…ய்ய்ய்ய்….இ…..ல்ல்ல்லல்ல்ல்… ல வddddddddட சுddddddddddடேய் என்ற  அந்த வார்த்தையை உருட்டிப் பிசைந்து அழுத்தி உலுக்கி விளையாடுகிறது இசை.

அங்கங்கே வரும் வித்தியாசமான ஒலிகள் சுவராஸ்யம் . ஒருநிலையில்  டேப் அடி மூலம் ஒலிக்கும் பக்கா டப்பாங்குத்து… மறுபடியும் தத்தகாரம் என்று அடிக்கடி வரும் சேஞ்ச் ஓவர்களும் பாடலின் உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொள்கின்றன.

சரி.. இதெல்லாம் இருக்கட்டும் …

இப்பவே நாட்டில் நீதி நியாயம் நேர்மை எல்லாம் அணுஅணுவாக சாகடிக்கப்பட்டு வரும் நிலையில் அயோக்கியத்தனத்துக்கு அணிகலன் பூட்டி அழகு பார்க்கும் பாடல் ஒன்று தேவையா என்ற கோபம் வரத்தான் செய்கிறது .

ஆனால் அரசியல்வாதிகள் , டெலிகாலர்கள், மார்க்கெட்டிங் ஏஜண்டுகள், ரியல் எஸ்டேட் ஆட்கள் உட்பட சமூகத்தின் பல பிரிவினரும் நிஜத்தில் இப்போது இப்படி வாயில வட சுட்டுதான் ஜமாய்க்கிறார்கள் என்ற நிலையில் …

  இருக்கிற சமூகத்தைதானே இந்தப் பாடல் பிரதிபலிக்கிறது என்று…

நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான் . 

இசை அமைப்பாளர் சாம் டி ராஜ்
இசை அமைப்பாளர் சாம் டி ராஜ்

ஆனால் இசை மற்றும் வரிகள் என  இரண்டு ஏரியாக்களிலும் இருக்கிற குறும்பு, ரசனை, சுவாரஸ்யம் எல்லாம் சேர்ந்து பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டி,  ஹிட் பாடல் ஆக்கி விட்டது

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →