வடசென்னை @ விமர்சனம்

வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துக் கதாநாயகனான நடிக்க, அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர்,

ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி இருக்கும் படம் வட சென்னை. கலீஜா ? கெத்தா ? பார்க்கலாம் . 

எம்ஜி ஆர் இறந்து போன 1987 ஆம் ஆண்டு படம் துவங்குகிறது . (ஆனால் எண்பதுகளின் மத்திய கால கட்டம் சம்மந்தப்பட்ட ஒரு ஃபிளாஷ்பேக்கும் படத்தில் உண்டு )
 
ஒரு நம்பிக்கை துரோக கொலையை  செய்யும் ( பவன்  உட்பட) , செந்தில் (கிஷோர்) , குணா (சமுத்திரக் கனி) தம்பி (டேனியல் பாலாஜி)என்ற நால்வரில், 
 
செந்தில்-  குணா இருவரும் ரவுடிகளாக தாதாக்களாக வளர்வதோடு ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்கின்றனர். 
அடிக்கடி ஜெயிலுக்கு சென்று மாதக் கணக்கில் அங்கே தங்கி ஆளுக்கொரு  தனி ராஜ்யத்தையே நடத்துகின்றனர் .
 
கடத்தல் கொலை என பெரும்பணம் புரள்கிறது . போலீசில் இவர்கள் இருவருக்கும் தனித்தனி உடந்தைகளும் உண்டு.
 
இருவரும் சாகட்டும் என்று காத்துக் கிடப்போரும்  உண்டு 
 
கேரம் போர்டில் திறமையும் ஆர்வமும் கொண்டு முன்னேறி ஜெயித்து , மத்திய அரசு வேலை வாங்கி அப்படியே அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள நினைக்கும், 
 
குடிசை வாழ் இளைஞன் ஒருவனுக்கு (தனுஷ்) , ஒரு திருட்டு விவகாரத்தின் மூலம் பரிச்சயமாகும் பெண்ணோடு (ஐஸ்வர்யா ராஜேஷ்) காதல். 
 
அந்த காதல்,  ஒரு முத்தத்தில் சற்றே மெய் மறக்கும் நேரத்தில் பலரும் பார்த்து விட, கிண்டலுக்கு ஆளாகின்றனர் .
ஒரு ரவுடி அந்தப் பெண்ணை தொடர்ந்து கிண்டல் கேலி செய்ய திட்டமிட, அவனுக்கும் நாயகனுக்கும் நடந்த சண்டையில், 
 
அவனை நாயகன் குத்திக் கொல்கிறான் . ஜெயிலுக்கு வருகிறான். ஜெயிலில் குணாவின் ஆட்களால் வெறுக்கப்பட்டு செந்திலின் ஆளாக மாறுகிறான் . 
 
அரசியலில் வளர நினைக்கும் செந்தில்,  குணாவை போட்டுத் தள்ள முடிவு செய்கிறான் . எனவே முந்திக் கொண்டு  செந்திலை போட்டுத்தள்ள குணா முடிவு செய்கிறான் . 
 
அந்த முயற்சியில் செந்திலை போட முடியாத நிலையில் ஓர் எதிர்பாராத திருப்பம் . செந்தில் தாக்கப்பட்டு கை கால் இழுத்துக் கொள்கிறது . 
 
நாயகனுக்கும் காதலிக்கும் திருமணம் ஆகிறது . 
இந்த நேரத்தில்  கடற்கரையில் இருந்து மீனவர்களை அப்புறப்படுத்தி ஒரு மல்டி நேஷனல் கம்பெனிக்கு தாரை வார்க்க முடிவு செய்கிறது அரசு  .
 
அதற்காக குணாவும் செந்திலும் பணத்துக்காக  பகையை மறந்து ஒன்று சேர்ந்து மக்களுக்கு எதிராக  செயல்படுகின்றனர் . 
 
அதை நாயகன் எதிர்க்கிறான் . இந்த இடத்தில்,  1980களின் மத்தியில் போப் ஆண்டவர் வருகையை காரணம் காட்டி மீனவ மக்களை அப்புறப்படுத்த அரசு முயன்றதையும் ,
 
அதற்காக போராடிய ராஜன் (அமீர்) துரோகமாக  செந்தில் , குணா மற்றும் இருவரால்  கொல்லப்பட்ட கதை (படத்தின் முதல் காட்சி) விளக்கப்படுகிறது 
 
ராஜனின் மனைவி ( ஆண்ட்ரியா).  இப்போது அவள்  குணாவின் மனைவியாக இருப்பது சொல்லப்படுகிறது . 
ராஜனின் சமூக அக்கறைப் பார்வையில் நாயகன் செயல்பட, இதுவரை பிரிந்து நின்று அடித்துக் கொண்ட செந்தில் குணா இருவரும் சேர்ந்து நாயகனுக்கு எதிராக களம் இறங்க , 
 
தற்காலிகமான நாயகன் மனைவியோடு வெளியூருக்கு கிளம்ப , வடசென்னை முதல் பாகம் முடிகிறது .
 
இரண்டாம் பாகம் இன்னும் ஆறு மாதத்துக்குள்  வரும் . மூன்றாம் பாகமும் உண்டு . 
 
சபாஷ் வெற்றி மாறன் !
 
1980 களின் மத்தியில் துவங்கி,  வட சென்னைப் பகுதியை பூர்வீகமாக உரிமைப்பட்ட நிலமாகக் கொண்ட  அந்த மக்களை விரட்ட ,
 
பல்வேறு பணக்கார நிறுவனங்களும் அந்நிய நிறுவனங்களும் முயல்வதையும்  அதற்கு துணை போகும் பல்வேறு அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளையும் ,
மக்களின் வாழ்நிலை , சூழ்நிலைகளையும் அரசியல் மாற்றங்களால் அவர்களுக்கு ஏற்படும் பாதை மாற்றங்களையும் , 
 
 தூசும் துப்புமாக வியர்வையும் கண்ணீருமாக  ரத்தம் சதையுமாக சொல்லும் வகையில் வெற்றி மாறன் அமைத்து இருக்கும் முரட்டு திரைக்கதையும் ,
 
அதற்கு இணையாக அவர் கொடுத்திருக்கும் படமாக்கலும் பிரமிக்க வைக்கிறது . 
 
எம் ஜி ஆர் இறந்த போது கடைகளை உடைத்து பொருட்களை பலரும் தூக்கிக் கொண்டு  போனது , பலரும் எம்ஜி ஆருக்குப் பிறகு ஜானகி அணி பக்கம் நின்று ஏமாந்தது,
 
எம் ஜி ஆர் இறுதி ஊர்வல வண்டியில் இருந்து ஜெயலலிதா தள்ளி விடப்பட்டது , ஜெயலலிதாவின் வளர்ச்சி
(ஜெயலலிதாவை உருவாக திருநாவுக்கரசு எவ்வளவு முக்கிய பின்புலமாக இருந்தார் என்பதை  ஞாபகப்படுத்தி திருநாவுகரசரின் தூக்கத்தைக் கெடுத்து விட்டார் வெற்றி மாறன் .
வடசென்னையை பார்த்தால் திருநாவுகரசருக்கு வடை போச்சே என்றே எண்ணத்தில் துக்கம் தொண்டையை அடைக்கலாம்)என்று, 
 
ஒரு பக்கம் வெகு ஜன ஈர்ப்பு அரசியலை பேசும் திரைக்கதை , இன்னொரு பக்கம் இத்தனை வருடத்தில் வட சென்னையில் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்களையும் காட்டுகிறது , 
 
அங்கே உள்ள மக்கள் பலரிடம் சில்லறைக் குற்றங்கள் இருந்தாலும் அவர்களின் எளிமை, அன்பு , மனிதாபிமானம் , யாதர்த்தம், உண்மை ,கெட்ட வார்த்தைகள் பேசும் குணம்….
 
எனினும் மக்களின் நன்மைக்காக  உழைக்கும் நிஜமான-  ஆனால் அங்கீகரிக்கப்படாத ஹீரோக்கள் அங்கு உருவாகிக் கொண்டே இருப்பதை சொல்லும் விதம் அற்புதம் . படம் துவங்கிய  கால் மணி நேரத்துக்குள் நாம் படம் பார்க்கவில்லை . நிஜ நிகழ்வுகளில் நாமும் ஒரு பார்வையாளராக இருக்கிறோம், 
 
-என்ற உணர்வை தந்து விடுகிறது படம் . இரண்டே முக்கால் மணி நேரம் அவ்வளவு சுவாரஸ்யமாக போகிறது. 
 
அந்த இடைவேளை திருப்பம் யாரும் எதிர்பாராத ஒன்று .
அதே நேரம் அடுத்து வரும் சில விசயங்களை யூகிக்க முடிகிறது என்றாலும் அது நடக்கும்போது நாமும் ஏதோ, 
 
எதிர்பாராத காட்சியை எதிர்கொள்வது போலவே ரசிக்கிறோம் பாருங்கள் , அங்கேதான் பட்டொளி வீசிப் பறக்கிறது வெற்றி மாறனின் டைரக்சன் ! அருமை ! சிறப்பு . 
 
இடைவேளை வரை எதற்கு இந்தப் படம் என்று திரைக்கதை ரீதியாக சலிப்பை ஏற்படுத்தும் படம் இரண்டாம் பாதியில் விஸ்வரூபம் எடுக்கிறது . 
 
அமீர் நடித்திருக்கும் ராஜன் கதாபாத்திரத்தை அரசியலோடு சேர்த்து புது வண்ணம் கொடுத்தது வெற்றி மாறனின் திரைக்கதை அறிவின் சிறப்பு அம்சம் . பாராட்டுகள் 
 
பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி கதாபாத்திரதத்கை நினைவு படுத்துகிறது ஆண்ட்ரியா கதாபாத்திரம் . 
 
அப்படி ஒரு பிரம்மாண்ட நாவலை ஒரேமுட்டாக படித்து முடித்த உணர்வு படம் முடிந்த பிறகு ஏற்படுகிறது . சின்னச் சின்ன விஷயங்கள் ரசனையாக ஈர்க்கின்றன . 
 
ராஜன் இறந்து போது அவன் முகத்தில் குளிர்கண்ணாடி அணிவிப்பது சிறுசாக எழுதப்பட்ட கனமான கவிதை போன்ற காட்சி . 
 
பல்வேறு கெட்டப் அதற்குரிய வயது அதற்குரிய பக்குவம் என்று நடிப்பில் அசத்தி இருக்கிறார் தனுஷ் 
அமீர் ராஜனாக வாழ்ந்து விட்டார் . சமுத்திரக் கனி மிக சிறப்பு . இன்னும் பேச்சில் கன்னட வாசனையை தவிர்க்க முடியாதது தவிர கிஷோரும் சிறப்பு . 
 
மிக நுட்பமான கேரக்டரில் அசத்தி இருக்கிறார் டேனியல் பாலாஜி . 
 
ஆண்ட்ரியா நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ஈர்க்கிறார் . 
ஐஸ்வர்யா ராஜேஷ் ஒகே .
 
செந்திலின் (கிஷோர்) மனைவியாக வரும் பெண் .. முகம் தோற்றம், பேச்சு … அடேயப்பா ! நடிப்பது போலவே தெரியவில்லை . நிஜமாக அந்த கேரக்டராகவே இருக்கிறார் .
சந்தோஷ் நாராயண்  இசை படத்தின் உணர்வுக் கூட்டலுக்கு உதவுகிறது . வேல்ராஜின் ஒளிப்பதிவு திரைக்குள் நம்மையும் ஒரு நபராக உலவ விடுகிறது . 
 
இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் படத்தை தொய்வாகாமல் கொண்டு போவதில் ஜி பி வெங்கடேஷின் படத்தொகுப்பு பெரும்பங்கு வகிக்கிறது . 
 
வட சென்னை … தவற விடக் கூடாத திரை அனுபவம் !
 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
**************************************
வெற்றி மாறன் , தனுஷ், அமீர் , ஆண்ட்ரியா , டேனியல் பாலாஜி செந்திலின் மனைவியாக நடித்திருக்கும் பெண் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *