பீப்புள் மீடியா ஃபேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரிக்க, நட்டியின் இணை தயாரிப்பில் சந்தானம் , மேகா ஆகாஷ், எம் எஸ் பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் , நிழல்கள் ரவி, நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கி இருக்கும் படம் வடக்குப்பட்டி ராமசாமி . இசை சான் ரோல்டன் . கார்த்திக் யோகி இதற்கு முன்பு டிக்கி லோனா படத்தை இயக்கியவர் .
வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியான நிலையில் அதில் “சாமியே இல்லன்னு சொல்லி ஊருக்குள்ள சுத்திகிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமிதானே நீ ?” என்ற வசனத்துக்கு ( இந்த வசனத்திலேயே லாஜிக் இல்லை என்பது வேறு விஷயம் ) சந்தானம், ” நான் அந்த ராமசாமி இல்ல ” என்று சொல்லும் பதில் ( ‘அந்த’ என்ற அந்த வார்த்தையில் ஒரு எக்ஸ்ட்ரா அழுத்தம் !!!) பெரியாரை விமர்சிப்பதாக கண்டிக்கப்பட்டது .
அதுவும் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவதால் அந்த நிறுவனமும் கண்டிக்கப்பட்டது
தனது எக்ஸ் தளத்தில் அந்த வசனம் வரும் டிரைலரைப் பதிவிட்டு இருந்த சந்தானம், சர்ச்சைக்குப் பிறகு அதை நீக்கி விட்டார் .
இந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கான சந்திப்பில் படத்தின் இயக்குனரும் இணை தயாரிப்பாளர் நட்டியும் கலந்து கொண்டு பேசினர்
“1970 கால கட்டத்தில் நடக்கும் கதை இது . மெட்ராஸ் ஐ என்ற நோய் சென்னையில் முதன் முதலாகப் பரவிய கால கட்டம் அது . அது அப்போது ஒரு கிராமத்தில் பரவினால் என்ன நடக்கும் என்ற கற்பனையில் உருவாக்கப்பட்ட படம் இது . (அதற்கேற்ப ‘ கண்ணும் கண்ணும் கலந்து என்ற பழைய பாடலை பொருத்தமாக இணைத்து ரசிக்க வைக்கிறார்கள் )
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறோம் . கவுண்டமணியும் செந்திலும் ஒரு படத்தில் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி காமடி பிரபலம் (படம் உத்தம ராசா) . அதையே படத்துக்குப் பெயராக வைத்தோம்
இதில் சந்தானம் கிராமத்து நபராக வருகிறார் . படத்தில் இடம் பெரும் எல்லா நடிகர்களுக்கும் நல்ல கதாபாத்திரம் இருக்கிறது . படத்தில் நிழல்கள் ரவி உட்பட பல கதாபாத்திரங்களுக்கும் நல்ல ட்விஸ்ட் இருக்கிறது
ஒரே ஷெட்யூலில் அறுபத்தைந்து நாட்களில் படத்தை முடித்தோம் .
மற்றபடி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. அரசியல் நோக்கம் இல்லை. பொழுதுபோக்குதான் எங்கள் நோக்கம் .
இந்தப் படத்தில் பெரியார் அவமதிக்கப்படவில்லை. அது படம் பார்க்கும்போது புரியும் .
சந்தானம் தான் போட்ட பதிவு பற்றி ஆடியோ வெளியீட்டு விழாவில் பதில் சொல்வார் ” என்றார்கள்
எல்லாம் சரி கார்த்திக் யோகி .. இந்தப் படத்தின் டிரைலரில் டிக்கி லோனா படத்தின் பெயரை டிக்கி லூனா (DIKKILOONA) என்று போட்டது ஏன் ? அதிலும் எதாவது ட்விஸ்ட்?
