
தனது கணவர் தனுஷுக்கு ஸ்ருதிஹாசனை ஜோடியாக ஆக்கி , ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய முதல் படமான 3, வியாபார ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஒரு நல்ல இயக்குனர் என்ற பெயரை ஐஸ்வர்யாவுக்கு வாங்கித் தந்தது.
அந்த சந்தோஷத்தில் கவுதம் கார்த்திக் பிரியா ஆனந்தை சோடி போட வைத்து ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிபில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி இருக்கும் படம் வை ராஜா வை .
ஒரு காலத்தில் ரஜினிகாந்த், இளையராஜா , வைரமுத்து என்பது ஒரு பெரிய வெற்றிக் கூட்டணி . இந்த வை ராஜா வை படத்தில் முறையே அவர்களது வாரிசுகளான ஐஸ்வர்யா, யுவன் ஷங்கர் ராஜா, மதன் கார்க்கி மூவரும் பணியாற்றி இருக்க, ரஜினிகாந்த், இளையராஜா , வைரமுத்து மூவரும் நிகழ்ச்சிக்கு நேரில்…..
வராமல், வீடியோ மூலம் வாழ்த்தினார்கள் .
மதன் கார்க்கி, ஐஸ்வர்யா தனுஷ் , கல்பாத்தி அகோரத்தின் மகளான இன்னொரு ஐஸ்வர்யா மூவரும் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, பாலா, எஸ் ஜே சூர்யா , கே வி ஆனந்த முன்னிலையில் பாடல்கள் வெளியிடப்பட்டன
இயக்குனர் பாலா பேசும்போது “படத்தோட பூஜையின் போதும் இந்த விழா நடக்கும் இந்த தினத்திலும் நான் என் பட வேலைகளில் ரொம்ப பிசி . ஆனா நான் வந்தே ஆகணும்னு அடம் புடிச்சே காரியம் சாதிக்குது ஐஸ்வர்யா . ரஜினி மகளா இருந்தாலும் இன்னொரு தயாரிப்பாளருக்கு கதை சொல்லி டைரக்ட் பண்றது பாராட்ட வேண்டிய விசயம் ” என்றார் .
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிருத் , யுவன் சங்கர் ராஜாவின் இசையை ஈகோ இல்லாமல் பாராட்டி பேசியதும் கூட பாராட்ட வேண்டிய விசயம்தான் .