ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்க, கவுதம் கார்த்திக்- பிரியா ஆனந்த் இணை நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி இருக்கும் படம் வை ராஜா வை . பாரு ராஜா பாரு என்று சொல்லும்படி இருக்கிறதா படம்? படியுங்கள்
அன்பான அப்பா (இயக்குனர் வசந்த் ), அம்மா (ஸ்ரீ ரஞ்சனி ), அக்கா (காயத்ரி ரகுராம்), காதலி (பிரியா ஆனந்த் ), நண்பன் (எதிர் நீச்சல் சதீஷ் ), அந்த நண்பன் மூலம் ஒரு ஐ டி கம்பெனியில் வேலை என்று….. எந்தக் குறையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞன் கார்த்திக்குக்கு (கவுதம் கார்த்திக் ) நடக்கப் போவதை முன்பே உணரும் உள்ளுணர்வு என்கிற ஈ எஸ் பி சக்தி, சிறு வயது முதலே இருக்கிறது .
அதனால் பல சங்கடங்கள் அவனுக்கு வர, ஒரு நிலையில் வலுவிழந்த அந்த சக்தி , அவனுக்கும் அவன் காதலிக்கும் திருமணம் நிச்சயம் ஆகும் சூழ்நிலையில் மீண்டும் வலுவடைகிறது .
அலுவலகம் தரும் சம்பளத்துக்கும் மேலே வசதியாக வாழும் பாண்டா என்பவன் ( விவேக்) கார்த்திக்கின் சக்தியை உணர்ந்து முக்கியத்துவம் கொடுத்து அவனை நெருங்குகிறான் . காரணம் , கிரிக்கெட் சூதாட்டத்தில் பணம் கட்டும் வழக்கம் உள்ள பாண்டா , கார்த்திக்கின் சக்தியைப் பயன்படுத்தி கிரிக்கெட் ஆட்டத்தின் போக்கு, வெற்றி , ரன்கள் , விக்கட் போன்றவற்றில் கார்த்திக் சொல்வதை வைத்து பணம் கட்டி காசை அள்ளுகிறான்.
அதனால் பாதிக்கப்படுபவனும் சூதாட்டம் நடத்துபவனுமான ராந்தை என்ற தாதா (டேனியல் பாலாஜி), தானும் கார்த்திக்கை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க விரும்புகிறான் . கார்த்திக் அதை விரும்பாத நிலையில் ராந்தைக்கும் கார்த்திக்குக்கும் முட்டிக் கொள்கிறது .
கார்த்திக்கின் காதலியை கடத்தும் ராந்தை , அதன் மூலம் கார்த்திக்கை வளைத்து…. கோவா கடலில் கப்பலில் நடை பெறும் பெரும்பணம் புழங்குகிற – அதே நேரம் உயிராபத்து உள்ள – ஒரு சூதாட்டத்தில் ஆட வைக்கிறான் . ஒரு நிலையில் ராந்தையை அதில் சிக்க வைக்கும் கார்த்திக் , அங்கிருந்து தப்பிக்கிறான் .
அங்கே அடி உதை பட்டு தப்பி கொலை வெறியோடு சென்னை வரும் ராந்தைக்கும் கார்த்திக்குக்கும் அதன் பிறகு நடந்தது என்ன என்பதே இந்த வை ராஜா வை .
3 படத்தின் மூலம் தான் ஒரு நல்ல இயக்குனர் என்பதை நிரூபித்த ஐஸ்வர்யா தனுஷ் இந்தப் படத்திலும் இயக்கிய வகையில் கவனம் கவர்கிறார் .
படத்தின் மிகப்பெரிய பலம் வேல்ராஜின் ஒளிப்பதிவு . அதுவும் ரிச்சான அந்த கோவா கப்பலை உள்ளும் வெளியும் படம் பிடித்திருக்கும் விதம் அபாரம் .
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான் . ஆனால் பின்னணி இசையில் பின்னி எடுக்கிறார் .
இரண்டு மணி நேரத்துக்குள் படத்தை நறுக்குத் தெறிக்க நறுக்கிக் கொடுத்து இருக்கிறார் படத் தொகுப்பாளர் வி டி விஜயன் .
பாடல் வரிகளில் சும்மா ஒப்பேற்ற ஆரம்பித்திருக்கிறார் மதன் கார்க்கி . (ஐஸ்வர்யா தனுஷுடன் சேர்ந்து வசனத்தையும் எழுதி இருக்கிறார் கார்க்கி . வசனங்கள் பெட்டர் )
அப்பாவின் மேனரிசங்களும் உணர்ச்சி பூர்வமான அந்தக் குரலும் வர ஆரம்பித்து விட்டது கவுதமுக்கு. அதுவே பெரிய பலமாக இருக்கிறது அவருக்கு.
பிரியா ஆனந்த் வழக்கமான காஸ்மாபாலிட்டன் கதாநாயகி . கோவாவில் சூதாடும் முறை பற்றிக் கற்றுக் கொடுக்கும் பெண்ணாக வரும் டாப்சி இன்னொரு இளமை விருந்து .
விவேக் காமெடி மற்றும் சீரியஸ் என்று இரண்டு ஏரியாவிலும் கலக்க , சதீஷும் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.
டேனியல் பாலாஜி வழக்கம் போல மிரட்டுகிறார் .
கவுதமின் அப்பாவாக வெகு இயல்பாக சிறப்பாக ஸ்மார்ட் ஆக நடித்துள்ளார் இயக்குனர் வசந்த் சாய் . அருமை .
ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கும் எஸ் ஜெ சூர்யாவும் குட்! குட் !!
ஆங்கிலப் படமான 21 படத்தின் வடிவம் உள்ளே இருந்தாலும் , படத்தில் இருக்கிற விஷயம் நன்றாகவே இருக்கிறது . ஆனால் இருக்கிற விஷயம் போதுமா? மொத்த படமே இரண்டு மணி நேரம்தான் . அதற்குள் காட்சிகளும் வசனமும் ரிபீட் ஆகின்றன .
பல காட்சிகளில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி , பின்னர் அதை சாதரணமாக முடிக்கின்றனர்.
ஸ்ரீ ரஞ்சனி தமிழுக்கு பதில், ஏதோ பழங்குடி பாஷை பேசி இருக்கிறார். என்னாச்சு மா ? கோவாவில் இருந்து ராந்தை தப்பி வந்த பிறகு என்னமோ பெரிதாக நடக்கப் போகிறது என்று பார்த்தால்…. வெத்தல பத்தல .
கடைசிக் காட்சியில் கலக்கலாக தனுஷ் என்ட்ரி கொடுப்பது ரகளை. எனினும் இடைவேளையில் ஏற்படும் எதிர்பார்ப்புக்கு ஏற்ற இரண்டாம் பாகம் அமையாதது ஏமாற்றமே !
ஆயினும் என்ன ….? ஸ்டைலாக , செழுமையாக , படமாக்கப்பட்டு இருக்கும் விதத்திலும் திரைக்கதை வேகத்திலும் பாராட்ட வைக்கிறது இந்தப் படம் .
வை ராஜா வை ….. வைக்கலாம் ராஜா .