ஆர் கே தயாரித்து இயக்க ,மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி ஆகிய நட்சத்திரங்களை வைத்து இயக்கிய ஸ்டார் டைரக்டர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் வந்த ‘எல்லாம் அவன் செயல்’ படத்தை அடுத்து, மீண்டும் ஆர் கே – ஷாஜி கைலாஷ் இணைந்து உருவாக்கி இருக்கும் என் வழி தனி வழி படம் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது .
அதே நேரம் சூட்டோடு சூடாக தனது மக்கள் பாசறை சார்பாக ஆர்.கே. தயாரித்து நாயகனாகவும் நடிக்க மீண்டும் ஷாஜி கைலாஷின் இயக்கத்தில் துவங்கி இருக்கும் அடுத்த படம் வைகை எக்ஸ்பிரஸ் .
சென்னையில் இருந்து மதுரை செல்லும் ரயிலில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாகும் இந்தப் படத்தின் முழு படப்பிடிப்புக் களமும் ரயில்தானாம் .
ரயிலில் ஒரு தீவிரவாத கும்பல் போவதாக கிடைக்கும் தகவலை அடுத்து காவல் துறை அதிகாரி அதே ரயிலில் பயணிக்க , அங்கே இருப்பது தீவிரவாதக் கும்பல் மட்டுமல்ல , ஒரு சைக்கோவும் என்று படத்தின் கதை போகிறது.
“மக்கள் ஓட்டுக்கு காசு வாங்குவதால் எப்படி தங்கள் உரிமைகளை இழக்கிறார்கள் என்ற விசயமும் இந்தப் படத்தில் பேசப்படுகிறது ” என்கிறார் ஆர் கே , எக்ஸ்குளூசிவ் தகவலாக .
படத்தில் ஒரு தீவிரவாதியாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார் இயக்குனர் ஆர் கே செல்வமணி .நீதுசந்திரா பிரதான நாயகியாக நடிக்க, இனியா, சுஜா வாருணி, கோமல் சர்மா என்று திசைக்கொன்றாக நான்கு கதாநாயகிகள் .
படத்தின் தொடக்கவிழா நிகழ்ச்சியில் நடிகர் ஆர்.கே. பேசும்போது “நீங்களும் ஷாஜி கைலாசும் சேர்ந்து எத்தனை படம் தொடர்ந்து செய்வீர்கள்/’ என்று கேட்கிறார்கள். நல்லவர்களுடன் இணைந்திருப்பது நல்லதுதான். டைரக்டர் இந்தக் கதை பற்றிக் கூறும் போது ‘இது எல்லாம் அவன் செயல் படத்தைப் போல 10 மடங்கு சிறப்பாக இருக்கும். உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்’ என்றார். அப்போது நான் நினைத்தேன். நாம் விரும்புகிறவரை விட நம்மை விரும்புகிறவரை ஏற்றுக் கொள்வதுதான் நல்ல காதலுக்கு நல்லது. அதுபோல்தான் சினிமாவுக்கும் .எனவே இந்தப் படக்கதை எனக்காக உருவானதால் ஏற்றுக் கொண்டேன்..மூன்றே மாதத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.”என்றார்.
“படத்தின் கதையை வசனகர்த்தா பிரபாகர் ஒரு மணி நேரம் சொன்னார். சொல்லி முடித்தபோது பத்து நிமிடத்தில் சொன்ன மாதிரி இருந்தது. அவ்வளவு விறுவிறுப்பாக இருந்தது. இது அனைவருக்கும் பிடித்த த்ரில்லராக இருக்கும்.”என்றார் நாசர் .
நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசும்போது ” காமெடியனான என்னை ‘புலிவேஷம்’ படத்தில் என்னை வில்லனாக்கியவர் ஆர்.கே.தான். இந்தப் படத்தில் நடிக்கிறீர்களா?” என்றார். உடனே ஒப்புக் கொண்டேன்.”என்றார்.
ரத்தினச் சுருக்கமாக, “படக்குழுவினர் உழைக்கத் தயாராக இருக்கிறார்கள்.படம் எல்லோருக்கும் பிடிக்கும்படி இருக்கும் ” என்றார் இயக்குனர் ஷாஜி கைலாஷ் .
நடிகை சுஜா வாருணி “ஷாஜி கைலாஸ் சாரின் மலையாளப் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். தமிழ்ப் படத்திலேயே வாய்ப்பு கிடைத்து விட்டது. ஆர்.கே. சாருக்கும் ஷாஜி சாருக்கும் நன்றி” என்றார்.
நடிகை கோமல் சர்மா பேசும் போது ”இன்று பிரதோஷம். நாளை சிவராத்திரி. நல்ல நாளில் தொடங்குகிறது இப்படம். வாழ்த்துக்கள்” என்று ஆன்மீகித்தார்.
“பத்து வருடத்துக்கு முன் ஷாஜி சார் ‘விஷ்ணு’ என்கிற தெலுங்குப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். பிறகு இப்போது இதில் நடிக்கிறேன். அருமையான கதை. எனக்குப் பெயர் சொல்லும் படியான வாய்ப்பு ” — இது நீது சந்திரா
வசனகர்த்தா பிரபாகர் தனது பேச்சில் “‘போக்கிரி’ படத்துக்குப் பிறகு பிற மொழிகளுக்குப் போய் விட்டேன். ‘எல்லாம் அவன் செயல் ‘ படத்தில் எனக்கு நல்ல வாய்ப்பு கொடுத்து அடையாளம் கொடுத்தார்கள். ஷாஜி சார் இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த வாஞ்சிநாதன் படப்பிடிப்பில்தான் ஷாஜி சாரை முதன் முதலில் சந்தித்தேன். இந்த வைகை எக்ஸ்பிரஸ் திரைக்கதையை பார்க்கும்போது , இப்போது கேப்டனின் இடத்தை நோக்கிய பயணமாக ஆர்.கே உருவாகி வருவதாக நினைக்கிறேன்.” என்றார்.
ஒகே .. ஆர் கே !