பே வியூ பிலிம்ஸ் சார்பில் போனி கபூர் ஸீ ஸ்டுடியோசுடன் இணைந்து தயாரிக்க, அஜித் குமார், ஹூமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொன்டா, சுமித்ரா, செல்வா, ஜி எம் சுந்தர் நடிப்பில் ஹெச் வினோத் எழுதி இயக்கி இருக்கும் படம் வலிமை
தமிழ் சினிமா பலமுறை பார்த்த , பைக்கில் வந்து செயின் அறுப்பு , போதைப் பொருள் கடத்தல் விற்பனை, அதன் விளைவாக ஏற்படும் பகை , கொலை என்று பயணிக்கும் கதைதான் .
மேற்சொன்ன பிரச்னைகளால் மாநகரமே பெரும் இழப்புகளை சந்திக்க, அதை எண்ணி வருந்தும் கமிஷனர் ( செல்வா) ஒரு நல்ல போலீஸ் அதிகாரிக்காக தவம் இருக்க, மதுரை சித்திரைத் திருவிழா பிரம்மாண்டத்தில் அறிமுகம் ஆகிறார் நாயகன் அர்ஜுன்( அஜித்குமார்)

அம்மா, குடிகார அண்ணன், பாவம் பட்ட அண்ணி, படித்த படிப்புக்கு வேலை கிடைக்காத தம்பி என்ற குடும்பப் பின்னணியில் இருக்கும் அர்ஜுன் குற்றவாளிகளை வேட்டையாட களம் இறங்க , பிரச்னை வீட்டுக்குள்ளேயே வருகிறது . காவல் அதிகாரி அர்ஜுன் எப்படி சமாளித்து போதைப் பொருள் கும்பலையும் வேட்டையாடுகிறார் என்பதே படம்
ஆனால் இதை பிரம்மாண்டமான மேக்கிங்கில் திரைக்கதையில் சில பல நல்ல காட்சிகளோடு கொடுத்து அசத்தி இருக்கிறார் வினோத் .
.பணத்தை தண்ணீராக அல்ல அல்ல காற்றாக செலவழித்து இருக்கிறார்கள்.
அஜித் தனக்கே உரிய பாணியில் வழக்கம் போல நடித்து தனது ரசிகர்களை கவர்கிறார் . . ஹுமா குரேஷி அசத்தல் . மற்றவர்களும் ஒகே .

குற்றவாளிகளை தண்டித்து மேலும் குற்றம் செய்யும் சூழல் ஏற்படுத்துவதை விட மன்னித்து திருந்தி வாழ வழி சொல்லும் எம்ஜிஆரின் பல்லாண்டு வாழ்க பாணியில் வரும் காட்சிகள் அருமை .
பைக் ரேஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் வியக்க வைக்கின்றன .
யுவன் சங்கர் ராஜாவின் இசை, நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு , விஜய் வேணு குட்டியின் படத் தொகுப்பு, கதிரின் கலை இயக்கம் யாவும் படத்துக்குப் பெரும்பலம்
எனினும் பெரும் செலவில் எடுக்கபட்ட ஆக்ஷன் காட்சிகளை விட
”போலேசாரே ஜெயிலில் குற்றவாளிகளுக்கு பிளாக்கில் போன் விற்பனை செய்து அவர்கள் பேசுவதை வைத்து புதிய குற்றங்களை கண்டு பிடிக்கலாம்

குற்றவாளியை ஜெயிலில் போட்டால் அவன் ஜாமீன் எடுக்க காசு கடன் வாங்கி விட்டு பின் அதை அடைக்க குற்றங்களை செய்வான். மாறாக மன்னித்து தொழில் செய்ய உதவி செய்தால் குற்றங்கள் குறையும் என்ற ரீதியில்
உட்கார்ந்து அக்கறையோடு எழுதப்பட்ட காட்சிகளே மனத்தைக் கவர்கின்றன . அம்மா செண்டிமெண்ட் கிளைமாக்ஸ் ஏரியாவில் கனம் சேர்க்கிறது
பிரம்மாண்டம் என்பது எழுத்துதான் என்பதை வலிமையோடு நிரூபிக்கிறது வலிமை .