வலியவன் @ விமர்சனம்

valiyavan

எஸ் கே ஸ்டுடியோஸ் சார்பில் கே.என். சம்பத் தயாரிக்க, ஜெய் – ஆண்ட்ரியா நடிப்பில்,  எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய எம். சரவணன் இயக்கி இருக்கும் படம் வலியவன் .

இந்த வலியவன் வலிமையனவனா?  வலியை தருபவனா? பார்க்கலாம்.

ஒரே ஊரில் இருந்தும் அப்பா அம்மாவுடன் இருக்காமல் நண்பர்களுடன் ரூம் எடுத்து தங்கி இருக்கும் வினோத்தை (ஜெய்),  சென்னை அண்ணாசாலை அண்ணா சிலை சப்வேயில் பார்த்து,  அதிரடியாய்   ஐ லவ் யூ சொல்கிறாள் சுபிக்ஷா (ஆண்ட்ரியா) .

அந்த நொடி ஜஸ்ட் கடந்து விட்டாலும் அடுத்த  நாள் முதல் தினசரி அவளை தேடி அந்த சப் வேக்கு வருகிறான் வினோத்.  . அவன் இங்கே தேட , அதே நேரம் அவனை தேடி அவனது அலுவலகம் , தங்கி இருக்கும் அறைக்கு எல்லாம் போய் அவனை சுத்தலில் விட்டுவிட்டு , ஒரு நிலையில் அவனை சந்திக்கிறாள் சுபிக்ஷா .

valiyavan 1

அதற்குள் சுபிக்ஷா மீது   உண்மையான காதல் கொண்டு தவிக்கும் நிலைமைக்கு வினோத் வந்து விட , ”நான் சொல்லும் ஒருவனை அடித்தால்தா ன் உன்னை உண்மையாகவே காதலிப்பேன்” என்கிறாள் சுபிக்ஷா . அவள் அடிக்க சொல்லும் நபர்… ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை  பணத்துக்காக விட்டுக் கொடுத்து வெள்ளிப் பதக்கததோடு வந்திருக்கும் ஒரு மாபெரும் குத்துச் சண்டை வீரன் .

அவள் சொல்லும் நபர் யாரென்று தெரிந்த உடன் கொஞ்சமும் யோசிக்காமல் ஒத்துக் கொள்கிறான்  வினோத். காரணம் , இன்று அவன்  ஒரே ஊரில் இருந்தாலும் தாய் தந்தையுடன் வசிக்காமல் தனியாக வாழ்வதற்கும் சில அடித்தளமான குடும்ப உறவுகள் மீது எப்போதும் இருக்கவேண்டிய பாதுகாப்பு நம்பிக்கை சிதைவதற்கும் காரணம் , சுபிக்ஷா சொல்லும் அதே நபர்தான் .

இருபது வருட குத்துச் சண்டை அனுபவம் உள்ள அந்த மனிதனை வினோத் அடித்து வீழ்த்த முடிந்ததா ? ஆம் எனில் எப்படி? இல்லை எனில் ஏன்? என்பதே இந்த வலியவன்..

பொதுவாக பெண் கதாபாத்திரங்களை  அழகாக,  வலிமையாக,  ரசனையாக,  தனித்தன்மையுடன்,   டாமினேட்டிங் ஆக அமைப்பது இயக்குனர் சரவணனுக்கு மிகவும் பிடித்தமான விஷயம் . இதில் ஆண்ட்ரியாவுக்கு அந்த அதிர்ஷ்டம் . ஆண்ட்ரியாவை இவ்வளவு அழகாக, ஈர்ப்பாக,  அசத்தலாக , ‘ஹாட்’ ஆக,  சின்னச் சின்ன முகபாவனை விவரணைகளுடன் இதுவரை எந்தப் படத்திலும் பார்க்கவில்லை. அந்த அளவு ஆண்ட்ரியாவைக் கொண்டாடி இருக்கிறார் சரவணன் . அதற்கு மிக முக்கிய ஒத்துழைப்பை கொடுத்து இருக்கிறார்  உடை வடிவமைப்பாளர் சரளா விஜயகுமார் . மேக்கப்பும் ஒளிப்பதிவும் துணைத் துணைகள் !

valiyavan 4

சப்வேயில் வினோத்துக்கு கிடைக்கும் பிச்சைக்காரனின் லிப் கிஸ் , நீக்ரோவின் கோபம் இதற்கெல்லாம் பின்னர் பொருத்தமான காட்சிகளை காட்டுவதில் சரவணனின் திரைக்கதை சமர்த்து தெரிகிறது.

வசனத்திலும் படமாக்கலிலும் அசத்தி இருக்கிறார் இயக்குனர் சரவணன் . கிளைமாக்சுக்கான காரணத்தை அந்த ஸ்லோ மோஷன் ஷாட்டில் பின்னணிக் குரலில் சொல்லும் விதமும் விஷயமும் அபாரம் .

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்தை டாலடிக்க வைக்கிறது . ஒவ்வொரு பிரேமும் கண்களில் ஒத்திக் கொள்ளும்படி இருக்கிறது.

அடுத்து மனம் கவர்வது ராஜா மோகனின் கலை இயக்கம் . லக்ஷ்மி நாராயணனின் ஆடியோ கிராபி குத்துச் சண்டைக் காட்சிகளில் திகில் பிகில் ஊதுகிறது .

ஆனால் ஹீரோ ஜெய்?

valiyavan 2

ஒரு காட்சியைக் கூட உணர்ந்து நடிக்காமல் படம் முழுக்க எரிச்சலை ஏற்படுத்தி கடுப்படிக்கிறார் ஜெய். ஒரு காட்சி அரை காட்சியில் வருபவர்கள் கூட உற்சாகமாக நடித்து விட்டுப் போக, இவர் என்னவோ செத்தவன் கையில் வெத்தல பாக்கு கொடுத்தவன் மாதிரியே நிற்கிறார். படத்தின் மிகப்பெரிய பலவீனம் அவரே . அவருக்கு பதில் வேறு நல்ல நடிகர் நடித்திருந்தால் படம் சிறப்பாக வந்திருக்கும் .

உடல் வலிமை உள்ளவனின் ஒரு துளி நேரத் திமிரால் பிறப்பு முதல் இருப்பு வரை மன வலிமை தரும் உறவுகள் எப்படி நொறுங்குகின்றன என்ற கதைப் பகுதி, பிரம்மாதம் . ஆனால் அதை சொன்ன விதம்தான் பத்தல .

முதல் பாதியில் சும்மா கடமைக்கு கடந்து போகும் காட்சிகள் , வந்த காட்சியே மீண்டும் மீண்டும் வரும் ரிப்பிட்டேஷன்கள் , நகராமல் நிற்கும் கதை …..

 இவற்றில் வீணாக்கிய நேரத்தை  குறைத்து,  வினோத் சொல்லும் பிளாஷ்பேக் பாதிப்பை இன்னும் அழுத்தமாக விவரமாக மனதைத் தைக்கும்படி சொல்லி இருந்தால் , படம் வெகு ஜன வாழ்க்கையோடு சம்மந்தப்படுத்தப்பட்டு,  இன்னும் வரவேற்பை பெற்று இருக்கும் .

ஊறுகாயை சோறுபோல வைத்து சோற்றை ஊறுகாய் போல வைத்தால் எப்படி ?

எனினும் ஆண்ட்ரியா ரசிகர்களுக்கு வலியவன் மஸ்து காட்டுவான் .

வலியவன் .. எளியவன் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →