அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் லண்டனைச் சேர்ந்த ஒருவரும் சேர்ந்து ஒரு படம் தயாரித்தார்கள். அதற்கு லண்டனில் பல குறும்படங்களை இயக்கிய ஒருவரை இயக்குனராக போட்டார்கள் . அந்தப் படத்தை தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்கிறார்கள் .
அதிசயம்! ஆனால் உண்மை ! காரணம் அவர்கள் அனைவரும் தமிழர்கள் . அவர்கள் எடுத்து தமிழ்ப்படம் .
லக்ஷனா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ரவீந்திரனும் லண்டனைச் சேர்ந்த இமானுவேலும் தயாரிக்க ,
இங்கிலாந்தில் பல ஆங்கில மற்றும் தமிழ்க் குறும்படங்களை இயக்கிய என்.டி.நந்தா என்பவரின் எழுத்து , ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வல்ல தேசம் . வல்ல தேசம் என்றால் வலிமையான தேசம் என்று பொருள் .
கமல்ஹாசனின் அண்ணன் மகளான அனுஹாசன், நாசர் ஆகியோருடன் அமித் , டேவிட் முதலிய புதுமுகங்கள் நடித்து இருக்கும் இந்தப் படத்தின் இசையை, இசை மேதை எல் வைத்தியநாதனின் இளைய மகனும் இசையமைப்பாளர் எல்.வி.கணேசனின் தம்பியுமான எல்.வி .முத்துக் குமாரசாமி அமைத்திருக்கிறார் .
படத்தின் முக்கால்வாசி லண்டனிலேயே படமாக்கப்பட்டு உள்ளது.
படத்தில் சிம்பு ஒரு பாடல் பாடி இருக்கிறார் . சிம்பு இசையமைப்பாளரை எல் வி எம் என்றுதான் அழைப்பாராம். தகவல் உதவி அனு ஹாசன் (எதோ ஹெச் எம் வி மாதிரி இருக்கே எல் .வி.எம் ?)
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட பாரதிராஜா முன்னோட்டத்தை வெளியிட்டார் .
தமிழகத்தில் இருந்து லண்டன் சென்று செட்டில் ஆகும் இளம் கணவன் மனைவி ஒரு பெண் குழந்தை . இங்கிலாந்தில் உள்ள ஒரு சர்வதேச கடத்தல் கும்பல் , ஏதோ ஒரு வகையில் அந்த கும்பலை இந்த குடும்பம் இடற , அந்தக் குழந்தை கடத்தப் படுகிறது , குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியில் போலீசும் தோற்க ,
பொங்கி எழும் அந்தத் தாய் எப்படி குழந்தையை மீட்கிறாள் என்ற ரீதியில்தன் இந்தப் படத்தின் கதை இருக்கலாம் என்பது முன்னோட்டத்தைப் பார்க்கும்போது கிடைக்கும் ஊகம் .
காட்சிகளை மிக அழகாக ஹாலிவுட் படம் போலவே எடுத்து இருந்தார் இயக்குனர் நந்தா . டிரைலரில் வரும் ஆக்ஷன் , செண்டிமெண்ட் காட்சிகள் சிறப்பாக இருந்தன . ஒலிகளை பயன்படுத்தி இருக்கும் விதம் அருமை.
மகளை இழந்து வாடும் தாயின் சோகத்தை சொல்லும் பாடலும் ஒரு காதல் பாடலும் சிறப்பாக இருந்தது. ஆக்ஷன் காட்சிகளில் கம்பீரம் காட்டினார் அனு ஹாசன் .
25 ஆண்டுகளுக்குப் முன்பு வந்த இந்திரா படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் நாசரும் அனுவும் நடிக்கிறார்களாம் . “ரெண்டு பேருமே தோற்றத்தில் ரொம்ப மாறிட்டோம் ” என்றார் அனுஹாசன் .
“பனியிலும் மழையிலும் கஷ்டப்பட்டு படத்தை மிக சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ” என்று புகழ்ந்தார் தயாரிப்ப்பாளர் இம்மானுவேல்.
” நந்தா ஒரு திறமைசாலி . அவரது திறமை வெளிப்பட வேண்டும் என்பதால் இந்த வாய்ப்பைக் கொடுத்தேன் ” என்றார் இன்னொரு தயாரிப்பாளர் ரவீந்திரன்.
“படத்தை ஹாலிவுட் தரத்தில் எடுத்து இருக்கிறார் நந்தா ” என்று பாராட்டினார் இசையமைப்பாளர் எல் வி முத்துகுமாரசாமி. .
“நான் லண்டனில் இருந்து எடுத்துக் கொண்டு வந்த படத்தை, இங்கே உட்கார்ந்து பார்த்து ஹாலிவுட் தரத்தில் இசையமைத்துக் கொடுத்தார் எல் வி முத்துக்குமரசுவாமி ” என்று கொண்டாடிய இயக்குனர் நந்தா , தொடர்ந்து “நான் ஏகப்பட்ட காட்சிகளை எடுத்துக் கொண்டு வந்து கொட்டினேன் . வழக்கத்தை விட ஐந்து மடங்கு அதிகம். ஆனால் பொறுமையாக எல்லாவற்றையும் பார்த்து சிறப்பாக படத் தொகுப்பு செய்தார் தீபக் துவாரகநாத் ” என்று மகிழ்வாகக் குறிப்பிட்டார்.
“பின்னனி இசை அமைந்த பிறகு படம் வேறு உயரத்துக்குப் போனது ” என்றார் படத்தொகுப்பாளர் தீபக் துவாரகநாத் .
நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன்
” பொதுவாக பெண்களை முன்னிலைப்படுத்தி படங்கள் இப்போது வருவது இல்லை . முன்ன அதுமாதிரி பல படங்களை எங்க வாத்தியார் (கே.பாலச்சந்தர் ) எடுத்தார் . இப்போ குறைஞ்சு போச்சு . ஆனால் நந்தா இயக்கி இருக்கும் இந்தப் படம் ஒரு பெண் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டு இருப்பது சந்தோசம் .
டிரைலரில் சண்டைக்காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டு இருப்பது தெரிந்தது . படத்தின் இயக்குனர் நந்தாவோடு பேசிக் கொண்டு இருக்கும்போது சொன்னார்… மிகக் குறைவான யூனிட்டை வைத்து எடுக்கப்பட்ட படம் இது என்று .
தப்பில்லை . அதுதான் நாளைய சினிமா .
நாலாயிரம் பேர் வேலை செய்து படத்தை எடுத்து அதை நானூறு பேர் பார்ப்பதை விட, குறைவான ஆட்கள் பணியாற்றி படம் எடுத்து நிறைய பேரை பார்க்க வைப்பதுதான் முக்கியம் . இனி அது போன்ற படங்கள்தான் நிறைய வரும் .
இப்போது நான் நடித்துக் கொண்டு இருக்கும் தூங்காவனம் கூட அப்படி ஒரு படம்தான்.
இந்தப் படக் குழுவுக்கு என் வாழ்த்துகள் ” என்றார் .
பாரதிராஜா தனது பேச்சில்
“பொதுவாக நான் இது போன்ற விழாக்களுக்கு அதிகம் போவது கிடையாது. காரணம் அங்கே போய் நிறைய பொய் சொல்ல வேண்டி வரும் . இந்தப் படத்தின் இயக்குனர் நந்தா என் நண்பர் . அதற்காக வந்தேன் . இங்கே பொய் சொல்லத் தேவை இல்லை. படம் நன்றாக இருக்கிறது ” என்றார் .
வல்ல தேசம் வெற்றி தேசம் ஆகட்டும் !