லக்ஷனா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ரவீந்திரனும் லண்டனைச் சேர்ந்த இமானுவேலும் தயாரிக்க ,
இங்கிலாந்தில் பல ஆங்கில மற்றும் தமிழ்க் குறும்படங்களை இயக்கிய என்.டி.நந்தாவின் எழுத்து , ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வல்ல தேசம் .
படத்துக்கான காட்சிகளை மிக அழகாக ஹாலிவுட் படம் போலவே எடுத்து இருகிறார் இயக்குனர் நந்தா என்பது டிரைலரைப் பார்க்கும்போது தெரிகிறது . . டிரைலரில் வரும் ஆக்ஷன் , செண்டிமெண்ட் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன. ஒலிகளை பயன்படுத்தி இருக்கும் விதம் அருமை.
மகளை இழந்து வாடும் தாயின் சோகத்தை சொல்லும் பாடல் , ஒரு காதல் பாடல், சிம்பு பாடி இருக்கும் ஒரு புரமோஷன் பாடல் எல்லாம் சிறப்பாக இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு நடை பெற்ற இந்தப் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் ” சண்டைக் காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டு இருப்பது டிரைலரில் தெரிந்தது . படத்தின் இயக்குனர் நந்தாவோடு பேசிக் கொண்டு இருக்கும்போது சொன்னார்… மிகக் குறைவான யூனிட்டை வைத்து எடுக்கப்பட்ட படம் இது என்று .
தப்பில்லை . அதுதான் நாளைய சினிமா .
நாலாயிரம் பேர் வேலை செய்து படத்தை எடுத்து அதை நானூறு பேர் பார்ப்பதை விட, குறைவான ஆட்கள் பணியாற்றி படம் எடுத்து நிறைய பேரை பார்க்க வைப்பதுதான் முக்கியம் . இனி அது போன்ற படங்கள்தான் நிறைய வரும் .
இப்போது நான் நடித்துக் கொண்டு இருக்கும் தூங்காவனம் கூட அப்படி ஒரு படம்தான். இந்த வல்ல தேசம் படத்தை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன் ” என்றார் .
அந்த நிகழ்ச்சிக்கு பிறகுதான் தூங்காவனத்தின் படப்பிடிப்பையே கமல் ஆரமபித்தார் . அந்த விதத்தில் குறைவான நபர்களைக் கொண்டு தரமான படமாக்கல் செய்யும் வகையில் தூங்காவனத்துக்கே இன்ஸ்பிரேஷனாக அமைந்த படம் என்று வல்லதேசம் படத்தை சொல்லலாம் .
படத்தைப் பற்றி இயக்குனர் என்.டி.நந்தா நம்மிடம் பேசும்போது
“அடிப்படையில் ஓர் இலங்கைத் தமிழனான நான் . லண்டனில் செட்டில் ஆனவன். படத்தை லண்டனிலேயே எடுத்து இருக்கிறேன் . படத்தில் நடித்தவர்களில் பலர் வெள்ளைக்காரர்கள். முழு நேர நடிகர்கள் . அவர்கள் நடிக்கும் ஆங்கிலப் படம் ஒன்றையும் நான் இயக்கிக் கொண்டு இருக்கிறேன் . அதை வைத்தே தமிழ்ப் படத்துக்கும் அவர்களை ஒப்பந்தம் செய்தேன் .
பல ஆபத்தான லொகேஷன்களில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறேன் .
படத்தின் இயக்குனர் மட்டுமல்லாது ஒளிப்பதிவாளரும் நானே என்பதால் சில வித்தியாச முயற்சிகளை செய்ய முடிந்தது .
உதாரணமாக ஒரு காட்சியில் காரின் பின்புறம் கேமராவை பொருத்தி விட்டு மானிட்டரை டிரைவர் சீட் அருகில் வைத்து விட்டு , காரை நானே ஒட்டி , மானிட்டரை பார்த்துக் கொண்டு அதற்கேற்ப காரை வளைத்து திருப்பி ஒரு ஷாட் எடுத்தேன் . அதாவது காரை ஒட்டுவதன் மூலமே கேமராவை PAN செய்து அந்த ஷாட்டை எடுத்தேன்
படத்தின் கதாநாயகன் கதாநாயகி இரண்டுமே அனுஹாசன்தான். இந்தியாவில் இருந்து லண்டன் செல்லும் ஒரு அப்பாவிப் பெண் இரண்டே வாரத்தில் தனது குழந்தையைத் தொலைத்து அந்த குழந்தையைக் கண்டு பிடிப்பதற்காக ஓர் ஆக்சன் வீராங்கனையாக மாறி.. இப்படி போகும் கதை இது .
இதற்கு ரொம்ப பிரபலமாகவும் இல்லாத, அதே நேரம் காட்டினால் நினைவு படுத்திக்கொள்ள முடிகிற அளவுக்கு, முன்பு பிரபலமாக இருந்த ஒரு பழைய பிரபலம் தேவைப்பட்டார் . அதற்கு அனுஹாசனை விட பொருத்தமான நபர் இல்லை . எனவே அவரை ஒப்பந்தம் செய்தோம் .
இப்போது படத்தின் சில காட்சிகளை பார்த்து விட்டு , கமல் சார் மட்டுமல்ல , அனுஹாசனின் தந்தை தாயார் இருவரும் கூட பெரிதும் பாராட்டினார்கள் . ‘முழு படத்தையும் என் அப்பா அம்மாவுக்கு காட்டணும் . படத்தை எப்போ ரிலீஸ் செய்வீங்க/’ என்று அனுஹாசன் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்.
அதற்குக் காரணம் உண்டு . அவருடைய உயரம் ஆகிருதி இவற்றை மிக சிறப்பாகப் பயன்படுத்தி மார்ஷியல் ஆர்ட்ஸ் உட்பட பல சண்டைக் காட்சிகளில் மிக சிறப்பாக நடித்துள்ளார் . உணர்வு பூர்வமான காட்சிகளிலும் மிக சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார் .
நாசர் மிக முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க அமித் , டேவிட் முதலிய புதுமுகங்களும் நடித்து இருக்கும் படம் இது. ” என்கிறார்
படத்தின் இசையை, இசை மேதை எல் வைத்தியநாதனின் இளைய மகனும் இசையமைப்பாளர் எல்.வி.கணேசனின் தம்பியுமான எல்.வி .முத்துக் குமாரசாமி அமைத்திருக்கிறார் .
படம் பற்றி அவர் சொல்லும்போது
“சரித்திரம் படைத்த அப்பா , வளர்ந்து வரும் அண்ணன் இவர்களின் வழியில் நானும் இசையில் இயங்க ஆரம்பித்தேன் . திரைப்படத்தில் இசை அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கினேன்.
பாடலாசிரியர் சமரன் எனது நண்பர் . ஒருமுறை அவரோடு இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் அலுவலகத்துக்குப் போயிருந்தபோது, அங்கு அவர்தான் என்னை இந்தப் படத்தின் இயக்குனர் நந்தாவிடம் அறிமுகப்படுத்தினார் .
அவரிடம் எனது இசையமைப்பு வாய்ப்புத் தேடல் பற்றி சொன்னேன் . அவர் படத்தின் இரண்டு காட்சிகளை மட்டும் கொடுத்து அதற்கு இசை அமைத்துக் காட்டச் சொன்னார் . நான் அதற்கு இசை அமைத்துக் கொண்டு போய் காட்டினேன் . அவருக்குப் பிடித்து இருந்தது . என்னை பின்னனி இசைக்கு மட்டும் ஒப்பந்தம் செய்தார் .
வீட்டில் போய் அம்மா அண்ணன் இருவரிடமும் சொன்னேன் .
”சந்தோசம்” என்றார்கள். ‘உன் வேலையை எப்போதும் சரியாக செய் . மற்றபடி படம் வெளிவரும்வரை எதுவுமே நிரந்தரம் இல்லை’ என்றார் அம்மா . ‘உன் வேலைக்கு உண்மையாக இரு . விளைவு தானாக சரியாக இருக்கும்’ என்றார் அண்ணன் .
படத்துக்கு நான் பின்னணி இசை அமைக்க ஆரம்பித்தேன் . அதற்கு முன்னர் படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் இருந்தது . ஆனால் என் பின்னணி இசை மிகவும் பிடித்துப் போன இயக்குனர் இன்னொரு பாடலையும் எனக்காக அமைத்தார் .
ஆனால் என்ன ஆச்சர்யம் என்றால், அந்தப் பாடலை உருவாக்கிக் கொண்டு அப்புறம் ஷூட்டிங் போகும் வழக்கமான செயல் நடக்கவில்லை . முன்னரே எடுத்திருந்த காட்சிகளை வரிசைப் படுத்தி பாடலுக்கான காட்சிகளை அடுக்கி தயார் செய்து விட்டு, அதற்கு மெட்டமைக்கச் சொன்னார் . அது எனக்கு சவாலான வேலையாக இருந்தது .
குறிப்பாக அந்தக் காட்சிகளில் ஒரு இடத்தில் வயலின் வாசிப்பது போல இருந்தால் அதில் வயலின் எப்படி வாசிக்கப்பட்டு இருக்கிறதோ எவ்வளவு நீளத்துக்கு இருக்கிறதோ அந்த அளவில் நானும் வயலின் இசையை பொருத்த வேண்டும் . அதாவது நடிகர்கள் டப்பிங் பேசுவது மாதிரியான வேலை . அதை திறம்பட செய்து கொடுத்தேன் .
இயக்குனருக்கு ரொம்ப பிடித்துப் போனது .
அடுத்து யாரை பாட வைக்கலாம் என்று யோசித்தபோது பெண் குரலுக்கு சுசித்ராவை போடலாம் என்றார் இயக்குனர் நந்தா . எனக்கு அதில் உடன்பாடில்லை. இந்த மெலடியான பாடலுக்கு சுசித்ரா ஒத்துவராது என்றேன் நான் .
பெரும்பாலும் இயக்குனர் நந்தா ‘பிரேக் தி ரூல்ஸ்’ என்ற சித்தாந்தம் உடையவர் . அவர் சொன்னார் ” முதன்முதலாக சுசித்ராவை நாம் மெலடி பாட வைப்போம்’ என்று . எனக்கு விருப்பமே இல்லாமல் அரை மனதாக இயக்குனர் சொன்னதற்காக பாட வரவழைத்தேன். அவர் பாடப் பாட நான் வியந்து போனேன் . நந்தா ஜெயித்தார் . அவ்வளவு சிறப்பாக பாடினார் சுசித்ரா .
அப்புறம் நடிகர் சிம்புவை பாட வைத்து ஒரு புரோமோ பாடல் எடுத்தேன் . அதன் பின்னாலும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் … ” என்று பிரேக் கொடுத்தார் முத்துகுமாரசாமி .
படத்தின் எடிட்டர் தீபக் துவாரக நாத் . இவருக்கு இது மூன்றாவது படம்
“எனது முதல் படம் எட்டுத்திக்கும் மதயானை . அடுத்த படம் வேளச்சேரி . அவை நல்ல படங்கள்தான் . ஆனால் நான் வேறு மாதிரி தேடுதலோடு இருந்தேன் . ஹாலிவுட் படங்களில் எல்லாம் எப்படி எப்படி எல்லாம் ஷாட் வைக்கிறார்கள் . அப்படிப்பட்ட படங்களை எடிட் செய்ய வேண்டும் என்பதே என் ஏக்கமாக இருந்தது .
அப்போதுதான் எனக்கு இந்தப் பட வாய்ப்பு , படத்தின் மேனேஜர் மூலம் கிடைத்தது.
காட்சிகளை பார்த்த உடன் மிகுந்த சந்தோஷப் பட்டேன் . நந்தாவின் ஷாட்கள் மிக வித்தியாசமாக , வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு பாதையில் பயணித்து , மிக சிறப்பாக இருந்தன. வழக்கமான ஷாட்களாக இல்லாமல் மிக சிறப்பாக எனககு புதிய அனுபவமாக இருந்தது.மிக சந்தோஷமாக வேலை செய்தேன் .
நானே ஒரு வெர்ஷன் எடிட் செய்து வைத்தேன் . இயக்குனர் வந்த உடன் வேறு ஒரு வெர்ஷன் செய்தேன். இரண்டையும் சேர்த்து மேருகேற்றினோம் .
நான் ரொம்ப வியந்த விஷயம் என்னவென்றால் , இந்த இடத்தில் இப்படி ஒரு விஷயம் செய்யலாம் .இரண்டு ஷாட் இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தால் இதோ இருக்கிறதே என்று எடுத்துக் கொடுப்பார் நந்தா. அவ்வளவு ஷாட்கள் . அவ்வளவு நயமான காட்சிகள் . இந்தப் படம் எனக்கு மிக சந்தோஷம் கொடுக்கிறது . எங்கள் அனைவருக்கும் இந்தப் படம் வெற்றியையும் கொடுக்கும்” என்கிறார்.
வாழ்த்துகள் மூவருக்கும் !