ஓசானியா ஏ ஜே ஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பதோடு முதன் முதலாக கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் வானவில் வாழ்க்கை.
இளைஞர்கள் வாழ்க்கையை ஓர் அழகான வானவில் போலப் பார்க்கிறார்கள் என்ற கருத்தின் மீது உருவாகிறது இந்தப் படம். படத்தில் நடிப்பவர்களே தங்களுக்கு பாடுவதோடு , அந்தப் பாடல்களில் வரும் இசைக் கருவிகளையும் இசைக்கும் வகையில் வரும் இந்தியாவின் முதல் மியுசிக்கல் ஃபிலிம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. படத்தில் மொத்தம் 17 பாடல்கள்.
” ஜேம்ஸ் வசந்தனை எனக்கு ஒரு இசையமைப்பாளராக மிகவும் பிடிக்கும். அவரது பாடல்களுக்கு நான் ரசிகன். ‘மெலோடி கிங்’ இவர்” என்று வாழ்த்தி, படத்தின் டிரைலரை வெளியிட்டார் இயக்குனர் வசந்த்.
“ஜேம்ஸ் சார் எனக்கு சினிமாவைப் பற்றி நிறைய சொல்லி கொடுத்தவர். படத்தின் தயாரிப்பு நேரம் மற்றும் அதன் செலவுகளை உணர்ந்தவர். என்னை ஒரு மியுசிக்கல் படம் செய்ய சொன்னார் நான் அதிலிருந்து லாவகமாக விலகினேன். இன்று அத்தகைய ஒரு விஷயத்தை அவரே சாதித்து காட்டியுள்ளார்.” என்று கூறினார், படத்தின் பாடல்களை வெளியிட்ட, ‘பசங்க’ இயக்குனர் பாண்டிராஜ்.
“எனது நண்பன் RK பிரதாப் இப்படத்திற்கு நன்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். திறமைமிக்க கலைஞன். இந்த வண்ணமயமான இளைஞர் குழு வெற்றிபெற வாழ்த்துக்கள்” என்று வாழ்த்தினார் , படத்தின் பாடல்களை பாண்டிராஜோடு இணைந்து வெளியிட்ட, ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம் நாதன்.
படத்தின் பாடல்கள் எல்லாம் வெரைட்டியாக இருப்பதை பாராட்ட வேண்டும் . யுகபாரதி எழுதிய வாசனை என்ற பாடலில் அந்த அளவுக்கு மென்மையின் வாசனை.
“1999 ஆம் ஆண்டு நான் எழுதிய வரிகள் இவை. இப்போது இந்தப் படத்தில் இடம் பெறுகிறது . அப்போதெல்லாம் நான் ரொம்ப நல்லா எழுதி இருக்கேன்னு தோணுது . எனக்கு மெட்டுக்கு பாடல் எழுதக்கற்றுக் கொடுத்ததே ஜேம்ஸ் வசந்தன்தான் . நான் அவரை இசைப் பிதா என்றுதான் கூப்பிடுவேன் ” என்று சொல்ல அதற்கு பதில் சொன்ன ஜேம்ஸ் வசந்தன் “நான் யுகபாரதியை கவி காளமேகம் என்றுதான் கொப்பிடுவேன் ” என்றார் .
இந்தப் படத்தில் சுமதி ஸ்ரீ என்ற பட்டிமன்றப் பேச்சாளரையும் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.
“எனது பல இயக்குனர் நண்பர்களை ஒரு மியுசிக்கல் ஃபிலிம் செய்ய சொல்லி கேட்டுகொண்டே இருப்பேன். இன்று அப்படி ஒரு நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. இந்த திறமைமிக்க இளைஞர் பட்டாளம் எனக்கு இந்த படத்தை உருவாக்குவதில் பெரிதும் உதவினர். இப்படத்தை தயாரித்த எனது தயாரிப்பாளர்கள் OCEANAA AJR சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தார்க்கு எனது நன்றிகள் “ என்று சொல்லி நிகழ்ச்சியை முடித்தார் ஜேம்ஸ் வசந்தன் .
அந்த கானா பாட்டு பட்டையை கிளப்புது வாத்யாரே !