வஞ்சகர் உலகம் @ விமர்சனம்

லாபிரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் குரு சோமசுந்தரம்,  சிபி புவன சந்திரன், விசாகன் சூலூர் வணங்காமுடி,
 
சாந்தினி தமிழரசன், அழகம் பெருமாள், ஜான் விஜய், அனிஷா அம்ப்ரோஸ் நடிப்பில்  விநாயக்கின் கதை வசனத்துக்கு ,
 
அவரோடு சேர்ந்து திரைக்கதை அமைத்து மனோஜ் பீதா இயக்கியிருக்கும் படம் ‘வஞ்சகர் உலகம்’. ரசனையால் வீழ்த்தும் உலகமா இது ? பார்க்கலாம் 
 
ஒரு பத்திரிகையின் கணிப்பொறிப் பிரிவில் பணியாற்றும் சண்முகம் என்ற இளைஞனை ( சிபி புவன சந்திரன்) ,
எதிர்வீட்டுப் பெண் மைதிலி (சாந்தினி தமிழரசன்) கொலை வழக்கில் கைது செய்கிறது போலீஸ் . 
 
அவன்தான் குற்றவாளி என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் இன்ஸ்பெக்டர் நீலமேகமும்  (வாசு விக்ரம்) , கான்ஸ்டபிள் ஒருவரும் (பிச்சைக்காரன் மூர்த்தி).
 
காரணம், மைதிலியின் வீட்டில் இருந்து சண்முகம் வந்ததை பார்த்ததாக சொல்லும் வாட்ச்மேன் ( சிசர்ஸ் மனோகர்) ஆனால் அவர் மொடாக் குடியர் .
 
சம்மந்தப்பட்ட அன்று காலை போதை விலகும் நேரத்தில் எரியும் ஒரு வேனில் இருந்து உயிர் தப்பிய சண்முகத்துக்கு,  இரவில் நடந்தது எதுவும் தெரியவில்லை .  
சண்முகத்துக்கு உதவுவதற்காக ஸ்டேஷனுக்கு வருகிறார்கள்  பத்திரிகையாளன் விசாகன் (விசாகன் சூலூர் வணங்காமுடி)
 
மற்றும் பெண் பத்திரிகையாளரான சம்யுக்தா ( அனீஷா ஆம்ப்ரோஸ்) ஆகியோர். இருவருக்கும் புரிதல் மிக்க நட்பு . 
 
ஆனால் விசாகனுக்கும் நீல மேகத்துக்கும் ஆகாது . சண்முகத்துக்கும் சம்யுக்தாவுக்கும் ஆகாது . 
 
சண்முகமும் மொடாக் குடியன்தான்.ஆனாலும் எவ்வளவு குடித்தாலும் சண்முகம் கொலை எல்லாம் செய்திருக்க மாட்டான் என்பது விசாகன் எண்ணம் . 
பத்திரிக்கை ஆசிரியரும் முன்னாள் காவல் துறை அதிகாரி மகாலிங்கமும் நண்பர்கள் . எனவே மகாலிங்கம் மூலமாக,
 
சண்முகத்தை குற்றவாளி என்று முடிவு செய்ய முயலும் நீல மேகத்தை,  தடுத்து வைக்கிறது பத்திரிகையாளர்கள் குழு . 
 
மைதிலியின் கணவன் பாலுவின் ( ஜெயப்பிரகாஷ்)   பால்ய காலந்தொட்ட நண்பன் சம்பத் (குரு சோமசுந்தரம்) என்ற, 
 
போதைப் பொருள் கடத்தல் தாதா . அவனுக்கு எதிரான இன்னொரு தாதா மாறன் ( ஜான் விஜய்) 
இந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலை போலீசிடம் பிடித்துக் கொடுக்க புலானாய்வு செய்து வரும் விசாகன் ,
 
மைதிலி கொலை வழக்குக்கும் போதைப் பொருள் கடத்தல் ஆட்களுக்கும் சம்மந்தம் இருக்கும் என்று நம்புகிறான் . 
 
இந்த நிலையில் கொலை செய்யப்பட மைதிலியின் உடலில் சண்முகத்துடன் உடல் உறவு வைத்துக் கொண்டதற்கான அடையாளங்கள் இருப்பது தெரிய வருகிறது . 
 
”மைதிலிக்கும் எனக்கும் பழக்கம் உண்டு . ஆனால் நான் கொல்ல வில்லை ; கொன்றது யார் என்றும் தெரியவில்லை” என்கிறான் சண்முகம் . 
இதுவரை சண்முகத்துக்கு உதவியாக இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி மகாலிங்கமே இப்போது அவனுக்கு எதிராக மாற , 
 
அப்புறம் நடந்தது என்ன ? மைதிலியை நிஜமாக கொன்றது யார் ? ஏன் ? போதைப் பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டதா என்பதே இந்த வஞ்சகர் உலகம் . 
 
அட்டகாசமான மேக்கிங் ! சூப்பரான டைரக்ஷன் !! சபாஷ் மனோஜ் பீதா !!!
 
படத்தின் மிகப பெரிய பலம் இயக்கம்,  படமாக்கல் மற்றும்  திரைக்கதையுமே ! வளைந்து மடிந்து விதம் விதமான முடிச்சுகள் மற்றும் திருப்பங்களுடன் பயணிக்கிறது திரைக்கதை .
இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் ஓடினாலும் புதுசு புதுசாக ஏதாவது சலிக்காமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் . பாராட்டுகள்  மனோ பீதா மற்றும விநாயக் .
 
போலீஸ் ஸ்டேஷன் விசாரணை  மற்றும் நிகழ்வுகள் எல்லாம் யதார்த்தத்துக்கு அவ்வளவு நெருக்கம் . போதை மாபியாவின் இருண்ட பக்கங்களை காட்டும் காட்சிகளும் அப்படியே . 
 
விசாகனும் சம்யுக்தாவும் நண்பர்கள் . விசாகன் சண்முகத்தின் மேல் பரிதாபப் பட, சம்யுக்தா வெறுப்பது….
 
அதற்காக சண்முகதை விசாகன் புறக்கணிக்காதது என்று ரசனையான குணாதிசய ரசவாதங்களும் படத்தில் ரசிக்க ருசிக்க நிறைய இருக்கின்றன . அருமை . 
 
சண்முகம் மைதிலி இடையேயான ரகசிய  உறவை சொன்ன விதம் கிக் ஆக இருக்கும் அதே நேரம் படமாக்கிய விதத்தில் ,
அழகியல் குறையாமலும்  பார்த்துக் கொண்ட வகையில் ஓ போட வைக்கிறார் இயக்குனர் மனோஜ் பீதா . 
 
இருவரும் முதன் முதலாக படுகையில் வீழும் போது கெட்டி மேளம் ஒலிப்பது … 
 
சம்பத் துப்பாக்கியால் சகட்டு மேனிக்கு பலரையும் சுட்டுக் கொல்லும்போது பின்னணியில் ”குழலூதும் கண்ணனுக்கு….” என்று துவங்கும் கர்நாடக இசைப் பாடல் வருவது… 
 
இப்படி அப்நார்மலான கிம்மிக்ஸ் நிறைந்த பல சமாச்சாரங்களை உள்ளே வைத்து ரசனையால் ரகளை கூட்டுகிறார் இயக்குனர் மனோஜ் பீதா . 
 
படம் முழுக்கவே  சாம் சி எஸ் -ன் அட்டகாசமான பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது . பாடல்களும் கூட !
வெவ்வேறு சூழல்கள்,  இடங்கள் , காட்சியின் வித்தியாச உணர்வுகள் இவற்றுக்கு ஏற்ற இருள் ஒளிப் பயன்பாடு , வண்ண ஆளுமை என்று, 
 
அசத்தி இருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் ரோட்ரிகோ டெல்ரியோ ஹெரேரா மற்றும் சரவணன் ராம சாமி இருவரும் . 
 
படத்தின் வேகத்துக்கும் போரடிக்காமல் இருப்பதற்கும் மிக முக்கியப் பங்களிப்பை தனது அட்டகாசமான் கட்டிங்குகள் மூலம் செய்து இருக்கிறார் ஆண்டனி . 
 
ஒரு குறிப்பிட்ட காட்சி  அல்லது சம்பவம் அல்லது கதைப் பகுதியின் முடிவை காட்டி விட்டு அப்புறம் நடந்ததைக் காட்டுவது என்ற — தமிழில் அரிதாக  மட்டுமே பயன்படுத்தப்பட்ட—  உத்தியை இந்தப் படத்தில் பயன்படுத்தி தெறிக்க விட்டிருக்கிறார்கள் ஆண்டனியும் மனோஜ் பீதாவும். 
 
மேலும் பல சுவையான ரசனையான இன்டல்லக்சுவலான தொழில் நுட்ப உத்திகளும் படத்தில் இருக்கின்றன . 
 
ஏற்றுக் கொண்டிருக்கும் பாத்திரத்துக்கு ஏற்ப இளைத்து கன்னத்தில் டொக் விழுந்து தோன்றுவதோடு, 
 
நுணுக்கமாக உணர்வுகளை வெளிப்படுத்தல் , வித்தியாசமான உடல் மொழிகள் , நல்ல டைமிங் என்று நடிப்பில் அசத்தி இருக்கிறார்  குரு சோமசுந்தரம் . 
பொதுவாக டெர்ரர் ஆக நடந்து கொள்ளும் சம்பத், பொட்டலம் மடிக்கும் கீழ் அடித்தட்டு வர்க்கத் தொழிலாளிகளுடன் அன்பாக பேசுவதும் … 
 
” நீங்க  துப்பாக்கியால ஆளுகளை சுடும்போது  வரும் சத்தத்துல காது அடைக்குது. ரொம்ப டிஸ்டர்பா இருக்கு .
 
அதை எல்லாம் வேற எங்கயாவது வச்சுக்குங்களேன் ” என்று சொல்லும்போது ,கனிவோடு ”சரிம்மா” என்று சொல்வது எல்லாம் வேற லெவல் 
 
சிவி, விசாகன், அனிஷா, அழகம் பெருமாள், போன்றோர் தங்களுக்கே உரிய தனித்தன்மையான இயல்போடு இயற்கையாக நடித்துள்ளனர் .
சாந்தினி தமிழரசனுக்கு இருக்கிற — “வர்றியா ?” என்று கூப்பிடுகிற மாதிரியான – கண்களை அழகாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் இயக்குனர் . 
 
ஜான் விஜய், வாசு விக்ரம், மூர்த்தி ஆகியோரும் ஒகே. 
 
இவ்வளவு நேர்த்தியாக பார்த்துப் பார்த்து படம் எடுத்தவர்கள் , இன்னும் சிறப்பான கதையை எடுத்துக் கொண்டு, 
 
அதில் இந்த வித்தைகளை எல்லாம் காட்டி இருந்தால் சும்மா தெறிக்க விட்டிருக்கலாம் . 
 
கள்ளக் காதல், போதைப் பொருள் கடத்தல் , என்று வழக்கமான கதையில் நின்று விட்டார்கள் . 
எனினும் தொழில் நுட்பத்தோடு படைப்பாற்றலை இணைத்த விதம் ,  அபாரமான படமாக்கல் ,
 
வித்தியாசமான சிந்தனைகள் , படம் முழுக்க வரும் ஒரு மெல்லிய எள்ளல் இவற்றால் .. 
 
என்றென்றும் குறிப்பிடத்தக்க  ஒரு ரசனையான படமாக வந்திருகிறது வஞ்சகர் உலகம் . 
 
கதைக் கரு மற்றும் நல்ல அடிப்படைக் கதைகளில் கவனம் செலுத்தினால் தமிழ் சினிமாவின், 
 
தவிர்க்க முடியாத இயக்குனராக ஜொலிப்பார் மனோஜ் பீதா . இதில் துளியும் சந்தேகம் இல்லை .
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *