வந்தா மல @விமர்சனம்

IMG_6512

கெய்கர் பிலிம் புரடக்ஷன் சார்பில் மலேசியாவைச் சேர்ந்த ஜெயராதாகிருஷ்ணன்  மற்றும் நவ குமாரன் இவர்களுடன் கொரியாவைச் சேர்ந்த கிம் சூன் ஜாங் ஆகியோர் தயாரிக்க….

தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ் ஆகியோருடன்  கங்காரு பட நாயகிகளில் ஒருவரான பிரியங்கா கதாநாயகியாக நடிக்க, பழம்பெரும் கதை வசன கர்த்தா இயக்குனர் நடிகர் வியட்நாம் வீடு சுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்க … இவர்களுடன் மகாநதி ஷங்கர் , மலேசியா தியாகா மற்றும் திருநங்கை மலைக்கா ஆகியோர் நடிக்க….

ஆர்யா நடித்த கலாபக் காதலன் படத்தை இயக்கிய இகோர் இயக்கி இருக்கும் படம் ‘வந்தா மல’. 

படம் பார்க்கும் ரசிகனுக்கு என்ன வரும் என்று பார்ப்போம் .

IMG_5083

ஒரு பெரிய பங்களாவில் நள்ளிரவு நேரத்தில் வீட்டை விட்டுத் தப்பிக்க முயலும் மனைவியைத் தடுக்கும்  கணவர் அவளை ஒரு சிறு அறையில் போட்டுப் பூட்டி “பணத்தின் அருமை என்ன என்பதை இன்னும் ஒரு வாரத்தில் உனக்கு புரிய வைக்கிறேன் ” என்கிறார் .

அந்த பெண்மணி தனது கழுத்தில் உள்ள டாலரின் லாக்கெட்டைத் திறந்து, ஒரு தாளில் எதையோ எழுதி அதில் வைத்து , ஜன்னல் வழியே வெளியே எறிகிறார் . அந்த டாலர் புழுதியோடு புழங்க ஆரம்பிக்கிறது .

சேத்துப்பட்டு சேரிப் பகுதியில் வாழும் இளைஞர்களில் நால்வர் (தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ்) . நால்வரின் வேலையும் ஹெல்மெட் போட்டுக் கொண்டு முகத்தை மறைத்தபடி பைக்கில் போய் பெண்களில் கழுத்தில் உள்ள நகையை மின்னல் வேகத்தில் அறுத்து எடுத்துக் கொண்டு பறப்பதுதான் . அவர்களை ஜாமீனில் எடுக்கும் பழைய ரவுடியான  ஒரு முதியவர் (வியட்நாம் வீடு சுந்தரம்) .

அந்த நாலு மோசமானவங்கள்லயே முக்கியமானவனான தாமா என்பவனைக் காதலிககிற– சிறிய அளவில் ஒரு மாவு மில் வைத்திருக்கிற இளம்பெண் வசந்தி (பிரியங்கா ) . அந்த நால்வரின் நண்பனாக இருந்து பிறகு அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறுகிற ஒரு திருநங்கை (மலைக்கா ).

IMG_0135

இவர்களின் வாழ்க்கைப் பயணத்தோடு செயின் அறுக்கும் திருட்டுப் பயணமும்  தொடரும்போது , ஒரு  நாள் ஒரு டூ வீலர் பெண்ணின் கழுத்து செயினை அறுக்கிறார்கள். அந்த டாலர் தாமா கைக்கு வர , அவன் அதை வசந்திக்குக் கொடுக்கப் போக, ஒரு சண்டையில் அது கீழே விழுந்து திறக்க ,

அதில் ” என்னைக் காப்பாற்றினால் இரண்டு கோடி ரூபாய் பணம் கிடைக்கும்” என்று எழுதி இருக்கிறது . ஆரம்பக் காட்சியில் ஜன்னல் வழியாக தூக்கி எறியப்பட்ட அதே செயின் !

எந்தப் பெண்ணிடம் செயினை அறுத்தார்களோ , அவளிடம் போய் விசாரித்தால் அந்த செயின் கீழே கிடந்து எடுத்தது  என்கிறாள் . அவள் சொன்னஇடத்துக்குப் போய் பார்த்து , அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் பெண்ணை   சந்திக்கிறார்கள் .

அந்தப் பெண் இவர்களிடம் ” என் கணவர் ஒரு மிலிட்டரி ஆபீசர் . அவர் நம் நாட்டு ராணுவ ரகசியங்களை 25 கோடி பணத்துக்காக எதிரி நாட்டுக்கு விற்கப் போகிறார் .

அதற்கான அட்வான்ஸ் அவர் பெறும்போது அவர் அந்நியர்களுக்கு கொடுக்க இருக்கும் ராணுவ ரகசியங்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை என்னிடம் கொடுத்து விட்டு , அந்த இரண்டு கோடி ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு போய் விடுங்கள் . அது உங்களுக்கே ” என்று கூறுகிறாள் .

IMG_3578

இளைஞர்களும் பெரும் பணத்துக்கு ஆசைப்பட்டு அங்கே போக , அங்கே அவர்கள் ரெண்டு கோடி ரூபாய் பணத்தை செயின் அறுக்கிற மாதிரி அறுத்தார்களா? இல்லை தீவிரவாதக் கோஷ்டியால் அறுக்கப் பட்டார்களா ? என்பதே இந்த வந்தா மல . 

இரண்டரை மணி நேரம் ஒரு சேரிக்குள் போய் இருந்துவிட்டு வந்த உணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு பின்புலத்தை அருமையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் இகோர்

படம் துவங்கிய ஓரிரு நிமிடங்களில் வரும் பராசக்தி ரீமிக்ஸ் பாடலான ‘தேசம் ஞானம் கல்வி’ படத்தின் மீது எடுத்த எடுப்பிலேயே எதிர்பார்ப்பை ஏற்றி வைக்கிறது. 

வசந்தி கதாபாத்திரத்தின் அறிமுகக் காட்சி படத்தின் மீது அன்னியோன்யத்தை ஏற்படுத்துகிறது.

சண்டையில் அடிபட்டு விழும் ஒருவன் சட்டென்று எழுந்து கடைக்குப் போய் “பூச்சி மருந்து கொடு” என்று கேட்டு செயற்கைக் குளிர்பானத்தைக் குடித்து விட்டு சண்டை போடும் காட்சியில் இயக்குனரின் கிண்டல் ஜொலிக்கிறது.

IMG_4330

” நம்மளப் பொறுத்தவரை காதல் என்பது கார்ப்பரேஷன் வாட்டர் மாதிரி . எப்ப வரும்னே தெரியாது. வரும்போது சட்டி, பானை , அண்டா , குண்டாவுல எல்லாம் புடிச்சு வச்சிக்கிட்டு , தேவைப்ப்படும்போது எடுத்து செலவு பண்ணிக்கணும் ” போன்ற இடங்களில் வசனமும் அருமை .

விலை உயர்ந்த ஆனால் திருட்டு நகையை கொண்டு வந்து கொடுக்கும் காதலன் தாமாவை அடித்து விரட்டும் வசந்தி “அஞ்சு ரூபாய்க்கு ஹேர் பேன்ட் வாங்கிக் கொடு , ஒரு முழம் பூ வாங்கிக் கொடு .எவ கழுத்துலையோ புரண்ட அழுக்கு நகையைக் கொண்டு வந்து எனக்கு மாட்டப் பாக்குறியா ?” என்று எகிறும் காட்சியில் அந்த கேரக்டர் மேல் படம் பார்ப்பவர்களுக்கும் காதல் வருகிறது .

ஆனால் பிற்பாடு வரும் மொட்டைமாடிக் காட்சியில் அந்தப் பெண்ணை அப்படி பஜாரி போல பேச வைத்து,  அந்தக் கேரக்டரை தூக்கிப் போட்டு சிதறடித்து இருக்க வேண்டாமே .

IMG_6564

படத்தின் மிகப் பெரிய பலம் சாம் டி ராஜின் தனித்தன்மை வாய்ந்த வித்தியாசமான பாடல் இசையும், காட்சிகளை உயர்த்திப் பிடிக்கும் பின்னணி இசையும்தான்.ஒவ்வொரு பாடல் வரும்போதும்  சும்மா ஹார்லிக்ஸ் போர்ன்விட்டா எல்லாம் குடித்த மாதிரி ஜிவ்வென்று எகிறி நிற்கிறது படம்.. (சைபராகலாம் பாடல்  மட்டும் இந்த பாராட்டு லிஸ்டில் வராது.).

பொதுவாக வசனங்கள் நிரம்பி வழியும் ஒரு படத்தில் இசையமைப்பாளர் பின்னணி இசையில் தன்னை நிரூபிக்க முடியாது. ஆனால் அதையும் மீறி கிடைக்கிற வாய்ப்புகளில் எல்லாம் ரசிக்கும்படி பின்னனி இசை கொடுத்து இருக்கிறார்ஸ்  சாம் .  சில இடங்களில் பின்னணி இசையே நகைச்சுவையை உருவாக்குகிறது . சபாஷ்

அடுத்து இந்தப் படத்தில் அசத்தி இருப்பது பிரியங்கா . அந்த தில்லான , கொஞ்சம் கிளுகிளுப்பான, வாழ்வியல் மதிப்பீடுகளுக்கு ஆட்படுகிற அந்த சேரிப் பெண்ணின் கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அழகாக நடித்து இருக்கிறார் . குறிப்பாக சொந்தக் குரலில் பேசி இருக்கும் அவரது குரல் நடிப்பும் சென்னைத் தமிழை உச்சரித்த விதமும் அருமை . இவரை சரியான முறையில் பயன்படுத்திய பெருமை இகோரையே சாரும்.

IMG_8691

அதற்கும் அப்பாற்பட்டு பிரியங்காவின் அந்தக் கரகரப்பான கசகசப்பான குரல் அவருக்கு ஒரு பெரிய பிளஸ் பாயிண்டாக அமையும் வாய்ப்புகள் அதிகம்.

தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ் இவர்கள் எல்லாம் கேரக்டருக்காகவே மாறி இருக்கிறார்கள்

வழக்கறிஞர் தூய தமிழில் பேசுவதை போலீஸ் உட்பட எல்லோரும் கிண்டல் செய்வது போல காட்சிகளும் வசனங்களும் வைத்து இருப்பது கடுமையான கண்டனத்துக்கு உரிய விஷயம் . அதில் நகைச்சுவை என்று எதுவுமே இல்லை என்பது ஒரு பக்கம் இருக்க அவர் பேசுவது அவ்வளவு சிறப்பாகவும் இருக்கிறது.

IMG_2635

ஒரு சேரிக்குரிய கலகல சலசலப்பை சந்தைக் கடை உணர்வை வெளிப்படுத்த வசனங்கள் உதவும் என்பது சரிதான் . ஆனாலும் இன்னும் கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

ஐ டி கம்பெனியில் வேலை செய்யும் திருநங்கையை இப்படி தரை டிக்கட் லெவலுக்கு இறக்கி விடாமல் இருந்திருக்கலாம் .

IMG_1476

வியட்நாம் வீடு சுந்தரத்தின் கேரக்டரை இன்னும் சிறப்பாக உருவாக்கி அவரது மரணக் காட்சியில் இன்னும் கூட கனம் ஏற்றி இருக்கலாம் .

செயின் லாக்கெட் திறந்து ரெண்டு லட்ச ரூபாய் விஷயம் வெளியே வந்த உடன் மற்ற பக்கவாட்டு விசயங்களை குறைத்து நேரடியாக அந்த ஒரு விசயத்தில் மட்டும் கவனம் செலுத்தி இன்னும் படத்துக்கு வேகம் ஏற்றியிருக்கலாம்.

பர்தா போட்ட அய்யராத்து மாமி கடைசியில் இரட்டை வேடமாக வருவதற்கான காரணத்தை கொஞ்சம் சொல்லி இருக்கலாம் .

படம் முடியும் கடைசி நிமிடமாவது திருடர்கள் நல்லவனாக மாறுவது பற்றி யோசிக்கவாவது செய்தார்கள் என்று சொல்லி இருக்கலாம்.

இப்படி இன்னும் சிறப்பாக செய்திருக்க பல ஏரியாக்கள் இருக்கிறது என்றாலும் …

IMG_8883

சென்னை சேரிப் பகுதியின் நீள அகல உயர விஸ்தீரணத்தை மிக சிறப்பாக காட்டுவது…. சென்னைத் தமிழைப் படம் முழுக்க பயன்படுத்துவதோடு , சென்னைப் புற நகரின் நாட்டுப்புற இசை , மொழி , இவைகளின் மீது வெளிச்சம் வீசி இருப்பது..  இந்த வகைகளில்  குறிப்பிடத்தக்க பதிவாக ஆகிறது இந்தப் படம் .

மகுடம் சூடும் கலைஞர்கள்

————————————————

சாம் டி ராஜ் , பிரியங்கா

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →