இசை விமர்சனம் — ‘வந்தா மல’

Vandha Mala Movie Stills

கெய்கர் பிலிம் புரடக்ஷன் சார்பில் மலேசியாவைச் சேர்ந்த ஜெயராதாகிருஷ்ணன்  மற்றும் நவ குமாரன் இவர்களுடன் கொரியாவைச் சேர்ந்த கிம் சூன் ஜாங் ஆகியோர் தயாரிக்க, ஆர்யா நடித்த கலாபக் காதலன் படத்தை இயக்கிய இகோர் இயக்கி இருக்கும் படம் ‘வந்தா மல’.

தனுஷ் ஐந்தாம் வகுப்பு என்ற படத்துக்கு இசை அமைத்த சாம் டி ராஜ் இந்தப் படத்துக்கு இசை அமைத்து இருக்கிறார்

ஆரம்பத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்த – இந்தப்  படத்தின் –பாடல்கள் இப்போது ஏற்படுத்தும்  இன்ப அதிர்ச்சி ஒரு  சுகமான விஷயம் .! 

அவ்வளவு ஈர்ப்பாக இருக்கின்றன இந்தப் பாடல்கள் .

vandha mala 41) தேனிசைத் தென்றல் தேவாவின் குரலில்  ‘நம் சிநேகிதப் பசங்க எல்லாம் ரிலீஸ் ஆகி வாராங்கோ’ என்ற தொகையறாவுடன் துவங்கும்  ”ஆனா ஆவன்னா அண்ணாதுரையைப் பாருன்னா”  பாடல் கொஞ்சம் கானா , கொஞ்சம் தெம்மாங்கு, கொஞ்சம் நம்ம ஊரு இசை, கொஞ்சம் வெஸ்டர்ன் எல்லாம் கலந்த முழு சாப்பாடாக ஒலிக்கிறது .

சென்னையில் காலகாலமாக புழங்கும் ஒரு காணாப் பாடலின் பல்லவியை அப்படியே வைத்துக் கொண்டு சரணம் வரிகளை எழுதி இருக்கிறார் இயக்குனர் இகோர் .

பாடல் ஆரம்பிக்கும் விதமே டாமினேட்டிங்காக உற்சாகமாக இருக்கிறது என்றால், பல்லவியின் முதல் இரண்டு வரிகளை அடுத்து வரும் இசைத் துண்டில் இருந்தே எகிறி அடிக்கிறது சாம் டி ராஜின் இசை. “பத்து ரூபா திருடிபுட்டா போலீஸ் வந்து புடிக்குது . லட்சம் கோடி அடிச்சாக்க ஊரே சல்யூட் அடிக்குது” என்று சந்த(டி) சாக்கில் அரசியலும் பேசுகிறது இந்தப் பாடல். 

அதுவும் அந்த இரண்டாவது வரிக்கு ”சார்.. சார்… சார்…” என்று மட்டும் சொல்லி மறைமுகமாக ஒன்ஸ் மோர் கேட்க,  ”லட்சம் கோடி அடிச்சாக்க ஊரே சல்யூட் அடிக்குது” என்று தேவா நீட்டி முழக்கிப் பாடுவது செம குறும்பு. இந்தப் படமக்காப்பட்ட விதமும் அருமை .

அண்ணா பெரியார் அம்பேத்க்கார் இவர்களின் புகழ் பாடி கடைசியாக  மக்கள் மனம் கவர்ந்த ஒரு தலைவரின் புகழ் பாடி இந்தப் பாடல் முடிகிறது . கேட்டு முடித்த உடனே இன்னொரு தடவை கேட்கத் தோன்றும் அளவுக்கு இசையும் பாடலில் கொண்டாடப்படும் தலைவர்களின் பெயர்களும்  கவனம் கவர்கின்றன.

vandha mala 22) வாயில வடை சுடு என்று துவங்கும் பாடலின் முதல் அட்ராக்ஷனே அந்த வார்த்தைகள் தான் .

“ஆனா ஊன்னா அறுவத்து ரெண்டு . ஆச்சா போச்சா எழுவத்தி ரெண்டு …வாயில வட சுடு’ என்பதுதான் பல்லவியின் முதல் வரி . அதை அவ்வளவு வேகமான டிரம்ஸ் இசையுடன் கூடிய டியூன்  , அதைத் தொடரும் நேர் மாறான துள்ளலான தத்தகாரம் என்று போட்டு சூடாகக் கொடுக்கிறார் இசை அமைப்பாளர் . பாடலே அந்த தத்தகாரத்தில்தான் ஆரம்பிகிறது . பாடல் முழுக்க வா…ய்ய்ய்ய்….இ…..ல்ல்ல்லல்ல்ல்… ல வddddddddட சுddddddddddடேய் என்ற  அந்த வார்த்தையை உருட்டிப் பிசைந்து அழுத்தி உலுக்கி விளையாடுகிறது இசை.

அங்கங்கே வரும் வித்தியாசமான ஒலிகள் சுவராஸ்யம் . “உருட்டிப் போட்டா போண்டா . உதறிப் போட்டா பக்கோடா சும்மா வாயில வடை சுடு . முட்டை வந்துச்சா கோழி வந்துச்சா நமக்குத் தேவை ஆம்லேட் மச்சான். வாயில வடை சுடு ” என்கிறது பாடல். பாடலை எழுதியவர் சுகுமார்.

திடிரென்று டேப் அடி மூலம் ஒலிக்கும் பக்கா டப்பாங்குத்து… மறுபடியும் தத்தகாரம் என்று அடிக்கடி வரும் சேஞ்ச் ஓவர்களும் பாடலின் உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொள்கின்றன..

vantha mala 5

3) ‘சைபர் ஆகலாம்’ பாடல் சுறுசுறுப்பான , பரபரப்பான, அதிரடியான ,  ஆவேசமான … டூயட் பாடல்! ஒரே பார்வையில் நம்மை அசத்துபவர்கள் முன்னால் எதுவும் செய்ய முடியாமல் பிரீஸ் ஆகி நிற்பதை சைபர் ஆகலாம் என்கிறது பாடல் .உனது அழகு முன் சைபர் ஆகலாம் என்பது விசயத்தை புரிய வைக்கும் வரி.  பாடலை எழுதியவர் சுகுமார்.

”காபியில் ஆவி போல மிதக்கிறேன். பாப்காரனை போல குதிக்கிறேன்” என்று உருவகங்களும்  இசைக்கு ஏற்ப ஓடுகின்றன . பாடலின் இசை எப்படி ஆரம்பிக்கிறதோ அதே  பீட்டில் அதே மெட்டில் துளி பிசகாமல் ஒரே வேகத்தில் குதிரை சவாரி செய்வது போல பாய்கிறது கடைசி வரை . அதே நேரம் அதன் குறிப்பிட்ட லிமிட்டுக்குள் இசைக் கருவிப் பயன்பாட்டில் மாற்றங்கள் கொடுத்து வசீகரிக்கிறார் இசையமைப்பாளர் சாம் டி ராஜ்

vantha mala 14) ”உன்னாண்ட காதல நான் சொன்னா  உன்னே இன்னா நென்ச்ச நீ ? ; இன்னாத்த நெனக்கிறது நெஞ்சு எனக்கு பகீருன்னுச்சு. ” சென்னைத் தமிழில் அமைந்திருக்கும் அட்டகாசமான அசத்தலான காதல் டூயட் பாடல் இது .பாடலை எழுதியவர் இயக்குனர் இகோர்

காதலன் காதலி இருவரும்,  தங்களுக்குள் காதல் தோன்றிய கணத்தை கேள்வியும் பதில்களுமாக சென்னைத் தமிழில் விவரித்துக் கொள்ள , அதனால் தூக்கம் இல்லாமல் பலர் அல்லோலகல்லோலப்படுவதை சொல்கிறது இந்தப் பாடல்

ஒரு சேரியில் உள்ள மிக எளிய காதல் ஜோடி தங்கள் காதலை சொல்லும் பாடலுக்கு இசை எவ்வளவு எளிமையாக இருக்க வேண்டும்?  அவ்வளவு எளிமையாக இருக்கும் அதே நேரம் இனிமையாகவும் இருக்கிறது இந்தப் பாடலின் இசை .

இயக்குனர் இகோர்
இயக்குனர் இகோர்

தெருக் கூத்தை விட சற்றே நவீனமான ஒரு எளிய கிராமத்து நாடகத்துக்கு என்னென்ன இசைக் கருவிகள் பயன்படுத்தப்படும் ? கிட்டத்தட்ட அந்த இசைக் கருவிகளை அதே பாணியில் மிக எளிமையாக பயன்படுத்தி இந்தப் பாடலை அமைத்து இருக்கும் வகையில் மனம் நிறைந்த பாராட்டுக்களைப் பெறுகிறார் இசையமைப்பாளர் சாம் டி ராஜ் .

முதல் சரணத்துக்கு முன்பு வரும் பின்னணி இசையில் இருந்து இரண்டாவது சரணத்துக்கு முன்பு வரும் பின்னணி இசையை வித்தியாசப்படுத்தி காட்டி இருக்கும் விதம் அருமை . அதிலும் அந்த இரண்டாவது சரணத்துக்கு முன்பு உள்ள பின்னணி இசை அருமை.

கடைசி சரணத்துக்கு முன்பு வரும் பின்னணி இசையை எல்லாவற்றையும் விட சிறப்பாக அமைப்பது ஒரு வெற்றிகரமான இசை அமைப்பாளருக்கான உத்தி. அதை செய்யத் தெரிகிறது சாம் டி ராஜுக்கு.

பொதுவாக கானா பாடல் என்றால் அது ஆண்கள் பாடும் பாடல் என்றுதான் இதுவரை அறியப்பட்டு உள்ளது .

இந்தப் பாடலில் முதன் முதலாக ஒரு பெண் குரல்….
கானாப் பாடல் பாடுவது , இது வரை…..
காணாப் பெருமை !

பாடலின் வெற்றிக்கு பெரும் பலம் தருகிறது ஈர்க்கும் அந்தப்பெண்  குரல் .

தனித் தன்மை . இனிமை , எளிமை , புதுமை , மண் சார்ந்த பிரதிபலிப்பு என்று எல்லாவற்றிலும் மகுடம் சூடுகிறது இந்தப் பாடலின் மெட்டும் இசையும் குரல்களும் ! படத்தில் மகுடம் சூடும் பாடல் மட்டுமல்ல , வந்தா மல படத்தின் எதிர்கால அடையாளமாக இருக்கப் போகும் பாடலும் இதுதான்.சபாஷ் சாம் டி ராஜ்!

மொத்தத்தில் எல்லாப் பாடல்களும் நன்றாக வர வேண்டும் என்பதில் இயக்குனர் இகோர் காட்டி இருக்கும் முனைப்பும் சாம் டி ராஜ் கொட்டி இருக்கும்  உழைப்பும் பாரத்துக்குரியன.

இசை அமைப்பாளர் சாம் டி ராஜ்
இசை அமைப்பாளர் சாம் டி ராஜ்

நகர்ப்புற ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும்படியாக சென்னை மாநகர நேட்டிவிட்டி இசையை…..  சரியான இசைக் கருவிகள் , அருமையான மெட்டுகள் , பொருத்தமான குரல்கள் மூலம் மிக அட்டகாசமாக கொடுத்து இருக்கிறார் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சாம் டி ராஜ் . இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு சரியான இடம் காத்திருக்கிறது .

வாழ்த்துகள் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →