எஸ் ஆர் டி என்டர்டைன்மென்ட் மற்றும் முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ரஜனி தல்லூரி , ரேஷ்மி சிம்ஹா தயாரிக்க, சிம்ஹா, கஷ்மிரா பர்தேசி, சிறப்புத் தோற்றத்தில் ஆர்யா நடிக்க ரமணன் புருஷோத்தமன் எழுதி இயக்கி இருக்கும் படம். (இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்து இருக்கும் நடிகையும் சிம்ஹாவின் மனைவியுமான ரேஷ்மி(மேனன்) சிம்ஹாவுக்கு வாழ்த்துகள். )
ஐ டி துறையில் அதிக பணிச்சுமை, டென்ஷன், தூக்கமின்மை, என்று இருக்கும் ஒருவன் ( சிம்ஹா). அவனுக்கு ஒரு காதலி ( கஷ்மிரா பர்தேசி)
ஒரு நிலையில் உடல் நலம் மன நலம் பாதிக்கப்பட்டு MIND BLOCK எனப்படும் சிந்தனை முடக்க நோய்க்கு ஆளாகிறான் அவன் . மருத்துவர் அவனை பணிச் சூழல் அல்லாத வேறு இடத்துக்கு அழைத்துப் போய் ரிலாக்ஸ் செய்து கொண்டு வரச் சொல்ல, காதலியின் வற்புறுத்தல் காரணமாக கிளம்புகிறான்.
காரில் பயணிக்கும் அவர்கள் மலைப்பாங்கான பகுதியில்ஆளரவமற்ற இடத்தில் தனியாக இருக்கும் வசந்தமுல்லை என்ற ஒரு ஹோட்டலில் மழை காரணமாக இரவில் தங்குகிறார்கள். ஆஸ்துமா பிரச்னை உள்ள அவளுக்கு, பீய்ச்சு மருந்து வாங்கி வர அவளை விட்டு விட்டுப் போன அவன் வாங்கிக் கொண்டு வந்து பார்த்தால்.. , ஹோட்டல் ரிஷப்ஷனிஸ்ட் நீ யாரு என்கிறான், ரூம் புக் செய்து ‘மனைவி’யை விட்டு விட்டு மருந்து வாங்கிவரப் போனதை நாயகன் சொன்னால் நீ இப்போதுதானே முதலில் வருகிறாய் என்கிறான் .
உள்ளே ஓடிப் பார்க்கப் போனால் யாரோ ஒருவர் நாயகனை அம்பு வீசிக் கொல்ல முயல்கிறான் . தப்பித்து அறைக்குப் போனால் காதலி அங்கு இல்லை . திடீரென்று அவளது அலறல் கேட்டு சத்தம் வந்த திசையில் ஓடினால் அங்கே அம்பு வீசிக் கொல்ல முயல்பவனிடம் அவள் சிக்கி இருக்கிறாள். அவளைக் காக்க நாயகன் சண்டை போட, அந்த முயற்சியில் காதலி கொல்லப்படுகிறாள் .
அழுது துடிக்கும் நிலையில் நாயகன் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் மீண்டும் அவனும் ( சிம்ஹா) அவன் காதலியுமே ( கஷ்மிரா பர்தேசி) காரில் வந்து இறங்குகிறார்கள் . அவர்களுக்கும் ரூம் கொடுக்கப்படுகிறது . அவளுக்கும் ஆஸ்துமா பிரச்னை . அதற்கு மருந்து வாங்க, அந்த இரண்டாவதாக வந்த நாயகன் ஓட, காதலியை இழந்த இவன் இரண்டாவதாக வந்த நாயகியை அழைத்துக் கொண்டு தப்பிக்க முயல்கிறான். மீண்டும் அம்பு வீசுபவன் வர அவனோடு சண்டை போட, இப்போது முதல் நாயகன் இறக்கிறான் .
மருந்து வாங்கப் போன இரண்டாவது நாயகன் இப்போது வருகிறான் . அவனுக்கும் அம்பு வீசுபவனுக்கும் சண்டை . இப்போது இரண்டாவது நாயகிக்கு மீண்டும் ஆபத்து, அம்பு வீசுபவன் நாயகனிடம் , ”என் மகளை நீ கொன்னது நியாயமா ?” என்று கேட்க , யார்? என்ன? எதுக்கு? எப்போ? எப்படி? எதனால்? எவ்வாறு? என்பதே இந்த வசந்தமுல்லை.

சொல்ல வேண்டிய ஒரு நல்ல கதையை எடுத்து இருக்கிறார்கள் . பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
மிக இயல்பாக சிம்பிள் ஆக அழுத்தமாக காட்சிகள் அமைத்து சிறப்பாக இயக்கி இருக்கிறார் ரமணன் புருஷோத்தமன். கணிப்பொறியில் முழு நேரப் பணியாற்றும் நபர்கள் பணி அழுத்தம் , தூக்கமின்மை , டென்ஷன் காரணமாக எப்படி உடலும் மனமும் நொந்து MIND BLOCK எனப்படும் சிந்தனை முடக்க நோய்க்கு ஆளாகிறார்கள் என்பதை, இது என்ன பிரச்னை என்று புரியாதவர்களுக்குக் கூட முழுசாகப் புரியும்படி, ஒரு பாட்டில் அருமையாக காட்டிய விதம் சபாஷ் போட வைக்கிறது . படம் முழுக்க விஷுவல் தரமும் அபாரம்.
படம் முழுக்க சில முகங்களே வரும் கதை . அதுவும் பெரும்பகுதி நாயகன் நாயகி மட்டுமே. அதிலும் நாயகனே அதிக நேரம். கொஞ்சம் மிஸ் ஆனாலும் எரிச்சல் ஆகி விடும் . ஆனால் மிக சிறப்பான நடிப்பால் தூக்கி நிறுத்துகிறார்கள் சிம்ஹாவும் , கஷ்மிரா பர்தேசியும்.
அதிலும் சிம்ஹா அபாரம். வேலைப் பளு, தூக்கமின்மை தொல்லை , டென்ஷன், அதனால் உடலும் மனமும் பாதிக்கப்படும் விதம் , பெரும்பாலும் பரபரப்பாக படபடப்பாக நடிக்க வேண்டிய காட்சிகள், வேகமாக ஆனால் திருத்தமாக வசனம் பேச வேண்டிய அவசியம், விழுந்து புரண்டு சண்டை… என்று நடிக்க மிக சிரமமான கதாபாத்திரம் . அசத்தி இருக்கும் சிம்ஹாவுக்கு ஒரு மெய்நிகர் ( விர்ச்சுவல்) முத்தம் .
கஷ்மிரா பர்தேசி மட்டும் என்ன? தலைக்குள் கட்டி வைத்த தண்ணீர்த் தொட்டி உடைந்து விட்டதோ என்று நாம் பயப்படும் அளவுக்கு கிளிசரின் அருவிகள் மானாவாரியாகக் கொட்ட அழுது நடித்த ஒரு காட்சியைத் தவிர, படம் முழுக்க பயம் பதட்டம் நடுக்கம் ஓட்டம் ஒய்யாரம் என்று பிரம்மாதமாக நடித்திருக்கிறார். கஷ்மிராவுக்கு ஒரு மெய்நிகர் அணைப்பு ( விர்ச்சுவல் hug)
இல்லை சிம்ஹாவுக்கு கொடுத்ததை கஷ்மிராவுகும் கஷ்மிராவுக்கு கொடுத்ததை சிம்ஹாவுக்கும் மாற்றிக் கொள்ளலாம் என்றாலும் ஓகேதான்.
(கஷ்மிரா பர்தேசி நடிக்க காஷ்மீரில் ஒரு பரதேசி என்ற ஒரு படத்தை, ஒரு பெண் பரதேசியின் கதையை வைத்து எடுத்தால் எப்படி இருக்கும் என்று எனக்கு இப்போது தோன்றக் காரணம் , படத்தில் ஹீரோவுக்கு இருக்கும் பிரச்னையை முழுசாகப் புரிந்து கொண்டதன் விளைவுதானே தவிர , வேறு எதுவும் இல்லை)
கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு காட்சியின் சூழலுக்குத் துணையாக நின்று, மிரட்டுகிறது . ராஜேஷ் முருகனின் பின்னணி இசையும் அப்படியே . நாயகனை நாயகனே பார்ப்பது போன்ற காட்சிகளில் அக்கறையோடு பணியாற்றி இருக்கிறது விவேக் ஹர்ஷனின் படத் தொகுப்பு. தபஸ் நாயக்கின் ஒலி வடிவமைப்பு படத்துக்கு பலம்.

அந்த வில் தேர்ந்தெடுப்பு முதற்கொண்டு, ஹோட்டலின் தோற்றம் , இன்டீரியர் , வண்ணப் பயன்பாடு விசயங்களில் அசத்தி இருக்கிறார் கலை இயக்குனர் நாகராஜ்
இப்படி எல்லாம் பார்த்துப் பார்த்து பில்டிங்கை ஸ்ட்ராங் ஆகக் கட்டியவர்கள் திரைக்கதை எனும் பேஸ்மென்ட்டை படு வீக்காகக் கட்டி விட்டார்கள் .
நாயகனின் மன நலப் பிரச்னை என்ன என்பதை முன்பே விலாவாரியாக சொல்லி விட்டதால் , ஹோட்டலுக்குள் வரும் திருப்பங்கள் எல்லாம் என்ன என்பது எல்லோருக்கும் சுலபமாகவே புரிந்து விடும் ஒன்றாக மாறி விட்டது . எனவே ஒரு நிலையில் பதட்டம் போய் டாம் அன் ஜெர்ரி கார்ட்டூன் படம் பாக்கிற மன நிலைக்குப் போய் , ” ம்ம். அப்புறம் … சொல்லு .. சொல்லு .. வேற .. வேற … ? ” என்ற இயல்புக்கு வந்து விடுகிறோம் .
அந்த தியேட்டர் சண்டைக் காட்சிக்குப் பின்பு, டாக்டரிடம் எல்லாம் போகாமல், நாயகியே மண்டைக்குள் இருந்த தண்ணீர்த் தொட்டியை எல்லாம் உடைக்காமல் ”உனக்கு ரெஸ்ட் தேவை . வா வெளியே போய் விட்டு வரலாம்” என்று அதட்டி சொல்லி , கிளம்பி வந்த இடத்தில் படத்தில் இப்போது காட்டப்படும் சம்பவங்கள் எல்லாம் வந்து இருந்தால் படம் நிஜமாகவே அதிர- மயிர்க்கூச்செறிய வைத்திருக்கும் .
அதன் பிறகு டாக்டர் மூலம் MIND BLOCK எனப்படும் சிந்தனை முடக்க நோய் பற்றிச் சொல்லி விளக்கி இருந்தால் படம் பார்ப்பவர்கள் அசந்து போயிருப்பார்கள் .
இந்தப் படம் சொல்லும் முக்கிய விசயமே ”ஒழுங்கா தூங்குங்கடா/ டி ” என்பதுதான் . அதை என்னமோ, ‘கேட்டா கேட்டுக்கோ கேக்காட்டி போ’ என்ற ரீதியில் போகிற போக்கில் வீசி எறிந்து விட்டுப் போகிறார்கள் . கோபம் வருதுங்க .
பெரும்பாலான உயிர்களுக்கு இரவு என்பது தூங்குவதற்குத்தான்… குறிப்பாக மனிதனுக்கு அப்படித்தான் ..பின்னாளில் பவுர்ணமி போன்ற நாட்களில் நிலா வெளிச்சத்தில் இந்திர விழா போன்ற தூங்காமல் கழிக்கும் பண்டிகைகள் வந்தாலும் அந்த இயற்கை வெளிச்சம் மனிதன் மறுநாள் இயல்பாக தூங்கிவிடும் அளவுக்கே இருந்தது . அன்றைய உடல் உழைப்பு வாழ்க்கையும் ஒரு காரணம் .
மின்சாரம் வந்த பிறகு இரவு நேர வேலைகள் அதிகரித்தன . அப்போது கூட அது உடலை சோர்வாக்கும் நிலையில்தான் இருந்தது . அது கூட பெரிதாகப் பிரச்னை தரவில்லை .

ஆனால் கம்ப்யூட்டர், செல்போன்களில் இருந்து வரும் நீல நிற ஒளியை கண்கள் வழியே ப்ராசஸ் செய்ய மூளை மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டி உள்ளது . எனவே இவற்றோடு அதிக நேரம் வேலை செய்பவர்களின் மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கும் நிலைக்குப் போய் விடுகிறது . அமைதி கொள்வதே இல்லை. தூங்க வேண்டிய சமயத்தில் உடல் தூங்க விழைந்தாலும் மூளையின் தன்மை மாறி எப்போதும் விழிப்பு நிலையில் இருப்பதால் தூங்க முடிவதில்லை . இதனால் மூளை மட்டுமின்றி இதயம் , கிட்னி உட்பட பல உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றன .
ஒரு பிரபல அரசியல் தலைவரே ”இப்போதெலாம் நான் படுக்கும்போது உடம்புதான் தூங்குகிறது . என் மூளை விழித்துக் கொண்டே தான் இருக்கிறது ” என்று மேடையிலேயே புலம்பிய சம்பவம் நடந்தது .
இப்படியே போனால் போகப் போக தூக்கமின்மையால் மன நலம் பாதிக்கப்படும் ஒரு சமுதாயமே உருவாகும் . முக்கியமாக மாரடைப்பால் திடீர் மரணங்கள் அதிகரிக்கும்
இது தொடர்ந்தால் இனி உலகில் மனிதனுக்கு மிக மிக கஷ்டமான வேலை என்பது உழைப்பது அல்ல … சம்பாதிப்பது அல்ல… தூங்குவதுதான் “
இவ்வளவு விஷயம் இருக்கு .
இவற்றில் சிலவற்றையாவது நல்ல விஷுவல்கள் , பின்னணிக்குரல் அல்லது நல்ல முகம் இவற்றின் மூலம் அழுத்தமாக சொல்லி இருந்தால் இந்தப் படம் சும்மா தெறிக்க விட்டிருக்கும்.
MIND BLOCK எனப்படும் சிந்தனை முடக்க நோய் என்றால் என்ன என்பதை விளக்குவதில் காட்டிய அதே ஆர்வத்தை , சொல்லப் போனால் அதை விட அதிக ஆர்வத்தை இதில் அல்லவா காட்டி இருக்க வேண்டும் ?
அது இல்லாத காரணத்தால் … முல்லை இங்கே. வசந்தம் எங்கே?