இண்டஸ் என்டர்டைமென்ட்ஸ் சார்பில்,
தரவு விஞ்ஞானியும் கலை ஆர்வலரும் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்ற நவம் மற்றும் ஓடம் குறும்படங்களின் தயாரிப்பாளருமான அஜய் சம்பத்,
மைக்ரோ சாஃப்ட் மற்றும் ஸ்கைப் நிறுவனங்களின் முன்னாள் இயக்குனரும் அனுபவம் மிக்க தொழில் நுட்ப நிர்வாகியுமான திகா சேகரன் ,
டென்ட் கொட்டா நிறுவனம் சார்பில், மென்பொருள் பொறியாளரும் ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட படங்களின் அமெரிக்க விநியோக உரிமை பெற்றவருமான வருண் குமார்
ஆகியோர் தயாரிக்க,
மென்பொருள் பொறியாளரும் , மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிபவரும் மேற்படி ஓடம் மற்றும் நவம் குறும்படங்களின் இயக்குனருமான விவேக் இளங்கோவன் இயக்க ,
நடிகர் விவேக், சார்லி, பூஜா தேவரியா, வாயை மூடிப் பேசவும் , ஒரு நாள் கூத்து ஆகிய படங்களில் நடித்த தேவ், நடிகை, தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட ஹாலிவுட் நடிகை பெய்ஜ் ஹென்டர்சன் ஆகியோர் நடிப்பில்
உருவாகி இருக்கும் படம் வெள்ளைப் பூக்கள் .
படத் தொகுப்பு பிரவீன் கே எல் . ஒலி வடிவமைப்பு குணால் ராஜன், பாடல்கள் மதன் கார்க்கி , வண்ண ஆக்கம் பாலாஜி கோபால் .
மென்பொருள் பொறியாளரும் வணிக ஆய்வாளரும் ஓடம் மற்றும நவம் படங்களின் ஒளிப்பதிவாளருமான ஜெரால்டு பீட்டர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் .
அமேசான் நிறுவன மென் பொருள் பொறியாளரும் தமிழக அரசால் கலை இளமணி விருது பெற்றவரும் , ஓடம் மற்றும் நவம் படங்களின் இசையமைப்பாளருமான ராம் கோபால் கிருஷ்ண ராஜு இசை அமைத்துள்ளார் .
விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்
தயாரிப்பாளர்கள் அஜய் சம்பத், திகா சேகரன் , வருண் குமார், இயக்குனர் விவேக் இளங்கோவன் , நடிகர்கள் விவேக் சார்லி , நாயகன் தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர் .
படத்தின் முன்னோட்டம் , பாடல்கள், சில காட்சிகள் திரையிடப்பட்டது .முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட்டிருக்கும் படம் என்பது தெரிந்தது .
ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான விவேக், அமெரிக்கா போன இடத்தில் அங்கே ஒரு கொலைகாரனை துப்பறிவதாக கதை போவது முன்னோட்டம் மற்றும் திரையிடப்பட்ட காட்சிகளில் தெரிந்தது தெரிந்தது .
இந்த முகங்களும் பழகிப் போகும் என்ற பாடல் கருத்திலும் மெட்டிலும் இனிமையாக இருந்தது .
நிகழ்ச்சியில் பேசிய அஜய் சம்பத் , ” எங்களது இண்டஸ் குழுமம் சார்பாக நிறைய நாடகங்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறோம். குறும்படங்கள் எடுத்து இருக்கிறோம் . இது முதல் படம் .
புதிய குழுவான எங்களை மதித்து எங்களை நம்பி விவேக் சார் அமெரிக்கா வந்ததே மிகப் பெரிய விஷயம் . நடிக்க ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்த விவேக் சார், சார்லி , மற்றும் அனைவருக்கும் நன்றி . எங்களுக்கு தமிழ் ரசிகப் பெருமக்களின் ஆதரவு வேண்டும் ” என்றார் .
திகா சேகரன் பேசும்போது , “நாங்கள் எல்லோருமே இந்த மண்ணை சேர்ந்தவர்கள்தான் . வேலை நிமித்தம் அமெரிக்கா போனோம் . எங்களை தமிழ் நாட்டோடு தொடர்ந்து இணைத்து வைத்தது சினிமாதான் .
எனவே கலை ஆர்வம் கொண்டு பல மேடை மற்றும் குறும்பட படைப்புகளை கொடுத்தோம் . இப்போது முதல் படத்தை எடுத்து இருக்கிறோம் இதை பெரிய படைப்பாக்கும் அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்த விவேக் சாருக்கும் சார்லி சாருக்கும் நன்றி ” என்றார் .
வருண் குமார் தன் பேச்சில் , “எங்களுக்கு சினிமா புதிது . விவேக் சாரும் சார்லி சாரும்தான் எங்களுக்கு ஆலோசனை வழங்கி அறிவுரை தந்து நல்ல படியாக படத்தை எடுக்க உதவினார்கள். டிரான்ஸ்ஃபார்மர் படம் எடுத்த லொக்கேஷனில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம் .
படம் மிக நன்றாக வந்திருக்கிறது இந்தப் படம் வெற்றி பெற எல்லோரின் ஆதரவும் வேண்டும் . நான் விஜய்யின் மிகப் பெரிய ரசிகன் . விவேக் சார் விஜய்யுடன் நடித்துள்ளார் . இந்த படம் வெளிவந்த உடன் விஜயை சந்திக்க விவேக் சார் உதவ வேண்டும் ” என்றார் .
இயக்குனர் விவேக் இளங்கோவன் தனது உரையில் , ” தமிழ் சினிமாவுக்கும் தமிழ் படங்களுக்கும் முதல் வணக்கமும் நன்றியும் . அந்த படங்கள்தான் எங்களை இப்போது படம் எடுக்க வைத்துள்ளது . தயாரிப்பாளர்களோடு சேர்ந்து நான் பல படைப்புகள் தந்துள்ளேன் .
நாடக , திரைப்பட இயக்குனர் பணியில் ஈடுபட்டு, குறும்படங்களை இதே தயாரிப்பாளருக்காக இயக்கியுள்ளேன் . இது முதல் படம் . விவேக் சார்லி போன்றோர் கொடுத்த ஒத்துழைப்பு என்றென்றைக்கும் மறக்க முடியாத ஒன்று . அனைவரின் அன்புக்கும் நன்றி ” என்றார் .
நடிகர் தேவ் பேசும்போது, “விவேக் சார்லி இருவரும் எவ்வளவு பெரிய சீனியர்கள் . ஆனால் என்னோடு மிக இயல்பாக பழகினார்கள் . அறிவுரை தந்து வழிகாட்டினார்கள் .
என்னை நாயகனாக தேர்ந்தெடுத்த தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் ஆகியோருக்கு நன்றி ” என்றார் .
நடிகர் சார்லி பேசுகையில் , ” விவேக் மிக சிறந்த கலைஞன் . அவரோடு முப்பது ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் நடிக்கிறேன் . ஒரு சாதாரண வெளிப்புறப் படப்பிடிப்பிற்கு போனாலே உணவு இருப்பிடம் இவற்றில் சில தாமதங்கள் வரும் .
ஆனால் இவர்கள் அமெரிக்காவில் சியாட்டில் நகரில் எங்களை கவனித்துக் கொண்ட விதம் நாங்கள் சென்னையில் சொந்த வீட்டில் இருப்பது போல இருந்தது. அப்படி சிறப்பான தயாரிப்பாளர்கள் இவர்கள் ” என்றார் .
நிகழ்ச்சியின் நிறைவாக பேசிய விவேக் , ” சார்லி சொன்னது போல இந்த தயாரிப்பாளர்கள் மிக அருமையானவர்கள் . அவர்கள் கவனித்துக் கொண்ட விதம் அபாரமானது . உண்மையில் இவர்கள் என்னை ஷூட்டிங்குக்கு அழைக்கும்போது, எனக்கு சியாட்டில் நகரம் எங்கே இருக்கிறது என்பதே தெரியாது.
ஆனால் அங்கே போனபிறகு சிறு குறையும் இல்லை . படத்தில் ஒரு முக்கியமான கேரக்டருக்கு சார்லி சிறப்பாக இருப்பார் என்பதை சொன்னேன் . அவர் பங்களிப்பு மிக சிறப்பாக வந்துள்ளது . பாலியல் கொடுமைக்கு எதிரான எப்படி செயல்பட வேண்டும் என்பதை இந்தப் படம் சொல்லும்
பெரிய பெரிய ஹீரோக்களும் இயக்குனர்களும் இந்த நிறுவனத்துக்கு படம் செய்ய வேண்டும் . அதற்கான தகுதியும் பண்பும் இவர்களுக்கு உண்டு ” என்றார் .
வெற்றியில் மலர்க வெள்ளைப் பூக்களே !