வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்@விமர்சனம்

vellai 1

தேவன் சூ ஆர்யா மற்றும் ரவி வர்மன் ஐ எஸ் சி இணைந்து தயாரிக்க, பிரவீன் குமார், ஷாலினி வட்னி கட்டி , பால சரவணன், சனம் ஷெட்டி நடிப்பில் ஏ.எல்.அபநிந்திரன் இயக்கி இருக்கும் படம் வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் . வேறு என்ன சொல்வான்? பார்க்கலாம் 

உடம்பு சரியில்லாத தனது அப்பாவின் (ஜெயப்பிரகாஷ்) மருத்துவ சிகிச்சைக்காக கந்து வட்டி தாதா ஒருவனிடம் (அருள்தாஸ்) அறுபது லட்சம் பணம் வாங்குகிறான்,  ஒரு மிடில் கிளாஸ் சாஃப்ட்வேர் என்ஜினீயரும் அப்பா மீது அதீத பாசம் கொண்டவனுமான கார்த்திக் (பிரவீன் குமார் ). 

பணத்தை கார்த்திக்கால் கொடுக்க முடியாத நிலையில்,  கந்து வட்டி தாதா கார்த்திக்கின் மனைவி அருணாவுக்கு (சனம் ஷெட்டி) குறி வைக்கிறான். 

வேறு வழியில்லாமல் எப்படியாவது பணம் திரட்ட முடிவு செய்யும் கார்த்திக் ,தன்னைக் காதலித்து விட்டு , பிறகு வேறொருவனை மணந்து கொண்டு இப்போது பணக்காரியாக வாழும் பூஜாவை (ஷாலினி வட்னி கட்டி) வைத்து ஒரு திட்டம் போடுகிறான். 

பூஜாவும் தானும் காதலிக்கும்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவளுக்கு அனுப்பி , தனது நண்பனும் கார் டிரைவருமான மணி (பால சரவணன் ) மூலம் அவளை மிரட்டி ஐம்பது லட்சம் பணம் கேட்கிறான் . 

vellai 4

திட்டம் போட்டதே கார்த்திக்தான் என்பதை அறியாத பூஜா அவனை அழைத்து உதவி கேட்கிறாள் . கடத்தல்காரனை கார்திக்கையே டீல் செய்யச் சொல்கிறாள் . டாக்டரான தன் கணவன் ரகு (கார்த்திக் குமார் ) செய்த ஒரு தவறான ஆபரேஷன் பற்றிய தகவல்களைக் கூறி ”அதை வைத்து என் கணவனை மிரட்டி ஐம்பது லட்சம் வாங்கிக் கொள்ளச் செய்” என்கிறாள் .

மிரட்டப்படும் ரகு தன்னிடம் பணம் இல்லாத நிலையில் அந்த ஆபரேஷனை யாருக்காக செய்தானோ அந்த நபரை (ஞானவேல் ) மிரட்டி பணம் வாங்கிக் கொள்ளச் சொல்கிறான் . 

அந்த நபர் ஒரு காண்டிராக்டருக்கான ஒரு சிக்கலைக் கண்டு , அதைத்  தீர்க்க ஒரு கோடி ரூபாய் ஆகும் என்று காண்ட்ராக்டரிடம் சொல்கிறார் . ஐம்பது லட்ச ரூபாயை கொடுத்து விட்டு ஐம்பது லட்ச ரூபாயை தான் சுருட்டிக் கொள்வது அவரின் திட்டம் . 

காண்ட்ராக்டர் ஒரு போலீஸ் அதிகாரி செய்த தவறை அந்த அதிகாரியிடம் சொல்லி, அதைத்  தீர்க்க இரண்டு கோடி கேட்கிறார் . ஒரு கோடியை கொடுத்து விட்டு இன்னொரு கோடியை தான் வைத்துக் கொள்ளலாம் என்பது காண்ட்ராக்டரின் திட்டம் . 

இப்படியே இந்த செயின் போலீஸ் அதிகாரி , எம்.பி ,, மினிஸ்டர் , சுப்ரீம் கோர்ட்டு லாயர், ஜட்ஜ் என்று முன்னேறிப் போய் , கடைசியில் ஆள், பணம் , அதிகாரம்  ஆகிய சர்வ பலன்களும் கொண்ட-  ‘பெரியவர்’ என்கிற ஒரு பெரும் புள்ளியிடம் (ஆடுகளம் நரேன்)  போகும்போது டிமாண்ட்  தொகை நூறு கோடி ஆகி நிற்கிறது. 

vellai 2

என்னவோ தப்பிருக்கிறது என்று உணரும் பெரியவர் அப்படியே நூல் பிடித்து ஜட்ஜ், லாயர், மினிஸ்டர், எம்.பி, போலீஸ் அதிகாரி, காண்ட்ராக்டர் எல்லாரும் செய்த ஃபிராடுகளையும் கண்டு பிடித்துக்  காறி உமிழ்ந்து கொண்டே இறங்கி வந்தால்…

கடைசியில் அந்த மகா மகா பெரியவரும் கார்த்திக்கும் ஒத்தைக்கு ஒத்தை நிற்கிறார்கள் . அடுத்து என்ன நடந்தது என்பதே , இந்த வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் 

அடிப்படையில் நல்லவனாக இருக்கும் ஒரு தனி மனிதனுக்கு தனது வாழ்வில் ஒரு சிக்கல் வரும்போது , அவன் தன்னை வேறு காரணங்களுக்காக ஏமாற்றிய நபர்களை, இந்த சந்தர்ப்பத்தில் ஏமாற்றுவதில் தவறில்லை என்று முடிவு செய்கிறான் என்பதை மனோவியல் ஆய்வாக சொல்கிறார் இயக்குனர் .

அதே நேரம் தப்பு செய்யும் ஒவ்வொரு நபருமே அதில் இருந்து மீள , தன்னை விட பெரிய குற்றவாளியை அதில் சிக்க வைத்து அதன் மூலம் தான் மீள முயல்வது மட்டுமல்ல , அதில் கூட  நியாயமாக இல்லாமல் அதிலும் லாபம் கிடைக்குமா என்று பேராசையுடன் யோசிப்பதன் மூலம் எந்த அளவுக்கு மன அழுகலுக்கு குணச் சீரழிவுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று சொல்லும் மனோவியல் பார்வை அபாரம் .

கார்த்திக் என்ற தனி மனிதன் தன் தேவைக்கு செய்யும் ஒரு தவறு இந்த குண அழுகல் காரணமாக எப்படி சுப்ரீம் கோர்ட் வரை வெடித்துக் கொண்டே போகிறது என்பதை சொலும் திரைக்கதை அங்கிருந்து பேக் ஃபயர் ஆகி திரும்பும் விதம் திரைக்கதையின் பலம் .

vellai 6

கடைசியில் ‘திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட கதாபாத்திரங்களே குற்றத்தை உணர்வதாக சொல்லும் இடம் சிறப்பு.

அந்த மாற்றத்துக்குக் கூட சாதாரண மனிதன்தான் தயாராக இருக்கிறானே தவிர , பணமும் அதிகாரமும் கொழுத்தவர்கள் தயாராக இல்லை என்பதை சொல்லும் வகையிலும் அப்ளாஸ்களை அள்ளுகிறார் இயக்குனர் அப நிந்திரன் .

ராமலிங்கம் என்கிற நேர்மையான – நோயாளி அப்பாவாக ஜொலிக்கிறார் ஜேப்பி எனப்படும் ஜெயப்பிரகாஷ்.

கார்த்திக்காக வரும் பிரவீன் குமார் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார் . நடிக்கிறார் . அருணாவாக நடித்திருக்கும் சனம் ஷெட்டி,  பாந்தமான மனைவி கேரக்டருக்கு ஒகே  . ஆனால் வாய்ப்புக் கம்மி.

பூஜாவாக வரும் ஷாலினி வட்னி கட்டி மேற்கத்திய காஸ்மாபாலிட்டன்தனமான தோற்றம் மட்டும் நடை உடை பாவனையில் அசத்துகிறார் .

பூடகமான பெரியவர் கேரக்டரின் பாத்திரப் படைப்பில், அவர் யார் என்ன என்று விளக்காத குறை இருந்தாலும் ஆடுகளம் நரேன் அந்த கேரக்டரை காட்சிகளில் காப்பாற்றி விடுகிறார் .

கந்துவட்டிக்காரனாக வரும் அருள்தாசும் சிறப்பு. 

இரண்டாம் பகுதியில் நகைச்சுவை  என்று எண்ணிக் கொண்டு இயக்குனர் எடுத்த சில காட்சிகள் மொக்கையாகப் பல்லிளிக்கின்றன . ஒருவேளை அந்த ‘இளிப்பு’தான் நகைச்சுவையோ என்னவோ ?

vellai 5‘’உன்னை காதலிக்க எனக்கு புடிச்சது. ஆனா கல்யாணம்னு யோசிக்கும்போது சரியா படல ‘’ என்று ஜஸ்ட் லைக் தட் பூஜா சொல்வதும் அதை அதை விட ஜஸ்ட் லைக் தட் கார்த்திக்கும் அந்த கதாபாத்திரம் வழியே இயக்குனரும் கடந்து போவது அக்கிரம அராஜக அநியாயம் .

மனைவி செய்த தவறை மன்னிக்க பூஜாவின் கணவன் ரகு சொல்லும் காரணம் செம காமெடி ! படத்துலயே பெஸ்ட் ஜோக் அதான் பாஸ் .

இந்தக் கதையை  இவ்வளவு மேட்டுக் குடித்தனத்தோடு எடுத்து இருக்காமல் ஒரு சாதாரணமான  இன்னும் எளிய நபராக கார்த்திக் கேரக்டரை படைத்து அதில் கொஞ்சம் சமூக அரசியல் விசயங்களையும் சேர்த்து உருவாக்கி இருந்தால் .. படம் பரபரப்பான பேசு பொருளாகி இருக்கும் .

எனினும் தமிழ் சினிமாவில் அரைத்த மாவையே அரைக்கும் கொடுமையைக் குறைக்கும் விதையை இது போன்ற படங்கள்தான் வீரியமாக விதைக்க முடியும். 

வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் ….. கவனிக்கத்தக்க , வித்தியாசமான முயற்சி

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →