தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தி சினிமாவிலும் பிரபல ஒளிப்பதிவாளராக புகழ்பெற்று விளங்கும் நம்ம ஊர்க்காரர் மற்றும் இயக்குனராகவும் அறியப்பட்டவரான ரவிவர்மன் ISC இணை தயாரிப்பாளராக இயங்க,
இக்னைட் பிலிம்ஸ் சார்பில் தேவன் சூ ஆர்யா , வச்சன் ஷெட்டி ஆகியோர் தயாரிப்பில் பிரவீன் குமார் என்ற புது முகத்துடன் ஆடு களம் நரேன் , கார்த்திக் குமார் ஆகியோர் நடிக்க, ஏ.எல்.அபநிந்திரன் என்பவர் எழுதி இயக்கும் படம் ‘வெள்ளையா இருக்கறவன் போய் சொல்ல மாட்டான்’
காமெடி வசனங்கள் எல்லாம் படத்தின் டைட்டிலாக வரும்படியான ஒரு ட்ரெண்டில், ட்ரெட் மில் ஓட்டுகிற இந்தக் காலத்துக்கு பொருத்தமாக வந்திருக்கும் இந்தப் படம், சமூகத்தில் வியாபித்திருக்கிற தவறான – கண்மூடித்தனமான – கருத்துகளை நகைச்சுவையாக விமர்சிக்கும் படமாம்.
புற்று நோயால் பாதிக்கப்பட்ட தந்தையின் அறுவை சிகிச்சைக்காக , பணம் இல்லாமல் திண்டாடும் நாயகன் கந்து வட்டிக்குப் பணம் வாங்கி விடுகிறான் , அதை திருப்பித்தர முடியாத நிலை.
குறித்த காலத்தில் பணம் தரவில்லை என்றால் நாயகனின் மனைவியை அபகரித்து விடுவதாக கந்து வட்டிக்காரன் மிரட்ட, பணம் புரட்ட நாயகன் எடுக்கும் முயற்சிகளும் , வழக்கத்துக்கு மாறான நடவடிக்கைகளும் அதனால் நிகழும் சம்பவங்களும் நகைச்சுவையாக ஆரம்பித்து விபரீதத்தில் போய் முடிவதை சொல்லும் படமாம் இது .
படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னோட்டத்தையும் கபிலன் வைரமுத்து எழுதிய ஓர் இனிய பாடலையும் திரையிட்டார்கள். மேலே சொன்ன கதையை ஓரளவு விளக்குமளவுக்கு முன்னோட்டம் இருந்தது .
முன்னோட்டத்தின் இறுதியில் வரும் ” பொய் சொல்றதுக்கும் ஏமாத்தறதுக்கும்தான் தைரியம் வேணும்னு நிறைய பேர் நினைக்கிறாங்க . ஆனா நேர்மையா இருக்கறதுக்குதான் உண்மையிலேயே தைரியம் வேணும் ” என்ற வசனம் அற்புதம். பாராட்டுகள்.
நிகழ்ச்சியில் பேசிய ரவிவர்மன்
“வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் என்று சொல்வதன் மூலம் கருப்பு நிறத்தவர்களை தவறாக சித்தரிக்கும் படம் அல்ல இது . வெள்ளை என்பதை நல்ல குணமாக – வெள்ளை மனசு என்ற எண்ணத்தில்தான் சொல்லி இருக்கிறோம்
( அதே நேரம் புகழேந்தி எழுதி இருக்கும் டைட்டில் பாடலில் ”வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் . கருப்பா இருக்கறவன் உண்மையதான் சொல்வான் ” என்று வரிகள் வருகின்றன )
அபநிந்திரனும் நானும் பல்லாண்டுகால நண்பர்கள் . அவர் இந்தக் கதையை ரொம்ப காலமாக சொல்லி வந்தார். நான் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிவதாகத்தான் இருந்தது . ஆனால் அவருக்கு தயாரிப்பாளர் கிடைக்காத நிலையில் ஒரு நிலையில் நானும் ஒரு தயாரிப்பாளராக களம் இறங்கினேன் .
அப்போதே நாம் ஒளிப்பதிவு செய்ய வேண்டாம் . தயாரிப்பாளராக மட்டும் இருப்போம் என்று முடிவு செய்தேன் . ஏனென்றால் அது வேறு மன நிலை . இது வேறு மன நிலை . பிறகு சாரங்கராஜனை ஒளிப்பதிவாளராகப் போட்டோம் ” என்றார் .
இயக்குனர் அபநிந்திரன் ” ராஜீவ் மேனன் சாருடன் கண்டு கொண்டேன் படத்தில் பணியாற்றினேன் . அந்தப் படம் முடிந்த உடன் இந்தப் படத்தை இயக்க முடிவு செய்தேன். ஆனால் தயாரிப்பாளர் கிடைக்க பனிரெண்டு வருஷம் ஆகிவிட்டது . இடையில் நிறைய விளம்பரப் படங்கள் செய்து இருக்கிறேன் . எனினும் எனது திரைப்படக் கனவை நனவாக்கியவர்கள் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள்தான் .
இந்தச் சமூகம் மனிதர்களை எப்படி மதிப்பீடு செய்கிறது; மனிதர்கள் எப்படி சூழலுக்கு ஏற்றவாறு மாறுகிறார்கள் ; அல்லது சூழலை மாற்றுகிறார்கள் என்பதை நகைச்சுவையோடு சொல்லி இருக்கிறேன் ” என்றார் .
ஆடு களம் நரேன் பேசும்போது ” அப நிந்திரன் எனக்கு பல ஆண்டுகள் தெரிந்த நண்பர் . ரொம்ப நாட்கள் முன்னாடியே இந்தக் கதை எனக்குத் தெரியும். ரொம்ப நல்ல கதை . அதில் வரும் பெரியவர் என்ற ஒரு வில்லன் கேரக்டர் ரொம்ப அற்புதமானது . அதற்கு யாரைப் போடுவார் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்.
கடைசியில் ‘அதை நீங்கதான் பண்றீங்க’ என்று அபநிந்திரன் சொன்னபோது ரொம்ப சந்தோஷமா இருந்தது. காரணம் அந்த கேரக்டர் அப்படிப்பட்டது .
பொதுவா எனக்கு வரும் கேரக்டர் எல்லாம் இன்ஸ்பெக்டர் , அப்பா, அதிலும் பாசமான அப்பா , அல்லது கொஞ்சம் வில்லத்தனமான அப்பா …” என்றுதான் வருகிறது . நம் நடிப்பை ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது சந்தோஷமான விஷயம்.
ஆனால் வித்தியாசமா பண்ணனும்னு நமக்கு ஆசை இருக்கும் இல்லையா ? அந்த ஆசையை நிறைவேற்றும் கேரக்டர் இது ” என்றார் . (அதற்கேற்ப அடிக் குரலில் மெதுவாகப் பேசி குரல் நடிப்பிலும் நரேன் அசத்தி இருப்பது முன்னோட்டத்திலேயே தெரிகிறது )
சுமார் 25 ஆண்டுகள் உதவி மற்றும் இணை இயக்குனராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர் சூப்பர் குட் சுப்பிரமணி . இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார் . இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான கமிஷனர் வேடத்தில் நடித்து இருக்கிறாராம் இவர்.
நிகழ்ச்சியில் பேசிய சுப்பிரமணி
“ஒரு இயக்குநராகத்தான் பத்திரிக்கையாளர்கள் முன் மேடை ஏற வேண்டும் என்று நினைத்தேன் . ஆனால் இந்தப் படத்தின் மூலம் ஒரு நடிகனாக மேடை ஏறி விட்டேன் .படத்தில் ஒரு வித்தியாசமான கமிஷனர் கேரக்டரில் நடித்து இருக்கிறேன் . ” என்றார் .
படத்தின் நாயகன் பிரவீன் குமார் ஓங்குதாங்காக ஆனால் அமைதியான முகத்துடன் இருக்கிறார்.
“ஸ்கூல்ல பிரேயர் கிளாஸ்ல நாளைக்கு பேசணும்னு சொன்னா இன்னிக்கே லீவ் போட்டுட்டு ஓடிருவேன் . ஆனா என்னை ஹீரோவாக்கி இருக்கிற இயக்குனரையும் தயாரிப்பாளர்களையும் மறக்க மாட்டேன் ” என்றார்
எனக்குள் ஒருவன் படத்தில் நிஜ விஞ்ஞானியாக வந்து அசத்திய கார்த்திக்,
இந்தப் படத்தில் ஒரு ஏமாற்றும் ஆர்க்கிடெக்ட் ஆக நடித்துள்ளார்.
லிங்கா உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கும் கபீரப்பா இந்தப் படத்தில் கந்தன் என்ற கேரக்டரில் ,
ஆடுகளம் நரேனின் கையாளாக — அவர் சொல்லும் எதையும் ஒழுங்காகச் செய்யாமல் அடிவாங்கும் கேரக்டரில்- நடித்து இருக்கிறார் .
”படத்தை வாங்கி வெளியிடும் கலைப்புலி எஸ். தாணுவுக்கு நன்றி”
என்றார் தயாரிப்பாளர் தேவன் சூ ஆர்யா
படத்தின் கதாநாயகி ஒரு ஆந்திரப் பொண்ணு . சில வார்த்தைகள் மட்டுமே தமிழ் பேசுகிறது . அடுத்த படத்தில் நல்ல தமிழ் பேசுவேன் என்கிறது . (ஆனால் ‘பேசுவேன்’ என்ற வார்த்தையை அவ்வளவு திருத்தமாக சொல்கிறது . எங்கயோ இடிக்குதே !) பெயர் ஷாலினி வட்னி கட்டி . ஷாலினி வட்னி கட்டி என்பது, வட்டி கட்டி என்று காதில் விழ ஒரு நிமிடம் அதிர்ச்சி .
கந்து வட்டி பற்றிய படத்தில் நடிக்க கதாநாயகியையே வட்டிகட்டச் சொல்லி விட்டார்களோ என்று .
நல்ல வேளை அப்படி எதுவும் இல்லை (கருப்பா இருக்கிற நாங்கள்லாம் உண்மையதான் சொல்வோம்)