தருண் காந்த் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் கஞ்சா கருப்பும் இயக்குனர் கோபியும் சேர்ந்து தயாரிக்க, அங்காடித் தெரு மகேஷ், ஆருஷி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடிக்க, தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் கோபி இயக்கி இருக்கும் படம் வேல்முருகன் போர்வெல்ஸ்.
படத்தில் ரசனை நீர் பீய்ச்சி அடிக்கிறதா ? பார்க்கலாம் .
நிலத்தடி நீர் ஆதாரத்தையே அதிகம் நம்பும் சிவகங்கை பகுதியில் தண்ணீர் போர் போடும் தொழிலை வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற பெயரில் நடத்தி வரும் உரிமையாளர் கஞ்சா கருப்புவிடம் வேலை பார்ப்பவர்கள் மகேஷ், தீப்பெட்டி கணேசன் வெங்கல்ராவ் முதலிய நண்பர்கள்.
மகேஷ் தனது அம்மாவை இழந்த நிலையில் மகேஷின் தந்தையும் சிறுமிகளான இரண்டு தங்கைகளும் ஊரில் கஷ்டப்பட, தனக்கு வரும் மனைவி தன் தந்தையையும் தங்கைகளையும் நன்கு கவனிப்பவளாக இருக்க வேண்டும் என்பதே மகேஷின் ஆசை .
இந்த நிலையில் பட்டிமன்றம் ஒன்றில் கலந்து கொண்டு ”தாரத்தை விட தாயே உயர்ந்தவள்” என்று பேசும் ஆருஷி, அதன் உச்சகட்டமான விவாதத்தில் ”நான் திருமணம் செய்து கொண்டு போகும் வீட்டில் என் கணவனுக்கு நல்ல மனைவியாக இருக்கும் அதே நேரம் புகுந்த வீட்டின் மற்ற உறவுகளுக்கு ஒரு தாயாகவும் இருப்பேன்” என்று கூற , அதை மகேஷ் கேட்கிறார் . அடுத்த சிலநாளில் அந்தப் பெண்ணை நேரில் பார்த்து ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றும் வாய்ப்பும் கிடைக்க , அப்படியே அந்தப் பெண் மீது காதல் வருகிறது.
அந்தப் பெண்ணின் ஊருக்கு சென்று அவள் வீட்டு முன்னாள் இலவசமாக ஒரு போர் போட்டுக் கொடுத்து அப்படியே காதலை சொல்லலாம் என்று முடிவு செய்து, முதலாளி ஊரில் இல்லாத நிலையில் மகேஷ் அன் கோ கிளம்பிப் போய் அப்படியே போரிங்கும் போட, தண்ணீர் பிடிக்க வந்த அந்த ஊர் மக்களுக்குள் சண்டை வந்து அது பெரிய கலவரமாக மாறுகிறதாம்.
இதற்கு மேல் ஊருக்குள் இருந்தால் நம்மை கொன்று விடுவார்கள் என்று மகேஷ் தனது நண்பர்களோடு போர் வண்டியில் ஏறி கிளம்ப , ஊர் மக்கள் துரத்த, அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மீது வண்டியை மோத, பலரும் படுகாயம் அடைகிறார்கள். கடைசியில் எல்லோரும் ஊர் மக்களிடம் சிக்க, “போரிங் போட்டது நல்ல காரியம்தான் என்றாலும் அடிபட்டவர்கள் குணம் ஆகும் வரை அந்த குடும்பங்களுக்கு நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்” என்று கூறி மகேஷ் மற்றும் நண்பர்களை சிறை பிடிக்கிறது ஊர்.
ஊரில் விவசாய மற்றும் மரம் ஏறும் வேலைகளால் பல கஷ்டங்களை அனுபவித்தாலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்தப் பெண்ணுக்கு காதலை புரிய வைக்க மகேஷ் நினைக்க, அப்போதுதான் இடி போன்ற அந்த செய்தி கிடைக்கிறது.
மூன்று தலை முறைகளுக்கு முன்பு ஒரு காதலால் ஊரில் பெரிய கலவரம் வந்து பலரும் கொல்லப்பட, அப்போது செத்துப் போனவர்களை சாமியாகக் கும்பிடும் அந்த ஊரைச் சேர்ந்த யாரும் காதலிக்கவே மாட்டார்கள் என்ற செய்திதான் அது .
இந்த நிலையில் போர் போடுவதற்காக பலரிடம் அட்வான்ஸ் வாங்கியும் வண்டி எங்கே இருக்கிறது என்று தெரியாமல் தேடும் கஞ்சா கருப்புவின் கதி என்ன ஆனது? மகேஷின் காதல் நிறைவேறியதா ? என்பதே இந்த படம் .
ஒரு போர்வெல் வண்டி, அதில் வேலை செய்யும் நபர்கள் அவர்களின் வாழ்க்கை என்ற களம் உண்மையிலே வித்தியாசமானது. அதனால் இயல்பாகவே சில சுவாரசியங்கள் ஏற்படுகிறது.
மகேஷ் , கஞ்சா கருப்பு ,ஆருஷி , மற்றவர்கள் என்று படத்தில் எளிய தன்மைக்கு பொருத்தமாக இருக்கிறார்கள்.
தனது தெய்வமான போர்வெல் வண்டி கிராமத்தில் வரட்டி தட்டும் சுவராகவும் துணி காயப் போடக் கொடி கட்டும் இடமாகவும் இருப்பது கண்டு கதறும் காட்சியில் அட்டகாசமாக நடித்து கண்களை கலங்க வைத்து, “எனக்கும் நடிக்க தெரியும்” என்று, தனது சினிமா கேரியரிலேயே முதன் முதலாகக் காட்டி இருக்கிறார் கஞ்சா கருப்பு.
கஞ்சா கருப்புவின் மனைவியாக ‘சிரிச்சு சிரிச்சு வந்தான் சீனா தானா’ பாட்டுக்கு ஆடிய ரகஸ்யா நடித்து இருக்கிறார் . கவர்ச்சி என்று நம்பி அந்த கேரக்டருக்கு அவரை போட்டு இருக்கிறார்கள் . ஆனால் முதல் நாலு எழுத்தையும் தவிர்த்துவிட்டுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.
இசையில் வழக்கமான குத்து குத்தி இருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா .
விட்டேத்தியாக முதல் பாதி கடக்க, படத்தின் இரண்டாம் பகுதி பல நல்ல காட்சிகள் மற்றும் கதைத் திருப்பங்களால் கனம் பெறுகிறது .
மதகு நிரம்பி உடைந்து, ஊரையே அழிக்கும் நிலையில் தண்ணீர் தளும்பும்போது அதை ஹீரோவும் நண்பர்களும் தடுக்கும் காட்சி மிக எளிமையாக எடுக்கப்பட்டு இருந்தாலும் பார்வையாளர்களை திகிலடிக்க வைத்து கவர்கிறது. பாராட்டுகள் இயக்குனர் கோபிக்கு !
காதல் , ஊர் கட்டுப்பாடு இரண்டுக்கும் பொதுவான அந்த கிளைமாக்ஸ் சபாஷ் போட வைக்கிறது
மொத்தத்தில் ,
வேல்முருகன் போர் வெல்ஸ் ….. தண்ணீர் வருது .