மேக்கர்ஸ் ஸ்டுடியோ சார்பில் அருண் கார்த்திக் தயாரிக்க , வரலட்சுமி நடிப்பில் மனோஜ்குமார் நடராஜன் இயக்கி இருக்கும் படம் .
சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் மலைவாழ் மக்கள் மேம்பாடு போன்றவற்றில் அக்கறை காட்டும் நடிகை கவுரி (கஸ்தூரி) , கட்டுமான அனுமதி இல்லாத மலைப்பகுதி ஒன்றை , அந்தப் பகுதி தாசில்தார்கள் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு முறையற்று மாற்றிக் கொடுத்து , சுற்றுச் சூழல் சீர்கேட்டுக்கு காரணமாக ஆகி இருப்பதை கண்டுபிடிக்கிறார் .
அது பற்றி தன் தோழியும் பத்திரிக்கையாளருமான உஷாவிடம் ( வரலட்சுமி ) சொல்லும் நிலையில் , கவுரி கொல்லப் படுகிறார் .
உஷாவின் தோழியான பிரியா (மாளவிகா சுந்தர்) வீட்டில் மலைப் பகுதி குறித்த ஆதாரத்தை கவுரி மறைத்து வைத்திருப்பதை அறிந்து அதை எடுக்க , தன் தம்பியோடு வருகிறார் உஷா .
அந்த சமயம் பார்த்து, குடி போதை பப்பில் சில மோசமான ரவுடிகள் ஒரு பெண்ணிடம் வம்பிழுக்க , பிரியாவின் கணவர் அவர்களை அடிக்க ,
அந்த கும்பல் பிரியாவின் வீடு தேடி வந்து , உஷா , உஷாவின் தம்பி, பிரியா, பிரியாவின் கணவர் நான்கு பேரையும் அடித்துத் துவைத்து கொலை செய்யும் வரை போகிறது .
அப்புறம் நடந்தது என்ன ? அவர்கள் தப்பினார்களா ? பிரியா வீட்டில் கவுரி மறைத்து வைத்த ரகசியம் என்ன ஆச்சு என்பதே வெல்வெட் நகரம் .
எதிர்பாராத சம்பவங்களோடு நகரும் படம் .
பிரியா வீட்டில் ரவுடிகள் செய்யும் அராஜகத்தை சிறப்பாக காட்சிகள் எழுதி படமாக்கி உள்ளனர் .
மொத்தமாகவே நடித்துள்ளவர்கள் பரவாயில்லை என்று சொல்லும்படி நடித்துள்ளனர்.
ஏகப்பட்ட அவுட் ஆஃப் ஃ போகஸ் காட்சிகள் !
படத் தொகுப்பு ஒகே .
இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
இது போன்ற திரைக்கதைகளில் யாராவது ஒரு கதாபாத்திரத்தை ரசிகர்கள் பின் தொடரும்படி ஒரு தெளிவும் திட்டவட்டமும் இருக்க வேண்டும். ஆனால் இங்கே திருப்பங்கள் என்ற பெயரில் திசை கெட்டுத் திரிகிறது திரைக்கதை.
ஆரம்பத்தில் காட்டை விஷுவலாக காட்டும்போது , படம் எப்போது காட்டுக்குள் போகும் என்ற ஓர் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது . ஆனால் கடைசி வரை போகாதது பெரும் பலவீனம் .
அப்படி போகாதததுதான் (திரைக்)கதை எனில் ஆரம்பத்தில் வரும் அந்த காடுகள் தொடர்பான காட்சிகள் தூக்கப்பட வேண்டும் .
மொத்தத்தில் வெல்வெட் நகரம் …. கொஞ்சம் வழுவழுப்பு, நிறைய சொரசொரப்பு !