வெண்ணிலா வீடு @விமர்சனம்

vennilaa veedu reveiw
vennilaa veedu review
நிலவோடு வானம்

தி வைப்ரன்ட் மூவீஸ் சார்பில் வெங்கடேஷ் ராஜா வழங்க ஆதர்ஷ் ஸ்டுடியோ சார்பில் பி.வி.அருண் தயாரிப்பில் செந்தில்குமார் மற்றும் விஜயலட்சுமி இணையராக நடிக்க, வெற்றி மகாலிங்கத்தின் கதை திரைக்கதை இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வெண்ணிலா வீடு .

மன வானில் தவழுமா ? பார்க்கலாம்.

பெண்களின் நகை மீதான மோகம் , அந்த மோகத்தின் அடிப்படையில் உருவாகும் தேவையற்ற சமூக மதிப்பீடுகள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு களங்கமில்லாத நிலவின் மீது படியும் அவலக் கறைகள் … இவைதான் இந்தப் படம் .

கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து ஒரு பொறியியல் நிறுவனத்தில் பணியாற்றும் பட்டப் படிப்பு படித்த பையன் கார்த்திக் (செந்தில் குமார்) மீது,  அதே கிராமத்தைச் சேர்ந்த,  பள்ளிப் படிப்பை தாண்டாத  அவனது முறைப் பொண்ணு தேன்மொழிக்கு (விஜயலட்சுமி) காதல் .

கார்த்திக்கின் அக்கா தமிழ்ச் செல்வி(நிஜப் பெயரும் தமிழ்ச் செல்வி)யின் குடிகார ஊதாரிக் கணவன் கோயிலான் (ஐந்து கோவிலான். படத்தின் வசனகர்த்தாவும் இவரே ),  மைத்துனன் கார்த்திக் பெயரில் ஊரில் இருக்கும் நிலத்தை ரியல் எஸ்டேட்டுக்கு விற்று,  பெண்ணுக்கும் சொத்தில் பங்குண்டு என்ற சட்டப்படி, மனைவியின் பங்குக்கு கிடைக்கும் பெரும் தொகையை வைத்து ஜாலியாக வாழ திட்டமிடுகிறான்.

சோறுபோடும் பூமியை ரியல் எஸ்டேட்டுக்கு விற்பதை எதிர்க்கும் குணமுள்ள கார்த்திக் , ”அக்கா அந்த நிலத்தில் விவசாயம் செய்து பலன் பெற்று வாழலாம் . ஆனால் விற்க முடியாது ” என்பதில் உறுதியாக இருந்து , அதனால் ஒரு ரியல் எஸ்டேட் புள்ளியின் கோபத்துக்கும் ஆளாகிறான்.

இதற்கிடையில் தேனுவின் மீதான தனது காதலை கார்த்திக்கும் சொல்ல, அவர்களுக்குள் திருமணம் நடந்து,  குடித்தனம் நடத்த சென்னைக்கு வருகிறாள் தேனு. கார்த்திக்கின் முதலாளிக்கு சொந்தமான ஒரு பளபளா  அபார்ட்மெண்டில் குடும்பம் நடத்தி வெண்ணிலா என்ற குட்டி நிலாவை பெற்று எடுக்கிறார்கள் இருவரும் .

vennila veedu reveiw
சொந்தப் பாடம்

இந்நிலையில் ஒரு கொடூரமான கந்துவட்டிக்காரனின் (வழக்கு எண் முத்துராமன்) , ஒரே மகளான — திமிரும் பிடிவாதமும் நிறைந்த — இளவரசி (சிருந்தா ஆசப்) மாமனார்க்கடங்கிய தனது கணவனோடு,  தேனு கார்த்திக் இருக்கும் பக்கத்து அபார்ட்மெண்டை வாங்கி குடி வருகிறாள். அடாவடி ஆணவம் கபடம் நிறைந்த இளவரசி ஆரம்பத்தில் கொஞ்சம் பந்தா காட்டினாலும் தேனுவின் நல்ல குணங்களால் கவரப்பட்டு  ஒரு நிலையில் அவளுக்கு நெருங்கிய தோழியாகிறாள் .

கார்த்திக்கின் முதலாளி மகளின் கல்யாண ஏற்பாட்டில்,  ஒரு பெண்மணி தேன்மொழியை இளக்காரமாகப் பேச, ”கழுத்தில் நல்ல நகை இல்லாத நான் கல்யாணத்துக்கு வர முடியாது” என்கிறாள் தேனு. அதனால் கார்த்திக் கோபம் கொள்கிறான்.

பிரச்னையை சமாளிக்க , இளவரசியிடம் தேனு “ஒரு நகையை கொடு . கல்யாணத்துக்கு போட்டுக் கொண்டு போய் விட்டு வந்து தந்து விடுகிறேன் ” என்று…. காலகாலமாக நம்முடைய பல பெண்களின் பழக்கம் போலவே தேனு கேட்க….  இளவரசி கொடுத்ததோ பட்டத்து யானையின் முகப் படாம் போன்ற பெரிய நகையை !

கல்யாண வீட்டில் இருந்து திரும்பும்போது அந்த நகை திட்டமிட்டு திருடப்படுகிறது. நகை திருடு போன உடன், இளவரசி மற்றும் அவளது கந்து வட்டி அப்பா ஆகியோரின் முகம் மாறுகிறது. நகையை ஒளித்து வைத்து விட்டு திருடு போனதாக தேன்மொழி போய் சொல்வதாக இளவரசி சந்தேகப்படுகிறாள் . கந்து வட்டிக்காரனின் கொடூரம் மெல்ல மெல்ல வெளிப்படுகிறது .

“நகையின் மதிப்பான 25லட்ச ரூபாயை தராவிட்டால்….” என்று ஆரம்பித்து கந்து வட்டிக்காரன் வீசும் அவமானப் புயலை,  கிராமத்துத் தென்றல் காற்றான தேன்மொழியால் சமாளிக்க முடியவில்லை

ஒரு நிலையில் வேறு வழி இன்றி ஊருக்கு வந்து நிலத்தை விற்க கார்த்திக் முயல ,ஐம்பது லட்ச ரூபாய் நிலத்தை அதே பழைய கோபக்கார ரியல் எஸ்டேட் முதலாளி 25 லட்ச ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்கு வாங்குகிறான் . அந்த பணம் அப்படியே தொலைந்து போன நகைக்கே தேவைப்படும் என்ற நிலையில்,  கார்த்திக்கின் அக்கா கணவன் பிரச்னை செய்ய , அக்கா  வாழவெட்டியாக ஆகிறாள் .

இவ்வளவு பிரச்னைக்கு பிறகு பணத்தோடு சென்னை வந்த கார்த்திக்குக்கு இங்கே காத்திருந்த பேரதிர்ச்சிகள் என்ன என்பதுதான் வெண்ணிலா வீடு.

vennilaa veedu reveiw
நிலவை நெருங்கும் மேகம்

வீண் பகட்டுக்காகவும் போலி  கவுரவத்துக்காகவும் ஒரு நாள் கூத்துக்கு பக்கத்து வீடுகளில் இருந்து இரவல் நகையை வாங்கிப் போட்டுக் கொண்டு போகும் முட்டாள்தனத்தால் ஏற்படும் விபரீதங்களை கதையாக எடுத்துக் கொண்டு….

அதில் விளை நிலங்களை கான்கிரீட் காடுகளாக்கும் அநியாயத்தையும் சேர்த்து திரைக்கதை அமைத்து ….

அந்த பலத்தில் காட்சிகளை இயல்பாக எடுத்தே  விக்கித்துப்  போக வைத்து…

அதிர்ச்சி , ஆத்திரம் , கண்ணீர் என்று எல்லா உணர்ச்சிகளையும் ரசிகர்களுக்கு கொடுக்கும் விதத்தில் பிரம்மாண்டமாக ஜெயிக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம்.

படம் ஆரம்பித்த உடன்,   அட்சய திருதியை அன்று மக்கள் ஆட்டு மந்தைகள் போல நகைக்கடையில் மொய்க்கும் அறியாமயை கண்டித்து, ‘அட்சய திருதியில் நகை வாங்குவது நல்லது .. கடைக்காரர்களுக்கு’ என்று டைட்டில் முடிவதற்குள் ஒரு பஞ்ச் அடிக்கிறாரே…..அங்கே ஆரம்பிக்கிறது இவரது அட்டகாசம்.

எதோ கொஞ்சம்  மக்களுக்கு அறிமுகமாகி விட்டோம் என்பதால்,  காசு வாங்கிக் கொண்டு ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் நடிப்பவர்களை காமெடியாக ஒரு சொருகு சொருகுகிறார் பாருங்கள் .. நகைச்சுவையில் திரைகள் கிழியலாம். இது போல குபீர் சிரிப்பு நகைச்சுவைக் காட்சிகளை சரியான இடத்தில் சரியாக பொருத்தி  சீரியசான காட்சிகளின் வீரியத்தை குறைக்காமல் செயல்படும் வித்தை இயக்குனருக்கு தெரிந்திருக்கிறது.

கிராமத்துக் காட்சிகளை எடுத்த விதத்தில் உயிர்ப்பும் உண்மையும் கொட்டிக் கிடக்கிறது .

 ‘மாமாவான கார்த்திக்  குறைந்த விலைக்கு நிலத்தை விற்று அப்பா கோயிலானுக்கு எதுவும் தராததால்தான் நம் அம்மா வாழாவெட்டியானாள் ; நாம் தெருவில் நிற்கிறோம்’  என்று தெரிந்த பிறகும் அந்த சிறுமி கார்த்திக்கிடம் “அடுத்த தடவை ஊருக்கு வரும்போது அத்தையையும் வெண்ணிலா பாப்பாவையும் கூட்டிட்டு வாங்க மாமா ” என்று பாசமாக சொல்லும் இடத்தில்,  நம் கண்கள் குளமாகின்றன .

ஏழையாக இருந்தாலும் பணத்துக்கு சோரம்போகாத கிராமத்து மனசுகளின்  கம்பீரமும் உண்மையான உறவுகளின் தலைமுறைகளை வெல்லும் கல் சங்கிலிப் பிணைப்பும் வெளிப்படும் காட்சி அது .

vennilaa veedu reveiw
சுத்தமான காற்றின் காதல்

ஒரு கிலோ தங்கம் இலவசம் என்ற விளம்பர வாசகத்தை கார்த்திக் மிதித்துக் கொண்டு போவது , கழுத்தில் இருக்கும் தங்கச் செயினை கிளைமாக்சில்  பயன்படுத்தும் விதம் போன்ற காட்சிகளில் டைரக்டோரியல் டச்கள் மூலம்……. தான் பாரதிராஜாவின் சிஷ்யன் என்பதை நிரூபிக்கிறார் இயக்குனர்.

நகரத்து வாழ்க்கைக்குள் முயன்று பொருத்திக் கொள்ளும் கிராமத்துப் பெண்ணாக ,  தேவையில்லாத அவமானங்கள் வரும்போது நொறுங்கிப் போகும் கண்ணியமான  சுயமரியாதை மிக்க ஆளுமையாக,  , தான் செய்த தவறால் தன் கணவனை ஒருவன் அசிங்கமாக பேசும்போது சட்டென்று உடைந்து அழும் காதல் மனைவியாக  … தேன்மொழி கேரக்டருக்கு படம் முழுக்க ருசி சேர்த்து இருக்கிறார் விஜயலட்சுமி . வெல்டன் அகத்தியன் மவளே !

அடுத்தபடியாக அந்த கேரக்டராகவே மாறி இருப்பவர் கார்த்திக்கின் அக்காவாக வரும் தமிழ்ச் செல்வி . உழைப்பையே சுவாசிக்கும் கிராமத்து அபலை அக்காக்களை .. எந்த நிலையிலும் பணத்துக்காக பாசத்தை விட்டுக் கொடுக்காத நம்ம மனுஷிகளை அப்படியே உரித்து வைத்திருக்கிறார்

கார்த்திக்காக நடித்திருக்கும் செந்தில் சில அதி முக்கிய காட்சிகளில் திணறி இருந்தாலும் பொதுவில் கேரக்டருக்கு பொருந்திப் போகிறார்

இவர்கள் மட்டுமல்ல .. சிருந்தா ஆசப், முத்துராமன், ஐந்து கோவிலான், பிளாக் பாண்டி , அவன் இவன் ராம்ராஜ், சுப்ரமணியபுரம் சித்தன் என்று எல்லோரும் அந்த கேரக்டர்களில் வீடு கட்டி விளையாடுகிறார்கள் .

இப்படியாக நடிக நடிகையர் தேர்விலும்  தயாரிப்பாளர் பி வி அருணும்  இயக்குனர் வெற்றி மகாலிங்கமும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு பாடல்கள், படத்தொகுப்பு இவை எல்லாம் பரவாயில்லை ரகம். பின்னனி இசையும் படத்தொகுப்பும் ஒரு படி மேல் .

vennilaa veedu reveiw
கும்பிடும் குத்து விளக்குகள்

அதே நேரம்,  இந்தப் படம் நம் இதயத்துக்குள் சுலபமாக நுழைவதாலேயே உரிமையோடு சில கேள்விகளை கேட்க வேண்டி உள்ளது.

இளவரசி கதாபாத்திரத்தை ஆரமபத்தில் இருந்தே ரொம்ப வில்லங்கமாக காட்டி வருவதால் இவளால் எதோ பிரச்னை வரப்போகிறது என்பது முன்பே புரிந்து விடுகிறது . அதை தவிர்த்து இருக்கலாம். அவளது அடிப்படைக் குணத்தை முதல் இரண்டு காட்சிகள் மூலம் மட்டும் நிறுவி விட்டு அப்புறம் அவளை இயல்பாக காட்டி இருந்தால், பின்னால்  பிரச்னை வரும்போது,  இன்னும் கொஞ்சம் தீவிரத்தன்மை கிடைத்து இருக்கும் .

இளவரசி தேன்மொழியை சந்தேகப்படுவதற்கான காரணம் அவ்வளவு தெளிவாக இல்லை . தேன்மொழி நினைத்து இருந்தால் அந்த சந்தேகத்தை ஒரு சில நிமிடத்தில் போக்கி இருக்க முடியும்.

தவிர திரைக்கதை முழுக்கவே இளவரசி கதாபாத்திர வடிவமைப்பில் ஒரு குழப்பம் இருக்கிறது. அவளை நல்லவள் என்பதா ? கெட்டவள் என்பதா? கோபக்காரி என்பதா? கபடமானவள் என்பதா? சுய சிந்தனை உள்ளவள் என்பதா ? இல்லை கேட்பார் பேச்சைக் கேட்பவள் என்பதா ? என்று ஏகப்பட்ட கேள்விகளை கேட்டுக்கொண்ட இயக்குனர்…. எல்லாவற்றையும் படத்தில் வைத்து விட்டார்.

vennilaa veedu reveiw
குழப்பரசி

பொதுவாக கல்யாணத்துக்கு இரவல் நகை வாங்கிப் போட்டுக் கொண்டு போகிறவர்கள் இவ்வளவு பெரிய நகை எல்லாம் வாங்கிக் கொண்டு போகமாட்டார்கள்.தொலைந்தால் என்ன செய்வது என்ற  பயம் வாங்குகிற எல்லோருக்குமே இருக்கும்.

இரவல் நகையை வாங்கிக்கொண்டு போகும் எந்த பெண்ணும் கல்யாண வீட்டில் ஒரு பயத்தோடும் ஜாக்கிரதையோடும் கல்யாண வீட்டில் இயல்பாகவே இருக்க முடியாத மன நிலையோடும்தான் இருப்பாள். தேன் மொழியை கள்ளமிலாத பெண்ணாக காட்டுவது ஒகே . ஆனால் முட்டாளாக காட்ட வேண்டுமா?

என்னதான்  முதலாளியின் காரை கார்த்திக் தற்காலிகமாகத்தான்  பயன்படுத்துகிறான் என்றாலும் கூட , நகை திருடு போகும் முறை,  திருடனை கார்த்திக் துரத்தும் விதம் ஆகியவையும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.

பெண் ரசிகைகளை டார்கெட் செய்கிற இந்தப் படத்துக்கு… “இன்னிக்கு கிச்சன்லயே…..” காட்சி தேவையா ?

ஆனாலும் என்ன …..

இந்தப் படத்தை ஒரு முறை பார்த்தால் போதும்.. வீண் கவுரவத்தை  வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக நகை உள்ளிட்ட காஸ்ட்லியான பொருட்களை பக்கத்து  வீடுகளில் இருந்து இரவல் வாங்கும் பழக்கத்துக்கு ஒரேயடியாக கும்பிடு போட்டு விடுவார்கள் நம்ம பெண்கள்!

அந்த வகையில் இப்படி ஒரு தேவையான படத்தை அழுத்தமாக இயக்கிய இயக்குனர் வெற்றி மகாலிங்கம் , தயாரித்த பி.வி.அருண், வெளியிட்ட வெங்கடேஷ் ராஜா மூவரும் பாராட்டுக்குரியவர்கள்

வெண்ணிலா வீடு…. பவுர்ணமி மாளிகை !

மகுடம் சூடும் கலைஞர்கள்
—————————————-
வெற்றி மகாலிங்கம், விஜயலட்சுமி, தமிழ்ச் செல்வி, பி.வி.அருண், வெங்கடேஷ் ராஜா

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →