ரியாலிட்டி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து , எழுதி, விஜேந்திரன் என்பவர் இயக்க,
புதுமுகங்கள் வீர பாரதி , சமீரா மற்றும் எலிசபத், காதல் சுகுமார் ஆகியோர் நடித்து இருக்கும் படம் வென்று வருவான்.
இவன் வெல்வானா? வருவானா? பார்க்கலாம்
பெரம்பலூர் மாவட்டம் திருவளக் குறிச்சி என்ற கிராமத்தில் வாழும் ஒருவன் (வீர பாரதி) மீது
எட்டுக் கொலைகளை செய்ததாக, சந்தர்ப்பம் , சாட்சியம் மற்றும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது .
அது பற்றி விசாரிக்க ஒரு பத்திரிகை நிருபர் திருவளக்குறிச்சிக்குப் போய் விசாரிக்கிறார் .
மரண வீடுகளில் பாட்டுப் பாடும் கண் தெரியாத விதவைத் தாய் (எலிசபத்) ஒருத்தியால் கண்ணியமாக வளர்க்கப்பட்ட நல்ல இளைஞனாக இருந்திருக்கிறான் அவன் .
அவனை காதலிக்கும் பெண்ணிடம் கூட மிக கண்ணியமாக நடந்து கொண்டிருக்கிறான் .
ஊரில் பெண்களை சீண்டுபவர்களை கண்டித்து இருக்கிறான் . ஊழல் செய்யும் ஊர்த் தலைவரை எதிர்த்து இருக்கிறான் .
அப்படி இருக்க அவன்தான் குற்றவாளி என்று ஊர் மக்களே சொல்வதற்கான காரணம் என்ன என்பதுதான் இந்த வென்று வருவான் .
மிக எளிய படம் . அதற்குரிய நிறை குறைகள் படம் முழுக்க இருக்கின்றன .
நாயகன் நாயகி நடிப்பும் தோற்றமும் வெகு இயல்பு . லொகேஷன் அழகு.
திரைக்கதை, ஒளிப்பதிவு இசை போன்ற முக்கிய விசயங்களில் போதாமை .
காமெடி என்ற பெயரில் கொன்று கூடையில் வாருவதை தவிர்த்து இருக்கலாம் .
படத்தில் இயக்குனர்கள் சொல்கிற காமெடி சீன் வறட்சியாக இருந்தால் அந்தக் காட்சிகளில் நடிக்கும் காமெடி நடிகர்களே ஒரு மாதிரி கிரியேட் செய்து காட்சியை மெருகேற்றி காமடி ஆக்கி விடுவார்கள் .
வையாபுரி , கிரேன் மனோகர் போன்றோருக்கு அந்த திறமையோ அக்கறையோ இல்லையா ?
சட்டம் , தூக்குத் தண்டனை , தாய்ப்பாசம் , இசையின் மகிமை இவற்றை சேர்த்து ஒரு குறிப்பிடததக்க கிளைமாக்சைக் கொடுத்து படத்தை முடிப்பதைப் பாராட்டலாம் .
வென்று வருவான் — டிரா