ஹேஷ்டேக் எஃப் டி எஃப் எஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து பாடல்கள் எழுதி திரவ் கதாநாயகனாக நடிக்க, நாயகியாக இஸ்மத் பானு இவர்களுடன் எம் எஸ் பாஸ்கர், ரமா, மாஸ்டர் கார்த்திகேயன் , தேவ் ஹபிபுல்லா நடிப்பில் அறிமுக இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து இயக்கியுள்ள படம் வெப்பம் குளிர் மழை .
இயக்குனர் பிரம்மாவுடன் குற்றம் கடிதல் படம், பிறகு சுழல் வலைத் தொடர் உட்பட பல படைபுகளில் இயக்குனர் பிரிவில் பணியாற்றியவர் பாஸ்கல் வேதமுத்து .
சிவகங்கை பகுதியில் உள்ள தனது கிராமத்து மக்களின் இயல்புகளையும் ஆங்காங்கே நடக்கும் சம்பவங்களையும் வைத்து கதை எழுதி இயக்கி இருக்கிறார் பாஸ்கல் வேதமுத்து

அப்படி என்ன கதை? அவர் திரையிட்டுக் காட்டிய முன்னோட்டம் மற்றும் பாடல்களில் கதை புரிந்தாலும் அவர் வார்த்தைகளிலேயே கேட்போம்
” கிராமத்தில் குழந்தை இல்லாமையை வைத்து ஒரு இளம் தம்பதியை ஊர் நெருக்கடிக்கு ஆளாக்குகிறது . ஒரு நிலையில் மனைவி வாந்தி எடுக்க, கர்ப்பம் என்று ஊர் சொல்ல,
கணவன் மனைவி இருவரும் சந்தோஷத்தோடு குழந்தை திரும்ப , ஒரு நிலையில் கணவனுக்கு வரும் சந்தேகமும் , மனைவியின் மன நெருக்கடியும், மகனை அப்பனே வெறுக்க, நடந்தது என்ன என்பதுதான் கதை ” என்கிறார் இயக்குனர்
தொடர்ந்து பேசும்போது, ” யதார்த்தமாக கிராமப் படமாக எடுத்து இருக்கிறோம் . பக்குவமான மூத்த தலைமுறை நபராக ஒரு நையாண்டி கேரக்டரில் எம் எஸ் பாஸ்கர் நடித்துள்ளார்.

ஹீரோ ஹீரோயின் நடிப்பு யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக இருவரையும் என் கிராமத்தில் ஒரு மாதம் தங்க வைத்து மக்களின் மண் மொழி , பழக்க வழக்கங்கள், உடல் மொழிகள் ஆகியவற்றைப் பழக வைத்தோம் . தவிர படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் கிராம மக்களே நடிப்பதால், அவர்களுக்கும் இவர்கள் யாரோ நடிகர்கள் என்ற எண்ணம் வராமல் இயல்பாக பழகி நடிக்க அது உதவியாக இருந்தது .
இருபத்தி மூன்று நாளில் படத்தை முடித்து இருக்கிறோம் ” என்றார்.
திரவ் பேசும்போது, ” பாஸ்கல் வேத முத்து சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது . சிலரை ஹீரோக்களாக நடிக்க அணுகினோம் . பல்வேறு காரணங்களால் அது முடியாமல் போக , நானே ஹீரோவாக நடிக்க முடிவு செய்தேன் . நானும் முன்பே இணை இயக்குனராக இருந்தவன்தான்.

பொதுவாக கிராமத்தில் வெயிலில் உழைக்கும் பெண் கூட சினிமாவில் செக்கச் செவேல் என்று இருப்பார்கள் . வெயிலில் ஏற்படும் நிறத்துக்கு ஏற்ற பொருத்தம் இருக்காது . இயக்குனரும் அப்படித்தான் ஆசைப்பட்டார். ஆனால்நான்தான் யதார்த்தமான கிராமியத் தோற்றம் கொண்ட பெண்ணே போதும் என்று இஸ்மத் பானுவை படத்துக்குள் கொண்டு வந்தேன் . எனது இன்னொரு படத்தில் அவர் இருப்பதால் இதில் சுலபமாக அவரை அணுக முடிந்தது . “என்றார்
இஸ்மத் பானு சிறப்பாக நடித்து இருப்பது முன்னோட்டம் மற்றும் பாடல்களில் தெரிந்தது . கணவன் மனைவிக்கான நெருக்கக் காட்சிகளிலும் பொருத்தமாக நடித்து இருந்தார் இஸ்மத் பானு

” இந்தப் படத்தின் கேரக்டர் என் வயதுக்கு மீறிய கேரக்டர் . எனவே கொஞ்சம் யோசித்தேன் . ஆனால் அது பிரம்மாதமான கேரக்டர் . வாழ்வில் அது போன்ற நிறைய பெண்கள் இருக்கிறார்கள் . எனவே நடிக்க முடிவு செய்தேன் . கணவன் மனைவி என்பதைப் புரிய வைக்க கொஞ்சம் நெருக்கமான காட்சிகள் தேவைதானே? அந்த அளவுக்குத்தான் இதில் இருக்கும் . மற்றபடி ஆபாசமாக இருக்காது . என்னைப் பொறுத்தவரை ஹீரோயின் என்று இல்லை . நல்ல கேரக்டர்கள் எது என்றாலும் செய்யத் தயாராக இருக்கிறேன் “என்றார் .
திரவ் எழுதிய பாடல் வரிகளில் பக்குவமின்மை , லிரிக் வீடியோவில் வெல்லக் கட்டி என்பதற்குப் பதில் வெள்ளக் கட்டி என்று எழுத்துப் பிழை… இப்படி சில விஷயங்கள் இருந்தாலும் சங்கர் ராஜேந்திரனின் பாடல் இசை மிக கனிமமாக எளிமையாக இனிமையாக இருக்கிறது .

அதை நான் சொன்னபோது நன்றிப் புன்னகை புரிந்தார் சங்கர் ராஜேந்திரன்
வரும் மார்ச் 29 அன்று திரைக்கு வருகிறது படம்.