வெற்றிவேல் @ விமர்சனம்

vet 6 

எம்.சசிகுமார், பிரபு, மியா ஜார்ஜ், விஜி சந்திரசேகர், நிகிலா, வர்ஷா, தம்பி ராமையா, இளவரசு , அனந்த நாக் ஆகியோர் நடிப்பில்

வசந்தமணி இயக்கி இருக்கும் படம் வெற்றி வேல் .

வெற்றியில் வேலின் கூர்மையும் வேலில் வெற்றியும்  இருக்கிறதா ? பார்க்கலாம் 
பரம்பரை பரம்பரையாக வந்த கிராம முன்சீப் எனப்பட்ட ஊர்த்தலைவர் பதவியை (இந்தப் பதவியின் கீழ் பல்வேறு சிறு கிராமங்களும் ஒரு தலைவரின் கீழ் அடங்கும்), 
அமரர் எம் ஜி ஆர் தனது ஆட்சிக் காலத்தில்,  ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்படும் பதவியாக மாற்றினார் . அப்போது துவங்குகிறது இந்தப் படத்தின் கதை .
அதுவரை ஊர்த் தலைவர் பதவியை பரம்பரையாக பெற்று வந்த குடும்பத்தின் வழியாக  ஊர்த் தலைவராக இருப்பவர்  ராஜ மாணிக்கம் (பிரபு).
vet 4
ராஜ மாணிக்கத்தின்  தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் செல்லாத்தா( விஜி சந்திரசேகர்). 
தேர்தல் வரும் நிலையில் செல்லாத்தாவின் கணவன் ஊர்த்தலைவராக  போட்டியிட விரும்ப , அண்ணனிடம் விட்டுக் கொடுக்கச் சொல்கிறாள் செல்லாத்தா . ராஜ மாணிக்கமும் சம்மதம் சொல்கிறார் . 
ஆனால் ‘ராஜ மாணிக்கம் நிற்காவிட்டால்  ஜெயிக்க முடியாது . பதவி வேறு சிறு கிராம ஆட்கள் கையில் போய்விடும்’ என்று கூறும் ஊர் மக்கள்,  ராஜமாணிக்கத்தையே  நிற்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர் .
அவர் தங்கை கணவனிடம்  பேச அவன் சம்மதிக்கவில்லை . ஒரு நிலையில் இருவரும் நிற்க , ராஜ மாணிக்கம் ஜெயிக்க , தங்கை கணவன் செத்துப் போகிறான் . 
அண்ணன் மீது மிருக வெறிப் பகை கொள்கிறாள் தங்கை .
நிகழ் காலத்தில் ராஜ மாணிக்கத்தின் மகள் (வர்ஷா)  கல்லூரியில் படிக்கிறாள் . அவளும் பக்கத்து ஊர் இளைஞன் ஒருவனும்( அனந்த நாக் ) காதலிக்கிறார்கள்.
vet 6666
அந்த இளைஞனின் அண்ணன் வெற்றிவேல் (சசி குமார்)  இருவரின் தந்தை ஒரு பள்ளிக்கூட வாத்தியார் ( இளவரசு ) அவருக்கு ஒரு படிக்காத மனைவி (ரேணுகா) 
வெற்றிவேல் மீது ராஜ மாணிக்கத்துக்கு நல்ல அபிப்ராயம் உண்டு 
அங்குள்ள விவசாயக் கல்லூரியில் பணியாற்றும் ஒரு மலையாள பெண் குட்டி ( மியா ஜார்ஜ்) மீது வெற்றிவேலுக்கு காதல் வருகிறது. அவளுக்கும் காதல் வருகிறது . 
ராஜ மாணிக்கம் தங்கை தன் மகனுக்கு திருமணம் நிச்சயம் செய்ய,   பகையை மாற்ற அங்கே போகிறார் ராஜமாணிக்கம் .
ஆனால்  வார்த்தையில் அமிலம் உமிழும் தங்கை ” எனக்கு பையன் இருப்பதால் உன்  மகளை விட்டு என் மகனை மயக்க வருகிறாயா ?” என்று அசிங்கப்படுத்த , கொந்தளிக்கும் ராஜ மாணிக்கம் ,
vet 55
தங்கையின் மகனின் கல்யாணத்துக்கு முன்பு தன் மகளுக்கு திருமணம் முடிக்க மாப்பிள்ளை தேடுகிறார் .
ராஜ மாணிகத்தின் மகள் தன் காதலனிடம் சொல்கிறாள் . ஆனால் அப்பாவுக்கு அவமானம் கொடுத்து விட்டு ஓடி வர அவள் விரும்பவில்லை  
விசயம் அறிந்த வாத்தியார் ராஜ மாணிக்கத்திடம் பெண் கேட்டுப் போக , ”வேறு சாதி மாறி பெண் கொடுத்தால் எனக்கு ஊரில் மரியாதை போய்விடும் ” என்று கூறும் ராஜமாணிக்கம் கண்ணியமாக மறுக்கிறார் .
 அதே நேரம் வாத்தியாருக்கும் ராஜ மாணிக்கத்துக்கும் ஒருவர மீது ஒருவர் மரியாதை  ஏற்படுகிறது .
ராஜ மாணிக்கத்துக்கு அவமானம் ஏற்படும்படி எந்த செயலும் செய்யக் கூடாது என்று கூறும் வாத்தியார், தனது சின்ன  மகனிடம் காதலை மறக்கச் சொல்கிறார் .
என்ன செய்வதென்று புரியாத காதலன்  தன் அண்ணன் வெற்றிவேலிடம் சொல்கிறான் . 
வெற்றிவேல்,  தனது நண்பர்களான காதலுக்கு உதவி செய்யும் நாடோடிகள் நண்பர் குழுவோடு ( சமுத்திரக் கனி, விஜய் வசந்த் மற்றும் பலர் ) சேர்ந்து,  தம்பியின் காதலியை கடத்த திட்டம் போடுகின்றனர்.
 vet 5
திட்டம் சொதப்பி தம்பியின் காதலிக்கு பதிலாக வேறொரு பெண்ணை (நிகிலா) தூக்கி விடுகின்றனர். அந்தப் பெண் ராஜ மாணிக்கத்தின் தங்கை மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் !
அந்தப் பெண்ணின் வாழ்வு போய் விடும் என்ற நிலையில் அவளுக்கு வெற்றிவேல் தாலி கட்டுகிறான் . 
இதனால் ஏற்படும் நிகழ்வுகளில் ராஜ மாணிக்கத்துக்கும் அவரது தங்கைக்கும் பகை மேலும் தீவிரமாகிறது. ராஜ மாணிக்கம் வாத்தியார் நட்பு குலைகிறது 
.மலையாளக் காதலியை மறந்து பக்குவம் காரணமாக வெற்றிவேல் இயல்பு நிலைக்கு வந்தாலும் , தம்பி காதல் தோல்வியில் தவிக்கையில் மனைவியோடு இனிய இல்லறம் நடத்த வெற்றிவேலால் முடியவில்லை . 
ராஜ மாணிக்கத்தின் பெண்ணை கலப்புத் திருமணம் செய்து அவரை அசிங்கப்படுத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் என்கிறார் வாத்தியார் அப்பா .
இந்த பிரசனை எல்லாம் சுமூகமாக செட்டில் ஆனதா?  இல்லையா ? ஆனது என்றால் எப்படி ? இல்லை என்றால் என்ன ஆச்சு ? என்பதே வெற்றிவேல் .
vet 7
திரைக்கதையில் நிறைய மெனக்கெட்டு இருக்கிறார்கள் .
ராஜ மாணிக்கம் மற்றும் அவரது தங்கை கதையை தீவிரமாக ஆரம்பத்தில் சொல்லி விட்டு அதில் இருந்து வேறு பட்டு ஹீரோவைக் கொண்டு வரும் ‘தனி ஒருவன் ‘ ஸ்டைல் உத்தி….
வெற்றிவேல் நமக்குத் தெரியாமல் எவளையோ இழுத்துக் கொண்டு வந்துள்ளான் என்று அவனது பெற்றோர் நினைக்க, அவன் பெயர் கூட அந்தப் பெண்ணுக்கு தெரியாது என்பதை  உணர்த்தும் காட்சி ….
முதலிரவுக்கு மறுத்து வெற்றிவேல் சொல்லும் காரணமாக வரும் பெண் மனசுக் காட்சி … 
பெண்டாட்டியை நம்பாத ஒத்தாசை (தம்பி ராமையா) கேரக்டராய் வைத்து சற்றே முகம் சுளிக்கும் இரட்டை அர்த்தக்  காமெடிகளை கொடுத்து இருந்தாலும் கடைசியில் அதை வசனத்தால் சமாளிக்கும் காட்சி…
இப்படி பாராட்ட சில  பல காட்சிகள் .
பொருளாக நினைத்து தூக்கிக் கொண்டு வந்த பெண்ணுக்குத்  தாலி கட்டி அவளை ஒரு உயிருள்ள பொம்மையும் ஆக்கியாச்சு.
vet 66
ஆனால் அதோடு நிறுத்தி விடாமல் அவளை மனதளவில் கனிய வைத்து பெண்டாட்டி ஆக்கும் கதைப் போக்கு , 
ராஜ மாணிக்கத்துக்கும் வாத்தியாருக்கும் ஏற்படும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ நட்பு …
இவை இரண்டும்தான் இந்தப் படத்துக்கு உசுரு தண்ணி ஊற்றும் கிண்ணிகள். 
இப்படியாக திரைக் கதையில் மெனக்கெட்டு இருக்கிறார்கள் … திரைக் கதையில் மட்டும் !
தேவர் மகன் படத்தில் கமல்ஹாசனுக்கு நடக்கும் காதல் மற்றும் எதிர்பாராத கல்யாண சம்பவங்கள் வடிவேலுவுக்கு நடந்து இருந்தால் எப்படி இருக்கும் ? அப்படி போகிறது கொஞ்சம் கதைப் போக்கு .  
அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் இடம் பெற்ற தேன் பூவே பூவே  வா பாடலின்  மெட்டை வைத்து , இமான் ஒரு தீம் மியூசிக் கொடுத்து இருக்கிறார் . பாடல்கள் ஒகே ராகம் 
எஸ் ஆர் கதிரின் ஒளிப்பதிவு சிறக்கிறது 
நாடோடிகள் படத்தில்  காதலுதவிப் படையை  காமடியாக்கி இருப்பது புன்னகைக்க வைக்கிறது 
டைரக்ஷன் இன்னும் மெருகோடு இருந்திருக்கலாம் . 
vet 3
வெற்றிவேல் தாலி கட்டிய நிலையில்தான் அவனை அந்தப் பெண் அர்த்தத்தோடு முழுசாகப் பார்க்கவே செய்கிறாள் என்பதை எல்லாம் இன்னும் அழுத்தமாக சொல்ல வேண்டாமா ?. 
ராஜமாணிக்கத்தை  சந்திக்க வரும் வெற்றிவேலைப் பார்த்து சந்தோஷப் புன்னகை செய்கிறாள் ராஜ மாணிக்கத்தின் மகள் . ஏன் ?
வெற்றிவேல் தனது காதலனின் அண்ணன் என்பது அவளுக்கு தெரியும் என்று சொல்ல வருகிறாரா?  ஆம் எனில் அதில் ஒரு சிறு தொடர்ச்சியாவது இருந்திருக்க வேண்டாமா ?  
வழக்கமான் எம் சசிகுமார் . வழக்கமான  நடிப்பு , பெண்களைக் கவரும் வசனங்கள் என்று உற்சாகம் குறையாமல் நடிக்கிறார் .
ஆனால் பாடல் காட்சியில் , இசையில் வரும் அந்த ஒலிக்கு, அரச இலை பீப்பியை உதட்டை பிரித்துக் கொண்டு பல்லால் கடித்துக் கொண்டே ஊதுவது எல்லாம் அநியாயம்.
புழுதியில் போட்டு புரட்டுவதற்காகவே  துவைக்கப்பட்ட வேட்டி மாதிரி வெட்டியாக இருக்கிறது மியா ஜார்ஜ் கேரக்டர் .
vet 555
பிரபு கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார் .  
விஜியை  வில்லேஜ் சொர்ணக்காவாக மாற்றாமல் தமிழ் சினிமா ஓயாது போலிருக்கிறது .  (எனினும் நல்ல நடிப்பு) 
மாற்றித் தூக்கப்படும் பெண்ணாக நடித்து இருக்கும் நிகிலா  ஸ்கோர் செய்கிறார் . தம்பியின் காதலியாக வரும் வர்ஷாவும் ஒகே .
இளவரசுவும் ரேணுகாவும் தங்கள் நடிப்பால் படத்தை யதார்த்தப்படுத்த முயல்கிறார்கள் . அருமை 
கம்மியாக வந்தாலும் நடிகனாக ஸ்கோர் செய்வது தம்பி ராமைய்யாதான் . விவசாயக் கல்லூரியில் மிராஸ்தராக ஒரு நடை நடக்கிறார் பாருங்கள் . சிறப்பு !  சிறப்பு!!!
vet 666
வெகு இயல்பாக போகும் கதை ஒரு நிலையில் பக்கா மசாலாவகிறது . அடுத்தடுத்து  வரும் டுவிஸ்ட்கள் கொஞ்சம் ஓவர் டோஸ் . படகோட்டி படத்துக்கு அதெல்லாம் ஒகே . வெற்றிவேலுக்கு ?
வழக்கமான கதையை எடுத்துக் கொண்டு திரைக்கதையை மட்டும் நன்றாக அமைத்து சேஃப்டி என்ற பெயரில் செப்படி வித்தை செய்து தப்பித்தது எல்லாம் அந்தக் காலம் . 
இப்போ எல்லாம்  கதையிலும் கொஞ்சம் புதுமை வேணும் ஃபிரண்ட்ஸ்!
ஆதலால்,  
வெற்றிவேல் ….. வேல் தண்டு வீக் ஆனதால் எறியும் வேகம் குறைகிறது . !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →