சுரபி பிலிம்ஸ் மற்றும் தாய் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர் கே சுரேஷ் , ராம்கி , சுபிக்ஷா நடிப்பில் ஜெய்சங்கர் இயக்கி இருக்கும் படம் வேட்டை நாய்.
மலைவாழ் கிராமம் ஒன்றின் பெரிய மனிதராக இருப்பவரும் அடிதடி கட்டை பஞ்சாயத்து செய்பவருமான ஒருவர் (ராம்கி) தனது பாதுகாப்புக்கு வேட்டை நாய் ஒன்றை கறி போட்டு வளர்த்து வருகிறார்.
அதே போல தன்னை எதிர்ப்பவர்களை தன் கண் ஜாடையை உணர்ந்து அடித்து நொறுக்க வேட்டை நாய் போன்ற ஒருவனை(ஆர் கே சுரேஷ் ) சாராயமும் மதுவும் ஊற்றி கைக்குள் வைத்து இருக்கிறார்.
சிறு வயதிலேயே அப்பா அம்மாவை இழந்த நிலையில் , அப்பாவின் தங்கையான பாசமான அத்தையாலும் (ரமா) குடிகார மாமனாலும் (நமோ நாராயணன்) வளர்க்கப்படும் அவனுக்கு ஒரு பெண் (சுபிக்ஷா) மேல் காதல் வருகிறது.
படிக்கிற அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்கிறான்.
அடாவடிப் பெரிய மனிதரின் பிடியில் இருந்து கணவனை மீட்க மனைவி முயல , ஒரு நிலையில் கணவனும் விலக , பெரிய மனிதருக்கும் வேட்டை நாய் போல இருந்தவனுக்கும் இடையே பகை மூள்கிறது .
இந்த நேரத்தில் தன் மனைவியை ஒருவர் காதலித்த விஷயம் தெரிய வர அப்புறம் என்ன என்பதே இந்த படம் .
அழகான லொக்கேஷன்கள் படத்தின் முதல் பலம்.
நாயகன் ஆர் கே சுரேஷ் உற்சாகமாக நடிக்கிறார். காதல் கந்தாசின் நடன அமைப்பில் முன்பை விட சிறப்பாக ஆடுகிறார். சூப்பர் சுப்பராயனின் சண்டை அமைப்பில் சண்டைக் காட்சிகளில் ஜொலிக்கிறார் .
ராம்கி கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார் . ரமா, நமோ நாராயணனும் அப்படியே .
படத்துக்கு மிகப் பெரிய பலமாக இருக்கிறார் கதாநாயகி சுபிக்ஷா .
அழகு, இளமை, காதல் நெருக்கம், நடிப்பு எல்லாம் சிறப்பு .
வழக்கமான சண்டைக் கதையும் வித்தியாசமான காதல் கதையும் சரியாகப் பிணையவில்லை.
நாடகபாணி படமாக்கம் .
நீளமான இரண்டாம் பாகம் எல்லாம் படத்தின் குறைபாடுகள் .