விஞ்ஞானி என்றால் அவருக்கு குறுந்தாடி வைக்க வேண்டுமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்து இன்னும் மீளாத இந்த கோடம்பாக்கத்தில், உண்மையான விஞ்ஞானி ஒருவர் ஒரு தமிழ் படத்தை தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிப்பதோடு, அதற்கு விஞ்ஞானி என்று பெயரும் வைத்துள்ளார் என்பது தான் விஞ்ஞானபூர்வமான(?!) உண்மை . அதுவும் அவர் நாசா விஞ்ஞானி !
பார்த்தி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி மீராஜாஸ்மின் , சஞ்சனா சிங் , கிமையா சினேகா என்று மூன்று கதாநாயகிகளோடு சேர்ந்து ஹீரோவாகவும் நடித்து இருக்கும் பார்த்திதான் அந்த நிஜ நாசா விஞ்ஞானி .
இப்படி மல்கோவா கதாநாயகிகளாக போட்டு படம் எடுத்திருக்கும் பார்த்தியின் சொந்த ஊர் … எஸ், சேலமேதான். சென்னையில் கல்லூரிப் படிப்பு , அழகப்பச் செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியில் அறிவியல் பட்டம் என்று தொடர்ந்து, பின்னர் இந்திய அறிவியல நிறுவனத்தில் உயர்கல்வி பயின்று அங்கு விண்வெளித்துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். அங்கிருந்து நாசா!
ஓசோன் படலம் பருவநிலை மாற்றம் போன்றவை குறித்து நாசாவில் ஆராய்ச்சி மேற்கொண்ட பார்த்தி விண்வெளியில் உயிரினம் வாழ்வது பற்றிய கண்டுபிடிப்புகளிலும் செயல்பட்டுவிட்டு இந்தியா திரும்பி பயோடெக்னாலஜி ஆய்வுத் துறையில் வர்த்தக ஆலோசகர் பணி செய்து கொண்டு 2008 ஆம் ஆண்டு சென்னை ஐ ஐ டியில்அறிவியல் ஆய்வு அடிப்படையிலான சொந்த நிறுவனம் ஒன்றையும் துவங்கி விட்டு …….
சினிமாவுக்கு வந்திருகிறார் பார்த்தி.
ஏன் விஞ்ஞு….. ஏன் ?
” சின்ன வயசுல எனக்கு சினிமா மேல ரொம்ப ஆர்வம் உண்டு . படிப்பு வேலைன்னு வேற ரூட்ல போயிட்டேன் . அது நாசாவரை கொண்டு போனது.
தவிர , எனக்கு நாசாவில் ஒரு பெரிய தமிழ் ஆச்சர்யம் காத்திருந்தது. அவங்க லேட்டஸ்டா கண்டு புடிச்சதா சொல்லி பெருமைப்பட்டுக்கொண்ட பல விஷயங்கள் , நம்ம தமிழ் இலக்கியங்கள்ல ரெண்டாயிரம் மூவாயிரம் வருஷத்துக்கு முன்னையே இருக்கு. நாம பல விஞ்ஞானிகளை புலவர்கள்னு சொல்லி குறுகிய வட்டத்துல அடச்சிட்டோம் . இந்த விஷயங்களை எல்லாம் தமிழ் சினிமாவுல சொல்லனும்னு ஆசை வந்தது . நாம எடுக்கற படம் உலகின் எந்த மூலையில் ஓடினாலும் இது எங்க படம்னு தமிழன் காலரை தூக்கி விட்டுக்கற மாதிரி இருக்கனும் . அதான் சினிமாவுக்கு வந்துட்டேன் .
அமெரிக்காவிலேயே ஜும்பா நடனம் கற்றுக் கொண்டவன் நான் . இங்கே எனக்கு திரையுலக அனுபவம் பெற்ற ஆர்.கே வித்யாதரன் திரைக்கதை வசனம் டைரக்ஷன் மேற்பார்வை செஞ்சாரு .படத்தை எடுத்து முடிச்சுட்டேன் ” என்கிறார் பார்த்தி .
மிகுந்த புத்திசாலித்தனமும் ஆணவமும் நிறைந்த ஒரு இளம் விஞ்ஞானியை தந்திரமாக திருமணம் செய்து கொள்கிறார் ஒரு தமிழ் ஆசிரியை . அந்த விஞ்ஞானியை உலகுக்கே நல்லது செய்யும் ஒரு மிகச் சிறந்த பணியில் ஈடுபடுத்துகிறாள் . அதன் மூலம் ஒரு மிகப்பெரிய நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஒரு மாபெரும் பொக்கிஷம் போன்ற உயிர் மீண்டும் வருகிறது என்பதுதான் படத்தின் கதையாம்
“இப்படி சொல்வதால் இது ஏதோ டாக்குமெண்டரி என்று நினைத்து விட வேண்டாம் . ஜனரஞ்சகமான பொழுது போக்கு அம்சம் உள்ள (பாடல் வெளியீட்டில் காட்டப்பட்ட பாடல்களை பார்த்தபோது அந்த உண்மை பளீர்னு தெரிஞ்சது . எக்ஸ் குரோமொசம் ஓய குரோமோசோம் பற்றி ஆராய்ச்சி செய்வோமா என்றெல்லாம் பாடல் காட்சியில் பார்த்தியும் சஞ்சனா சிங்கும் கிகிசுப்பாக கேட்டுக் கொள்கிறார்கள் ) சைன்டிஃபிக் திரில்லர் படம் . பாடல்காட்சிகளை பாங்காக்கில் எடுத்து இருக்கோம் . படத்துக்காக அதிக பொருட்செலவில் அமைக்கப்பட்ட ஆய்வுக் கூடங்கள் எல்லாம் மாணவர்களுக்கு பாடமாக இருக்கும். மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் ” என்கிறார் பார்த்தி
படமும் அப்படியே இருக்கட்டும் .