அ.செ.இப்ராகிம் ராவுத்தர் தயாரிக்க, கிருஷ், சிருஷ்டி டாங்கே நடிப்பில், தம்பி செய்யது இப்ராஹிம் இயக்கும் படம், ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’.
கவிஞர் வாலி பாடல் எழுதிய கடைசி படமாம் இது . படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். இரண்டு பாடல்களை கங்கை அமரன் எழுத மூன்று பாடல்களை எழுதி இருக்கிறார் வாலி ,” அதில் ஒன்று மரணத்தைப் பற்றிய பாடல் ” என்கிறார் இயக்குனர் தம்பி செய்யது இப்ராஹிம்.
“இந்தப் படத்தின் கதையை முதன் முதலில் நான் வாலியிடம்தான் சொன்னேன் . கதை அவருக்கு மிகவும் பிடிக்க, அவர்தான் என்னை இப்ராகிம் ராவுத்தரிடம் அனுப்பி வைத்தார் . வாலி சொல்லிவிட்ட காரணத்துக்காக கதையைக் கேட்ட ராவுத்தருக்கும், இந்தக் கதை மிகவும் பிடிக்க, உடனே தயாரிக்க முன்வந்தார் .
ஹீரோவாக யாரைப் போடலாம் என்ற கேள்வி வந்தபோது கோ படத்தில் வரும் ஒரு காட்சியை குறிப்பிட்டு ‘அதில் ஜீவாவுடன் நிக்கிற அந்த தம்பிய கொண்டு வாங்க’ என்றார் . அவர் சொன்ன நபர்தான் பாடகரும் நடிகருமான கிருஷ் (நடிகை சங்கீதாவின் கணவர்) . அவரையே ஹீரோவாக்கினோம் ” என்கிறார் இயக்குனர் .
கிருஷை அறிமுகப்படுத்த வந்திருந்தார் விஜய் ஆண்டனி . “நான் இசையமைப்பாளராக இருந்து நடிகராக வந்தேன் . கிருஷ் பாடகராக இருந்து நடிகராக வந்தவர் . நல்ல திறமைசாலி. . அவர் வெற்றிபெற வாழ்த்துகள் ” என்றார் விஜய் ஆண்டனி .
விஜய் ஆண்டனிக்கு நன்றி சொல்லிப் பேசிய கிருஷ்
“எனக்கு எவ்வளவோ உதவிகள் செய்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. நான் ஒரு பாடகராக ஆகி பின்னர் எனக்கு ஒரு தொய்வு விழுந்த போது, வேட்டைக்காரன் படத்தின் எனக்கு விஜய் ஆண்டனி பாடக் கொடுத்த ‘ஒரு சின்னத்தாமரை … பாடல் எனக்கு ஒரு பிரேக் கொடுத்தது .
அந்தப் பாடல் பாடியதால் அதன் பிறகு நூறு பாடல்கள் நான் பாட முடிந்தது . அதற்காக விஜய் ஆண்டனிக்கு நன்றி . எனக்கு ஒரே வருத்தம் என்னவென்றால் மிக அற்புதமான இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி இப்போது இசை அமைப்பதே இல்லை . அது மாறவேண்டும் . அவர் மீண்டும் இசை அமைக்க வேண்டும் ” என்றார் .
“மிக அழகான கதை இது .இப்ராஹீம் ராவுத்தர் போன்ற சாதித்த, பெரிய தயாரிப்பாளர் படத்தில் நடிப்பது எனக்கு பெருமை” என்றார் சிருஷ்டி டாங்கே .
இப்ராஹீம் ராவுத்தர் பேசும்போது ” எனக்கு வயசு 63. நான் நாற்பது வருஷமா சினிமாவில் இருக்கிறேன். 26 படங்களை தயாரித்து உள்ளேன். பல மாபெரும் வெற்றிப் படங்களையும் கொடுத்துள்ளேன். சில சுமாரான படங்களையும் கொடுத்துள்ளேன் . எனது படங்கள் எல்லாம் குடும்பத்துடன் பார்க்கும் படங்களாக இருக்கும். இந்தப் படமும் அப்படித்தான் இருக்கும் .
இயக்குனர் தம்பி செய்யது இப்ராஹிம் என்னிடம் கதை சொன்னபோது , இந்த காலத்துப் பிள்ளைகளிடம் இவ்வளவு உயர்ந்த சிந்தனையா என்று வியந்தேன் . படம் எல்லோருக்கும் பிடிக்கும்படி இருக்கும் . எல்லோரும் குடும்பத்துடன் வந்து பார்க்கலாம் ” என்றார் .
பின்னே ? ராவுத்தர் படம் என்றால் மாவுத்தரும் வருவாரே !