விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆன்டனி தயாரிக்க,
விஜய் ஆண்டனி , சுஷ்மா ராஜ் நடிப்பில் என்.ஆனந் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் படம் இந்தியா பாகிஸ்தான். ஸ்ரீ கிரீன் புரடக்ஷன் எம் எஸ் ஷரவணன் இந்தப் படத்தை தமிழகம் முழுக்க வெளியிடுகிறார்.
அது என்ன இந்தியா பாகிஸ்தான்? போர்க்களம் பற்றிய படமா? அட்லீஸ்ட் கிரிக்கெட் களம் பற்றிய பாடமாகவாவது இருக்குமா?
– என்றுதானே கேட்கத் தோன்றுகிறது . ஆனால் ரெண்டுமே இல்லை .
கீரியும் பாம்பும் போல … எலியும் பூனையும் போல… என்று சொல்வோம் அல்லவா ? அது போலத்தான் இந்த இந்தியா பாகிஸ்தான் !
எஸ் அதே தான் ! காமடி களத்தில் அட்டகாசமாக குதித்து இருக்கிறார் விஜய் ஆன்டனி. .
‘அட்டம்ப்ட்’ கார்த்திக்கும் ( விஜய் ஆண்டனி ) ‘மெரிட்’ மெல்லினாவுக்கும் (சுஷ்மா ராஜ். கவனமா எழுதுங்கப்பா .. யாராவது பழக்க தோஷத்துல சுஷ்மா ஸ்வரராஜ்னு எழுதிடாதீங்க . அப்புறம் செங்கல் வரும் !) இடையே நடக்கிற அதகள , ரணகள… அந்தர, சுந்தர, கந்தர, காமெடி களேபரக் கலவரம்தான் இந்தப் படமாம் .
கதைப்படி இருவரும் வக்கீல்கள். ஆனால் சண்டைக் கோழிகள் . அதனால்தான் இந்தியா பாகிஸ்தான்!
ஆனாலும் ரொம்ப கவனமாக பொறுப்பாக அக்கறையாக வேறொரு விளக்கம் சொல்கிறார் விஜய் ஆண்டனி ” இந்தியா பாகிஸ்தான் என்பது இப்படி ஒரு அர்த்தம் கொடுத்தாலும் உண்மையில் இந்தியாவும் பாகிஸ்தானும் சகோதர நாடுகள். ஒரே நாடாக இருந்தவை. பின்னால் பிரிந்தது . பொதுவா நம்மை சம்மந்தமில்லாத யாராவது ஒருத்தர் என்ன சொல்லி இருந்தாலும் எவ்வளவு ஏமாத்தி இருந்தாலும் ஜஸ்ட் லைக் தட் மறந்துடுவோம் .
ஆனா நமக்கு ரொம்ப வேண்டிய ஒருத்தர் ஒரு சின்ன வார்த்தை சொல்லி இருந்தா கூட அதைத் தாங்க மாட்டோம். ரொம்ப வருத்தப்படுவோம் . அந்த வகையில்தான் இந்தியா பாகிஸ்தான் னுபடத்துக்கு வச்சோம் . காதலர்களுக்குள் வரும் சண்டை, காமெடி படம்தான் இது . அதே நேரம் நல்ல சமூக சிந்தனைகளையும் சொல்லி இருக்கோம் ” என்கிறார் தனக்கே உரிய தன்(ண்)மையான குரலில் .
பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் முன்னோட்டத்தையும் ஐந்து பாடல்களையும் திரையிட்டார்கள்.
சும்மா சொல்லக் கூடாது .
இது வரை சைலன்ட் சந்தனமாக இருந்த விஜய் ஆன்டனி இந்தப் படத்தில் குதூகலக் குங்குமமாக மாறி இருக்கிறார் .
பாபா பாஸ்கர் , அஜய் ராஜ் , செரீஃப் ஆகியோரின் நடன இயக்கத்தில் கும்மாங்குத்து நடனம் ஆடுகிறார் . பில்லா ஜெகனின் சண்டைப் பயிற்சியில் சண்டைக் காட்சிகளில் விஜய் ஆண்டனியின் வேகம் கூடி இருக்கிறது .
“பொதுவா நான் சொந்தக் காசில் குடிக்கிறது இல்ல.. ஏன்னா சொந்தக் காசில் குடிக்க முடிவு பண்ணிட்டா .. காசு இருக்கும்போது எல்லாம் குடிக்க தோணும் ” என்ற வசனத்தை, சுதந்திரமான அலசலான உடல் மொழிகளோடு காமெடியாக பேசி இருக்கிறார் .
இப்படியாக….
நான் , சலீம் ஆகிய படங்களில் இருந்து வேறு பட்டு இருக்கும் விஜய் ஆண்டனிக்கு நிச்சயமாக இந்தப் படம் ஒரு புது அவதாரம் . அவரது ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவம் என்பது இப்போதே புரிகிறது . (ரெண்டு மணி நேர படத்துக்கு ரெண்டு நிமிஷ காட்சி பதம் !)
பொதுவாக ஒரு படத்தின் ஐந்து பாடல்களை தொடர்ந்து பார்க்கும்போது ஒரு பாடலாவது கொஞ்சம் நெளிய வைக்கும் . ஆனால் ஐந்து பாடல்களும் இப்படி ஒலியில் இனிமையாகவும் ஒளியில் ரசனையாகவும் இருப்பது அபூர்வம் . இசையமைப்பாளர் தீனா தேவ ராஜன் , இயக்குனர் ஆனந், ஒளிப்பதிவாளர் ஓம் , படத் தொகுப்பாளர் தியாக ராஜன் ஆகிய நால்வரும் சித்து விளையாடி இருக்கிறார்கள் .
முதன்முதலாக ஒரு தயாரிப்பாளராக மேடை ஏறிப் பேசிய ஃபாத்திமா விஜய் ஆண்டனி ” இதுவரை எங்களுக்கு எல்லோரும் கொடுத்த ஒத்துழைப்பை இப்போதும் தர வேண்டும். இனி எப்போதும் தர வேண்டும் . படம் ஆரம்பித்த உடனேயே வெளியீடு உரிமைக்கு ஒப்பந்தம் போட்ட சரவணன் சாருக்கு நன்றி . இது குடும்பத்தோடு வந்து பார்த்து மகிழ வேண்டிய டீசன்டான படம் . நகைச்சுவையும் நல்ல விஷயங்களும் இதில் முக்கியமாக இருக்கும் . படம் மே எட்டாம் தேதி வெளியாகிறது. ” என்றார் .
ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் ஷரவணன் பேசும்போது
” அண்மையில் தமிழ்ப் படங்கள் மீண்டும் வெற்றிகரமாக ஓட ஆரம்பித்து இருக்கிறது. இது நல்ல விஷயம் . இந்தியா பாகிஸ்தான் அருமையான கண்ணியமான பொழுதுபோக்குப் படம் . நான், சலீம் படங்களை அடுத்து விஜய் ஆண்டனிக்கு இந்தப் படம் வருகிறது . சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் ஆன்டனியும் தயாரிக்கும் பாத்திமா விஜய் ஆன்டனியும் தொடர்ந்து வெற்றி பெறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை “என்றார் .
நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்தப் படத்தில் காட்ட முத்து (எழுத்துப் பிழை அல்ல!) என்ற கதாபாத்திரத்தில் பசுபதி நடித்து இருக்கிறார் .
“நிறைய படங்கள் கேட்டு வர்றாங்க . ஆனா எனக்கு பிடிக்காத காரணத்தால் நிறைய படங்களை நான் விலக்கிடுறேன். இந்தப் படத்து கேரக்டர் ரொம்ப புடிச்சு இருந்தது . ரசிச்சு நடிச்சேன் ” என்பது அவரது ஸ்டேட்மென்ட் .
விஜய் ஆண்டனி பேசும்போது “எப்படி தொடர்ந்து வெற்றி பெற முடியுதுன்னு எல்லாரும் கேட்கறாங்க .
இப்போ… வீட்ல சாம்பாரை ருசி பாக்குறோம் . நல்லா இருந்தா நல்ல இருக்குன்னு சொல்றோம் . இல்லன்னா நல்ல இல்ல உப்பு ஜாஸ்தின்னு சொல்றோம் .
சினிமாவை ருசி பாக்கறதும் அப்படிதான் . நான் யார் கிட்டயும் கதையோட கரு மட்டும் கேட்கறது இல்ல. பத்து நிமிஷம் பதினைஞ்சு நிமிஷத்துல கதை சொல்லச் சொல்றதும் இல்ல. முழுக்க முழுக்க ரெண்டு மணி நேரமும் சொல்லச் சொல்லி கேட்கறேன் . எனக்குள்ள ஒரு நல்ல ரசிகன் மட்டும் எப்பவுமே அலர்ட்டா இருப்பான் . அவனுக்கு புடிச்சா ஒகே சொல்றேன் . இல்லன்னா வேணாம்னு சொல்லிடறேன். அப்படித்தான் எல்லா படங்களும் பண்றேன் .
இந்தியா பாகிஸ்தான் கதை அப்படிதான் புடிச்சு இருந்தது . கதை கேட்ட ரெண்டு மணி நேரமும் சிரிச்சுட்டே இருந்தேன் . அதை நல்லா எடுத்து இருக்கோம் . அதனால் படம் நல்ல வந்திருக்கு .
இது மட்டுமில்ல அடுத்து நான் பண்ணப் போற பிச்சைக்காரன் , சைத்தான் , ஹிட்லர் போன்ற படங்கள் கூட அப்படிதான் . எல்லா படங்களையும் நானே தயாரிக்கிறேன் . நான் பெரும் பணக்காரன் இல்ல. யாருக்கும் பினாமி இல்ல … கடன் வாங்கித்தான் தயாரிக்கிறேன் . ஆனா ஒரு ரசிகனா கவனிச்சு வெற்றிப் படமா கொண்டு வர முடியும் ”
— என்று, அவர் சொல்கிற வார்த்தைகள் … சினிமாத் துறையில் உள்ள அத்தனை பேருக்கும் நம்பிக்கையூட்டும் என்பதில் சந்தேகமில்லை .
“எப்படி படத்துக்கு தைரியமாக பிச்சைக்காரன் என்ற பெயர் எல்லாம் வைக்கிறீங்க ?” என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் …..
” பிச்சைக்காரன் என்ற பெயர் ஒன்னும் கேவலமானது இல்ல .
இப்போ நம்ம கார் சிக்னல்ல நிற்கும்போது பிச்சைக்காரன் வந்து கை நீட்டறான் . நாம இல்லன்னு சொன்னா அவன் உடனே போயிடறான் .
ஆனா நாம அப்படி இல்ல . வாய்ப்பு இல்லன்னு சொல்ற இடங்களுக்கே மீண்டும் மீண்டும் போய் ஆறு மாசம் ஒரு வருஷம்னு நின்னு வாய்ப்புக் கேட்கறோம் . நம்மள நல்லா படிக்க வைக்க நம்ம அப்பா, யார் யார் கிட்டயோ பணத்துக்கோ உதவிக்கோ வாய்ப்புக்கோ இரந்து இருப்பாங்க . அம்மா யார் யார் கிட்டயோ கேட்டு இருப்பாங்க . நாம எல்லோருமே ஏதோ ஒரு விதத்துல பிச்சைக்காரன்தானே சார்… “.
”……………………….”