
பெரிய நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் சம்மந்தப்பட்ட ஒரு படம் நன்றாக ஓடாவிட்டால், மூன்றாம் நாள் படத்தின் சக்சஸ் மீட் ‘ என்று நிகழ்ச்சியை பத்திரிக்கையாளர்கள் முன்னால் நடத்தி, மேற்கொண்டு படத்துக்கு விளம்பரம் தந்து, இன்னும் கொஞ்சம் கலெக்ஷன் ஏறுமா என்று தம் கட்டிப் பார்ப்பதுதான் இப்போதைய வழக்கம் .
ஆனால் இதில் இருந்து மாறுபட்டு, படம் நிஜமாகவே நன்றாக ஓடிக் கொண்டு இருக்கும் நிலையில், படம் ரிலீஸ் ஆன ஏழாவது நாள் நிஜமான சக்சஸ் மீட் நடத்தி, கேக் வெட்டி கொண்டாடியது விஜய் ஆண்டனி உள்ளிட்ட சலீம் குழு .

“எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி” என்றார் இயக்குனர் நிர்மல் குமார்.
“என் முதல் தமிழ்ப் படமே வெற்றிப் படமானது சந்தோஷமாக இருக்கிறது” என்றார் கதாநாயகி அக்ஸா பர்தசனி
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் படத்தை தமிழகம் முழுக்க வெளியிட்டு இருப்பவருமான ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் சரவணன் வெகு யதார்த்தமாக பேசினார்
” விஜய் ஆண்டனி சார் உண்மையிலேயே மிகப்பெரிய உழைப்பாளி மற்றும் திறமைசாலி
. படம் திரையிட்ட எல்லா தியேட்டர்களிலும் எம் .ஜி. எனப்படும் மினிமம் கேரண்டியை நேர் செய்து விட்டு அதற்கும் மேல் நன்றாக ஓடிக் கொண்டு இருக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் இது எவ்வளவு பெரிய விசயம் என்பது சினிமா வியாபாரம் தெரிந்தவர்களுக்கு தெரியும் ” என்றார் .

தயாரிப்பாளர் ஸ்டுடியோ 9 சுரேஷ் களஞ்சியம் பேசும்போது , “இப்படி ஒரு அற்புதமான படத்தைக் கொடுத்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி.
துபாயில் இருந்து எனக்கு ஒரு முஸ்லிம் பெரியவர் எனக்கு போன் பண்ணினார். கடந்த பத்து வருடமா சினிமாவுக்கே போகாதவர் அவர். ஆனா இந்தப் படத்தை குடும்பத்தோட தியேட்டரில் போய் பார்த்தேன்னு சந்தோஷமா சொன்னார்.
தனக்கு தெரிஞ்ச எல்லா உறவினர்களுக்கும் போன் பண்ணி இந்த படத்தை அவசியம் பாருங்கன்னு சொல்வதாகவும் சொன்னார் .
பொதுவா சினிமாவில் பெரும்பாலும் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கும் நிலையில், சலீம் என்ற பெயரில் கதாநாயகனாக வைத்து ஒரு நல்ல படம் எடுத்திருப்பதை அவர்கள் சந்தோஷமாக உணர்கிறார்கள். ” என்றார்
நிகழ்ச்சியில் பேசிய எல்லோருமே விஜய் ஆண்டனியின் மனைவியும் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவருமான பாத்திமாவை பாராட்டத் தவறவில்லை
கடைசியாக மைக் பிடித்த விஜய் ஆண்டனி “சமூகப் பிரச்னைகளை தொட்டு விறுவிறுப்பான படமாக கொடுத்ததால் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
240 தியேட்டர்களில் திரையிடப்பட்டு 300 தியேட்டர்களாக உயர்ந்துள்ளது.படம் வெற்றிகரமாக ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் எடுக்கிற எல்லாப் படங்களுமே நல்ல படங்களாகத்தான் இருக்கும் .
ஒரு படம் முழுசா எடுத்து முடிச்ச அப்புறம் போட்டுப் பார்த்து எனக்கு புடிக்கலைன்னா அந்தப் படத்தை நெருப்பு வச்சுக் கொளுத்துவேன்.அதுல மாற்றமே இல்ல.

‘நான்’ படத்தின் இரண்டாம் பாகம்தான் சலீம் படம் வந்தது . இதன் தொடர்ச்சி அதாவது 3–ம் பாகத்தை எடுத்து அடுத்த வருடம் வெளியிடுவேன்.
அதுக்கும் முன்னாடி ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் நடிக்கிறேன். அதுல நான் எப்படி இந்தியாவை காப்பாத்தறேன்னு‘ நீங்க பாக்கலாம் “என்றார்.
படம் பாக்கற ரசிகர்களை கதற விடாம இப்படியே காப்பாத்தினாலே புண்ணியம் சார் .