
ரைசிங் சன் பிலிம்ஸ் சார்பில் கே.என்.ரவிசங்கர் வழங்க, ஹெச்.என் கவுடா தயாரிப்பில் புதுமுகம் வினய் கிருஷ்ணா, ஹாஷிகா தத், ஸ்ரீமன், சென்ட்ராயன் ஆகியோர் நடிக்க , வீரா என்பவர் எழுதி இயக்கும் படம்…. ‘ஒரு பந்து நாலு ரன் ஒரு விக்கெட்’
”கிரிக்கெட் இருந்தாலும் இது கிரிக்கெட் படம் அல்ல “என்று சொல்லும் இயக்குனர் வீரா , “இந்தியா பாகிஸ்தான் மேட்சை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒரு நபர். கடைசி ஒரு பந்துதான் இருக்கிறது . பாகிஸ்தான் பவுலிங் . இந்தியா பேட்டிங் . நாலு ரன் கிடைத்து விட்டால் இந்தியாவுக்கு வெற்றி. விக்கெட் விழுந்து விட்டால் பாகிஸ்தானுக்கு வெற்றி .
அந்த பந்து வீசப்படுகிறது . டிவியில் அந்த மேட்சை பார்த்துக் கொண்டு இருப்பவருக்கு அப்போது நடக்கும் சம்பவங்கள்தான் இந்த ஒரு பந்து நாலு ரன் ஒரு விக்கெட் படம் ‘ என்கிறார் . (ஒரு பந்து , ஒரு பவுண்டரி, ஒரு விக்கெட் ” என்று பெயர் வைத்து இருந்தால் இன்னும் ரைமிங்கா இருந்திருக்காது?)
படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி . பாடல்களை பெற்றுக் கொண்டவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா.
சன் பிக்சர்சில் பணியாற்றி பிறகு கொஞ்ச காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த சக்சேனா மீண்டும் களம் இறங்கி இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறார்.

இவரோடு தி வைப்ரன்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் வெங்கடேஷ் ராஜாவும் சேர்ந்து வெளியிடுகிறார் .”படத்தின் பெயருக்கு டைரக்டர் வீரா சொன்ன காரணம் மிகவும் பிடித்து இருந்தது . தவிர ரவிஷங்கர் எனது நண்பர் . இரண்டையும் விட முக்கியமாக படம் ரொம்ப நன்றாக இருக்கிறது . அதனால்தான் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறேன் ” என்றார் சக்சேனா .
விஜய் சேதுபதி பேசும்போது “இந்தப் படம் சம்மந்தப்பட்ட யாரையும் எனக்கு முன்னாடியே தெரியாது . நேத்து கூப்பிட்டாங்க . வந்திருக்கேன். எனக்கு தெரிஞ்சவரை சினிமாவில் கஷ்டப்பட்டு வேலை செஞ்சதா எல்லாம் சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இல்லை . யாரு கஷ்டப்படல? எல்லாரும் எல்லா வேலையையும் கஷ்டப்பட்டுதான் பண்றாங்க . எதைப்பத்தியும் கவலைப்படாம நாம நம்ம வேலையை செஞ்சுட்டு போக வேண்டியதுதான் . அதைத்தான் நான் செய்யறேன் ” என்றார் .

பெரிய அளவில் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வன்மம் படம் அந்த அளவு போகாத நிலையில் , அது பற்றிய விஜய் சேதுபதியின் மன நிலையை வெளிப்படுத்தும் பேச்சாகவே அது இருந்தது.
கேசுவலாக பேசிய இயக்குனர் வீரா ” இந்தப் படத்தை தயாரிப்பதே படத்தின் கதாநாயகி ஹாசிகாதான் அப்படின்னு ஒரு வதந்தி இருக்கு . அது உண்மை இல்ல .

தயாரிப்பாளருக்கு நிறைய பிசினஸ்கள் இருக்கு. அவரால சினிமாவுல மட்டும் கவனம் செலுத்த முடியாது. அவருக்கு தெரிந்தவர் ஹாசிகா என்பதால் தயாரிப்பில் அக்கறை எடுத்துக் கொண்டார். அதனால் ஹாசிகாதான் தயாரிக்கிறார் என்பது தவறு . படத்தை வாங்கி வெளியிடும் சாக்ஸ் சாருக்கு நன்றி. இந்த வாரம் ஆடியோ ரிலீஸ் பண்றோம் . டிசம்பர் அஞ்சாம் தேதி திரைக்கு வர்றோம்.

எனக்கு தெரிந்து பாடல் வெளியிடப்பட்ட ஒரே வாரத்தில் திரைக்குவரும் படம் எங்கள் படம்தான் ” என்றார் உற்சாகமாக.
செஞ்சுரி அடிங்க !