வி ஆர் எல் பிலிம் புரடக்ஷன்ஸ் சார்பில் ஆனந்த் சங்கேஷ்வர் தயாரிக்க , நிஹால், சிறீ பிரகலாத் , அனந்த நாக் , வினையா பிரசாத், பரத் போபன்னா , அர்ச்சனா கொட்டிகே நடிப்பில் எழுதி, தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் ஆடை வடிவமைப்பும் செய்து ரிஷிகா ஷர்மா இயக்கி இருக்கும் படம்.
ஓர் உண்மை வரலாற்றின் திரைப்பட வடிவம் இந்தப் படம். கர்நாடகாவில் ஹூப்ளி பகுதியில் ஒரு பிரிண்டிங் பிரஸ் வைத்து இருந்த பி ஜி சங்கேஷ்வரின் இளைய மகனாகப் பிறந்து தொழில் துறையிலும் சமூகம் மற்றும் அரசியல் துறையிலும் பல சாதனைகள் செய்த விஜய் சங்கேஷ்வரின் நிஜ வரலாற்றை சொல்லும் படம் இது . அவரின் பின்னாளைய சாதனைகளுக்கு துணையாக இருந்த அவரது மகன் ஆனந்த் சங்கேஷ்வர் அப்பாவின் வரலாற்றை நினைத்துப் பார்ப்பது போல அமைந்த படம் .
தனது அப்பாவின் பிரிண்டிங் பிரஸ்சுக்கு முதன் முதலில் ஆட்டோமாட்டிக் பிரிண்டிங் மெஷின் வரவழைப்பதில் துவங்குகிறது விஜய் சங்கேஸ்வரின் சாதனை.
அனுபவம் இல்லாத வாகனப் போக்குவரத்துத் துறையில் ஆர்வத்தோடு இறங்கி, தன் பெயரையும் மகன் பெயரையும் சேர்த்து விஜயானந்த் ரோடு வேஸ் என்று பெயர் வைத்து , பலரின் எதிர்ப்புகளையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டு வளர்ந்து , போட்டி நிறுவனங்களின் வஞ்சக செயல்களால் பெரும் பாதிப்புக்கு ஆளாகி,
கடும் உழைப்பு நேர்மை , சொன்ன சொல் தவறாமை ஆகிய குணங்களால் மீண்டு எழுந்து , தன்னை அவமானப்படுத்திய பத்திரிகை அதிபரைப் பார்த்து, ஒரு நாளிதழ் துவங்கி குறுகிய காலத்தில் அதை கர்நாடகாவின் நம்பர் ஒன் நாளிதழாக கொண்டு வந்து அரசியல் அழுத்தம் காரணமாக அதை விற்று விட்டு, மீண்டும் ஒரு நாளிதழை துவங்கி அதை நம்பர் ஒன் நாளிதழாக கொண்டு வந்து , எம் பியாகி பல சாதனைகள் செய்த விஜய் சங்கேஸ்வரின் இன்றைய வரைக்குமான சாதனைகளை படம் விரிவாகப் பேசுகிறது .
விஜய் சங்கேஸ்வராக நிஹால் மிக உணர்ந்து இயல்பாக நடித்துள்ளார் . பல்வேறு வயதுத் தோற்றங்கள், அதற்கு ஏற்ற உடல் மொழிகள், என்று கேரக்டரை உள்வாங்கி ஜொலிக்கிறார் . சமையல்கட்டில் அமர்ந்து அழும் காட்சி ஓர் அட்டகாச உதாரணம்
மிக சிறப்பான படமாக்கல், அற்புதமான இயக்கம் , நடிகர்களிடம் வேலை வாங்கிய விதம் , காட்சிகளை முடிந்த வரை சிறப்பாக அமைப்பது என்று பாராட்டும்படி ராட்சஷ உழைப்புக் கொடுத்து இயக்கி உள்ளார் ரிஷிகா ஷர்மா. மிகத் தேர்ந்த இயக்குனராக பிரகாசிக்கிறார். அவ்வளவு அழுத்தமான இயக்கம். பாராட்டுகள்.
கணேசன் பாத்திரத்தில் கம்பீரமாக வளைய வருகிறார் ரவிச் சந்திரன். மிக அழகாக அந்தக் கேரக்டருக்கு நியாயம் செய்கிறார் . அருமை.
சிறீ பிரகலாத் , அனந்த நாக் , வினையா பிரசாத், பரத் போபன்னா ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர் .
மிக சிறப்பாக வசனனங்களையும் பாடல்களையும் எழுதி உள்ளார் மதுர கவி .
கீர்த்தன் பூசாரியின் ஒளிப்பதிவு , ஹேமந்த் குமாரின் படத் தொகுப்பு யாவும் மிக நேர்த்தியாக இயங்கி படத்துக்கு தரக் கூட்டல் செய்கின்றன.
காட்சிகளை உணர்வு ரீதியாக தூக்கிப் பிடிக்கிறது கோபி சுந்தரின் இசை , . இயக்குனர் ரிஷிகா ஷர்மாவின் ஆடை வடிவமைப்பும் சிறப்பு..
பணத்தை தேவைக்கு ஏற்ப ஏராளமாகச் செலவு செய்து மிகத் தரமாக எடுத்து உள்ளார் தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஷ்வர்.
பிரச்னை எங்கே வருகிறது என்றால்…
நம்முடைய கதையை- நமக்கு வேண்டியவர்கள் பிடித்தவர்கள் கதையை – நம்மிடம் யாராவது சாதாரணமாக சொன்னால் கூட நமக்கு அது பிடிக்கும் . காரணம் நாம் முன்பே உணர்ந்த விஷயம் என்பதால் அதை நம் லெவலுக்கு நாம் கற்பனை செய்து கொள்வோம் .
ஆனால் ஒரு திரைப்படத்தின் திரைக்கதை என்பது தெரியாதவர்களும் பார்க்கும்போது ரசிக்கும்படி இருக்க வேண்டும் .
இந்தப் படத்தின் திரைக்கதை சங்கேஷ்வர் குடும்பத்தை மதிப்பவர்கள் மட்டும் ரசிக்கும்படி இருக்கிறது . எல்லோரும் உணர்வுப்பூர்வமாக உள்ளிறங்கி ரசிக்கும்படி அமைக்கப்படவில்லை .
எனினும் சங்கேஷ்வர் குடும்பம் பற்றி காலகாலமாக எல்லோருக்கும் சொல்லும் வகையில் அந்தக் குடும்பத்தினர் , நண்பர்கள் , உறவினர்கள், வி ஆர் எல் நிறுவனங்களில் பணியாற்றுவோர் பெருமைப்படும் ஒரு ஆவணமாக இருக்கும் .