ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் புரடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க , விக்ரம் – சமந்தா நடிப்பில் ….
நீண்ட அனுபவம் பெற்ற ஒளிப்பதிவாளரும் கோலிசோடா மூலம் சிறப்பான இயக்குனராகவும் உயர்ந்தவருமான விஜய் மில்டன் எழுதி இயக்கி இருக்கும் ’10 எண்றதுக்குள்ள’ படம் வரும் 21 ஆம் தேதி திரைக்கு வருகிறது .
இதையொட்டி பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் ஏ ஆர் முருகதாஸ், விஜய் மில்டன் மற்றும் விக்ரம் .
படத்தின் பாடல்கள் டீசரும் முன்னோட்டமும் திரையிடப்பட்டது .
”மதுர ஜில்லா மச்சக்காரி …” டியூன் மாதிரியான டியூனில் வரும் ஒர் அட்டகாசமான பாடல்……
நவராத்திரி படத்தில் பைத்தியக்கார மருத்துவமனையில் சாவித்ரியும் மனோரமாவும் பாடும் ”ஒண்ணும் ஒண்ணும் மூணு.. மூணு ரெண்டும் அஞ்சு… ஆறு ஏழு எட்டு ” பாடல் பாணியில், வைக்கம் விஜயலட்சுமி சுறுசுறுப்பாக சுதி ஏத்தும் ஒரு பாடல் உட்பட…
பாடல்கள் எல்லாம் உற்சாக ஊற்றாக இருந்தன .
முன்னோட்டம் ?
விதம்விதமான கார்கள் விதம்விதமான வகையில் விதம்விதமான திசைகளில் இருந்து வந்து விதம்விதமாக விழுந்து மோதி உரசி பறந்து நசுங்கி…..
a traier on wheels என்று சொல்லும் அளவுக்கு அதகளப்படுத்துகிறது .
விஜய் மில்டனின் கேமராக் கோணங்கள் , ஆக்ஷன் ஷாட்கள் அருமை. ஓர் இடைவெளிக்குப் பிறகு ஜெமினி, பட ஸ்டைலில் கமர்ஷியல் துள்ளல் துள்ளுகிறார் விக்ரம் . கண்ணாடி போட்ட அழகு அசட்டுப் பெண்ணாக சமந்தா .
படத்தில் ஒரு கார் சேசிங் காட்சிக்கு ஆலோசனை சொல்லி பலம் சேர்த்திருக்கிறார்,
தமிழகத்தின் பிரபல கார் ரேஸ் வீரர் நரேன் கார்த்திகேயன் .
தெலுங்கான கிளாமர் பெண்ணாக , செக்கச் செவேர் மிளகாய்க் கூடையை வைத்துக் கொண்டு, ஒரு பாட்டுக்கு காரமான குத்தாட்டம் போடுகிறார் ஷர்மி .
நிகழ்ச்சியில் பேசிய ஏ ஆர் முருகதாஸ் ” சொன்ன கதையை பல மடங்கு சிறப்பாக எடுத்துக் கொடுத்திருக்கிறார் விஜய் மில்டன் . பொதுவாக ஒரு படத்துக்கு அம்மா என்றால் அது இயக்குனர்தான் . அவர்கள்தான் படத்துக்காக ரொம்ப உழைப்பார்கள் .
ஆனால் அதே படத்தில் விக்ரம் நடிக்க வந்து விட்டால் அந்த படத்துக்கு இரண்டு அம்மாக்கள் கிடைத்து விடுவார்கள் . அந்த அளவுக்கு அந்தப் படத்துக்காக உழைப்பார் விக்ரம் . அந்த வகையில் இந்தப் படத்துக்கு இரண்டு அம்மாக்கள் இருந்ததால்தான் படம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது ” என்றார் .
விஜய் மில்டன் தன் பேச்சில் ”
கோலிசோடா படத்தை ஒருநாள் நைட் ஷோ பார்த்த விக்ரம் சார், அந்த நள்ளிரவில் எனக்கு போன் செய்து அந்தப் படத்தின் ஒவ்வொரு விசயத்தையும் நுணுக்கமாக பாராட்டிப் பேசினார் . எனக்கு சந்தோஷமாக இருந்தது . ‘எனக்கு ஏதாவது கதை இருக்கா ?” என்றார். ‘இருக்கு’என்றேன். ‘கிளம்பி வாங்களேன் .. பேசலாம் ‘ என்றார், அந்த நள்ளிரவில் . அந்த அளவுக்கு சினிமா மீது நேசம் .
“இல்லை சார் . நாளைக்கு வர்றேன் ” என்றேன் நான் . சந்தித்து கதை சொன்னேன் . அவருக்கு பிடித்து இருந்தது . அதே சமயத்தில் முருகதாஸ் சாரும் கதை கேட்டார் . நாங்கள் இணைந்தோம் .
தமிழ்நாட்டில் இருந்து உத்தரகாண்ட் வரை பயணம் செய்கிற — எந்த வகையிலும் சம்மந்தம் இல்லாத — ஓர் ஆண் ; ஒரு பெண்ணின் பயணமே இந்தப் படம். உத்தரகாண்ட் பகுதியை மட்டும் நேபாளத்தில் எடுத்தோம் . அவ்வளவு அழகு . உலகம் எங்கும் தேடினாலும் கிடைக்காத, இன்னும் கேமரா பதியாத பல அற்புதமான லொக்கேஷன்கள் நேபாளத்தில் இருக்கின்றன .
ஒரு படத்தை இயக்குவதற்கான எல்லா திறமையும் தகுதியும் கொண்டவர் விக்ரம் . அவருடைய அந்தத் திறமையையும் நான் இந்தப் படத்தில் பயன்படுத்திக் கொண்டேன் . சமந்தா ஒரு வித்தியாசமான கேரக்டரில் கலக்கி இருக்கிறார் . இமானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் அப்படியே .
கோலிசோடா என் சொந்தப்படம் . ஆனால் இது இன்னொரு நிறுவனத்துக்கு நான் செய்யும் படம் . எனினும் சொந்தப் படம் போல இயல்பாக இயங்க வைத்த முருகதாஸ் சாருக்கும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்கும் நன்றி “என்றார்
அடுத்து பேச ஆரம்பித்தார் விக்ரம் “கமர்ஷியல் சினிமாவுக்கும் யதார்த்த சினிமாவுக்கும் இருக்கிற வித்தியாசத்தைக் குறைக்கும் முயற்சியில் வெற்றி பெற்று இருக்கும் படம்தான் இது .
எனக்கு விஜய் மில்டனை ஒரு கேமரா மேனாக ரொம்ப நாளா தெரியும் . கோலிசோடாவில் அசத்தி இருந்தார். அந்த உணர்வில் ஆரம்பித்த படம் இது .
இந்தப் படத்தில் பல வித்தியாசமான கேமரா கோணங்களை பயன்படுத்தி இருக்கார் . முழுக்க வாகனம் , பயணம் , சேசிங் சம்மந்தப்பட்ட படம் என்பதால் நிறைய ரிஸ்க் ஷாட்கள் எல்லாம் இருந்தது . ஆனால் முடிந்தவரை பாதுகாப்பா நடிச்சேன் . மீறி சில சமயம் சில ரிஸ்க் இருந்தது . ஆனா அது எல்லாம் சகஜம் . ரோட்ல சும்மா நடந்து போனா கூட கார் வந்து மோதுறதுக்கு வாய்ப்பு இருக்கு . அப்படிதான் இதெல்லாம் .
அப்புறம் … இந்த படத்துல சாம் ஓர் அற்புதமான கேரக்டர் பண்ணி இருக்காங்க . ரொம்ப நைஸ் கேரக்டர் அது . அதை சாம் ரொம்ப நல்லா பண்ணி இருக்காங்க . சாம் எவ்வளவு பெரிய திறமையான ஆள். என்பது இந்தப் படத்துல தெரியும் ” என்று விக்ரம் கூற …
‘சாமா ?படத்தில் சாம் என்று எந்த நடிகரும் இருப்பதாக தெரியவில்லையே . யாராக இருக்கும்?’ என்று ஆர்ட்டிஸ்ட் லிஸ்டை தேடினால் …
அட ! சமந்தாவைதான் செல்லமாக சாம் என்று சொல்கிறார் விக்ரம் .
பத்து எண்றதுக்குள்ள , என்ன ஓர் இன்ப அதிர்ச்சி !