
என்ன கருமத்தைச் சொல்ல ….
இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் .. யானை மட்டுமல்ல … யானை வேட்டை ஆடிய வீரப்பனும்தான் . .
செத்துப் போனவன் வந்து எது பொய்? எது உண்மை என்று விளக்கவா போகிறான்? அந்த தைரியத்தில் படம் எடுக்கிறேன் என்ற பெயரில் அவனைப் பற்றி என்ன வேண்டுமானலும் சொல்லலாமே.
வீரப்பன் ஒரு தமிழன் என்பதை வைத்துக் கொண்டு தமிழ தேசியத்தின் காவிய அடையாளமான வேலுப்பிள்ளை பிரபாகரனை இன்னும் கேவலப்படுத்தலாம் .
பிரபாகரன் இருந்த அதே இலங்கையில் இதிகாச காலத்தில் வாழ்ந்த ராவணன் வரை எல்லோரையும் வகைதொகையில்லாமல் தூற்றி பரபரப்பு ஏற்படுத்தி வடக்கத்தியர்களை குஷிப்படுத்தி காசு சம்பாதிக்கலாம் ..
இந்த கேவலமான கீழ்த்தரமான நோக்கத்தோடு , சந்தன கடத்தல் வீரப்பனை அதிரடிப்படை பிடித்த கதை என்று….
ஏகப்பட்ட பொய் புரட்டுக்களோடு ஒரு படம் எடுத்து நம்மிடமே மடியேந்தி வந்திருக்கிறார் ராம் கோபால் வர்மா .
வீரப்பனைப் பிடிப்பதற்காக அவனால் கொல்லப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரியின் மனைவியை ஆபரேஷனில் சேர்க்கிறதாம் அதிரடிப்படை .
அந்த பெண், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிக்கு உதவுவது போல நடித்து, வீரப்பனை பற்றி தகவல் அறிந்து அவனைப் பிடிக்க உதவுகிறாளாம்.
ஒரு நிலையில் வீரப்பன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரனை சந்திக்க விரும்புகிறானாம். முகிலன் என்ற விடுதலைப்புலி மூலம் பிரபாகரன் அதற்கு சம்மதம் தர,
அந்த முகிலனுக்குப் பதிலாக ஒரு போலீஸ் அதிகாரியை அனுப்பி ,
பிரபாகரனை சந்திக்கப் போகிறோம் என்று வீரப்பனிடம் சொல்லி , அதற்காக வீரப்பனை ஆம்புலன்சில் வர வைத்து, சுட்டுக் கொன்றதாம் .அதிரடிப்படை
( அதாவது, கண் பார்வை மங்கி ஆபரேஷனுக்கு வந்த வீரப்பனை மோரில் விஷம் கொடுத்துக் கொன்று ஆம்புலன்சில் பிணத்தை போட்டு, நெற்றியில் பொட்டு வைக்கிற கணக்காக சுட்டு ,,
அப்புறம் ஆம்புலன்ஸ் முழுக்க துப்பாக்கியால் சுட்டு சல்லடை போட்டு வீரப்பனை சுட்டுப் பிடித்ததெல்லாம் பொய்யாம்)
இது இப்படி இருக்க,
வீரப்பனை பிடித்த அதிரடிப்படையில் இருந்த முக்கிய அதிகாரிக்கும் (அதாவது ஐ பி எஸ் விஜயகுமார் கேரக்டர் அல்லது அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த அதிகாரி கேரக்டர் )
அவரது சக போலீஸ் அதிகாரியான குமார் என்பவருக்கும் ரொம்ப நாளாக ஈகோ சண்டையாம்.
அதனால் வீரப்பனை பிடிக்க குமாரைப் பயன்படுத்திக் கொண்டஅந்த முக்கிய அதிகாரி வேலை முடிந்ததும் குமாரை பெட்ரோல் .ஊற்றி எரித்துக் கொன்றாராம்
இதுதான் இந்த வில்லாதி வில்லன் வீரப்பன் படம் .
எப்படி கதை ?
வீரப்பன் சந்தன மரம் வெட்டிக் கடத்தினான் . யானைகளை தந்தததுக்காக வேட்டையாடினான் .
ஆனால் அவனால் சுட்டுக் கொல்லப்பட்ட முதல் மனிதன் யார் தெரியுமா?
கர்நாடகப் பகுதியில் கூலி வேலைக்குப் போன தமிழ்ப் பெண்களை, அவர்கள் தமிழச்சிகள் என்ற ஒரே காரணத்துக்காக பாலியல் பலாத்காரம் செய்ததோடு ,
சித்திரவதை செய்வதையும் வழக்கமாக வைத்திருந்த ஒரு கன்னட வெறி பிடித்த கன்னட காட்டு இலாகா அதிகாரிதான் வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்ட முதல் மனிதன்
இதை நேர்மையாக பதிவு செய்யும் அளவுக்கு ராம் கோபால் வர்மாவுக்கு ஆண்மை இல்லை .
அந்த கொலைக்குப் பிறகே, வீரப்பன் தன்னைப் பிடிக்க வந்து அதன் பேரில் அப்பாவி மக்களை கொடுமை செய்தவர்களையும் , துரோகிகளையும் தனது ஆட்களைக் கொண்ட காவல்துறையினரையும் கொன்றான் .
அவற்றில் சில கொடூரமான மரணங்கள் . .அவற்றுக்காக சட்ட ரீதியாக வீரப்பன் தண்டிக்கப்பட வேண்டியவன் . அதில் துளியும் மாற்றுக் கருத்து இல்லை
ஆனால் வீரப்பன், தான் கொன்ற எல்லோரையுமே ஏ ஏ ஏ … கை கால்களை எல்லாம் தனித்தனியாக வெட்டி, தலையில் கல்லைப் போட்டுத்தான் கொன்றான் என்று,
சைக்கோ போல ராம் கோபால் வர்மா காட்டி இருப்பது யாரை திருப்திப்படுத்த என்றுதான் தெரியவில்லை .
ஒரு வேளை வீரப்பன் இடத்தில் ராம் கோபால் வர்மா இருந்து இருந்தால் இப்படிதான் அரைப்பைத்திய சைக்கோவாக இருந்திருப்பாரோ என்னவோ தெரியவில்லை .
அது மட்டுமல்ல , வீரப்பனால் ஒரு பெண் போலீஸ் அதிகாரி கூட சுட்டுக் கொல்லப்பட்டதாக எந்த பதிவும் இல்லை .
ஆனால் பல அப்பாவிப்,பெண்களை, சிறுமிகளை, கர்நாடக பெண் போலீசாரை , அதிரடிப்படை பெண் போலீசாரை எல்லாம் வீரப்பன் சுட்டுக் கொன்றதாக அநியாயமாக பொய் சொல்கிறார் ராம் கோபால் வர்மா .
இதோடு போச்சா ?
போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக, வீரப்பன் கைக்குழந்தையான தனது மகளையே கொன்றதாக ஒரு காட்சி வைத்து விட்டு,
பிறகு ‘அது தமிழக போலீஸ் சொல்லும் கட்டுக்கதை . போலீசிடம் இருந்து தப்பி ஓடும்போது குழந்தை கீழே விழுந்து இறந்து விட்டது.
குழந்தையை காப்பாற்ற முயலாமல் வீரப்பன் ஓடி விட்டான் ‘ என்று சொல்லி சமாளிக்கிறார்
“நான் ஒரு அரக்கன் . என்னை விட பெரிய அரக்கன் ராவணன். நான் செத்து மேலோகம் போனா என்கிட்ட ராவணன் , ‘என்ன வீரப்பா .. நான் அடுத்தவன் (ராமன்) பொண்டாட்டியையே தூக்கிட்டு வந்தவன் .
ஆனா நீ உன் பொண்டாட்டியையே போலீஸ்கிட்ட மாட்டிக்க வச்சுட்டியே ;ன்னு கேட்பானே “என்று ஒரு வசனம் .
என்ன ஒரு கேவலம்!
”தீக்குளித்த சீதை
சேதமின்றி
எழுந்து வந்தாள்.
அங்கே நிரூபணமானது ….
ராவணனின் கற்பு !
— என்ற ஒரு உயர்ந்த உன்னதமான சிந்தனைப் பதிவு நம்மவர்களிடையே உண்டு .
கஞ்சா புகை படிந்து படிந்தே நாறிக் கிடக்கும் ராம் கோபால் வர்மா மூளைக்குள் இதெல்லாம் எப்படி ஏறும் ?
வீரப்பனின் மனைவியான முத்துலட்சுமி ,கேரக்டரில் நடித்து இருக்கும் நடிகையின் உடம்பில், விசாரணையின் போது அதிரடிப்படை அதிகாரிகள் கண்ட இடத்தில் கை வைப்பதாக ஒரு காட்சி .
அது கூட அதிரடிப்படையினரின் செயல்பாடு என்று வைத்துக் கொள்ளலாம் .
ஆனால் படத்தில் முத்துலட்சுமி கேரக்டரில் நடித்து இருக்கும் நடிகை சாதாரண காட்சிகளில் கூட , முந்தானை விலகியபடி உடை அணிந்து இருப்பது போல காட்டி இருக்கிறார் ராம் கேவல வர்மா .
அந்த கேரக்டரில் நடித்து இருக்கும் நடிகைக்கு வேண்டுமானால் அது சாதாரண விசயமாக இருக்கலாம் .
ஆனால் இப்போதும் கண்ணியமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் குடும்பப் பெண்ணான முத்துலட்சுமியை அப்படி அருவருப்பாக சித்தரித்து இருக்கும் ராம்கோபால் வர்மா,
தனது வீட்டுப் பெண்களை ஒரு படத்தில் கேரக்டராக வைத்தால்கூட முந்தானை ஒதுக்குவாரோ?
இப்படிக் காட்டி விட்டு அதிரடிப்படை பெண்களை அசிங்கபடுத்திய்து என்று படத்தில் நீலிக் கண்ணீர் வடிக்க உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது ராம் கோயபல்ஸ் வர்மா ?
ஒரு காட்சியில் பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலையும் அசிங்கப்படுத்துகிறார் இவர் .
வீரப்பன் ராஜ்குமாரை மட்டும் கடததவில்லை ரஜினிகாந்தை கடத்த முயன்றான் . காஞ்சி சங்கராச்சாரியாரைக் கடத்த முயன்றான் என்று, சும்மா அள்ளி விடுகிறார்கள் .
ஏன்… அப்படியே அமிதாப் பச்சன் , சச்சின் டெண்டுல்கர், பில் கிளிண்டன் , ஒரு வேற்று கிரகவாசி எல்லோரையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதானே … ஏன் நிறுத்திட்டீங்க ராம கோயபல்ஸ் வர்மா ?
தவிர, வீரப்பனுக்கு லஷ்கர் ஈ தொய்பா அமைப்புடன் தொடர்புடையவராக கூறப்படும் அப்துல் நாசர் மதானியுடன் தொடர்பு இருந்தது என்று வேறு சொல்கிறார் . அவ்ளோதானா கோவாலு?
சிமி, ஐ எஸ் ஐ , அல்குவைதா , மொசார்ட் , ஆகியவற்றுடன் தொடர்பு இருந்ததாகவும் சொல்லி இருக்கலாமே ..
ஒசாமா பின்லேடனும் வீரப்பனும் ஓக்லஹாமாவில் வோட்கா குடித்த ‘கதை’யை உங்களுக்கு யாரும் சொல்லலியா கோவால் ?
” என் கைக்கு ஏ கே 47 வரட்டும் . எல்லோரையும் உண்டு இல்லன்னு பண்றேன் . கவர்மென்டையே கவுக்குறேன்” என்று வீரப்பன் சொல்வதாகவும் வசனம் .
இப்படி எல்லாம் வசனம் வைத்தால் தமிழக அரசை தாஜா செய்யலாம் என்று நம்பி இருக்கிறார் ராம் கோவால் .
அதனால்தான் ஆஸ்திரேலிய அரசாங்கத்தை கவிழ்க்க வீரப்பன் போட்ட சபதத்தை சொல்லாமல் பெருந்ந்ந்ந்ந்தன்மையாக விட்டு விட்டார் .
உங்களை மாதிரி கோமாளி சினிமா உலகிலேயே இல்லை கோவாலு .
எல்லாவற்றையும் விட கண்பார்வை மங்கிய நிலையில் வயதாகி உடல் தளர்ந்து ஆபரேஷன் ஆசை காட்டி அழைத்து வரப்பட்டுதான், வீரப்பன் கொல்லப்பட்டான் என்கிற உண்மை பச்சைப் பிள்ளைக்குக் கூட தெரியும்.
அதை மறைத்து , வீரப்பன் பிரபாகரனை பார்க்க போனான் அப்போது அதிரடிப்படை சுட்டுக் கொன்றது என்று அண்டப் புளுகு ஆகாசப் புளுகு , புளுகி இருக்கும் ராம் கோபால் வர்மாவை….
இப்படி எல்லாம் இனத்துவேஷம் செய்து விட்டு, முத்துலட்சுமிக்காக பரிதாபப்படுவது போல நடித்து புடவை பின்னால் ஒளிகிறார் ராம கேவல வர்மா
இவர் இப்படி இருக்க,
‘குழம்புக்கு கொஞ்சமா போடுங்க புளி’ என்று படத்தில் வசனம் வைத்தால் கூட, அதை புலி என்று எண்ணிக் கொண்டு ”அய்யய்யோ புலி வருது புலி வருது…” என்று அலறி,
ஒலியையாவது நீக்கி விட்டே ஓஞ்சு உட்காரும் நம்ம சென்சார் போர்டு,
இது ஊர் அறிந்த ..ம்ஹும் ஊர் நாறும் உண்மை !
அதற்கு இணையாக ,
இந்தப்ப டததில் ”பிரபாகரன் ராஜிவ்காந்தியைக் கொன்றார் — ஒரு தரம் … பிரபாகரன் ராஜிவ்காந்தியைக் கொன்றார்…
ரெண்டு தரம் , பிரபாகரன் ராஜிவ்காந்தியைக் கொன்றார்எ… மூணு தரம் என்று ஏலம் விடுவதையும்….,
தன்னை அரக்கன் என்றும் ராட்சஷன் என்றும் கூறிக் கொள்ளும் வீரப்பன் கேரக்டர் ஒரு இடத்தில் ”என்னை விட பிரபாகரன்தான் பெரிய ஆளு ” என்று சொல்வதையும் ,
அதன் மூலம் பிரபாகரனையும் அந்த வார்த்தைகளால் மறைமுகமாக குறிப்பிடுவதையும் ….
ஒரு வித ஜில்தட்டலோடும் சிலிர்ப்பான கிறக்கத்தோடும் அனுமதித்து இருக்கிறது சென்சார் போர்டு
அந்த மயக்கத்தில் கிளுகிளுத்து ,
வீரப்பன் கொல்லப்பட்ட ஆபரேஷனுக்கு தலைமை வகித்த அதிரடிப்படை அதிகாரி, ஈகோ காரணமாக சக போலீஸ் அதிகாரியையே எரித்துக் கொன்று விட்டு,
வீரப்பனை விட தான் பெரிய ராட்சஷன் என்று கொக்கரிப்பதாக சொல்லும் காட்சியை நீக்காமல் அப்படியே அனுமதித்து ,
அதன் மூலம் போலீஸ் மந்திரியான முதல்வரை அவமானப்படுத்தி இருக்கிறது சென்சார் போர்டு
அது மட்டுமல்ல , வீரப்பனால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் மனைவி ஒரு காட்சியில் , காம வெறியேறிய பசு போன்ற முகபாவத்தோடு
அதிரடிப்படை முக்கிய அதிகாரியை தடவிக் கொடுத்து ஆறுதல் கூறுகிறார் . அடத் தூ !
விஷயம் ரொம்ப சிம்பிள் .
வீரப்பன் தரப்பை அசிங்கப்படுத்தினால் காவல் துறை ரசிக்கும் .அதிரடிப்படையினரை அசிங்கப்படுத்தினால் வீரப்பன் ஆதரவு தரப்பு ரசிக்கும் .
இதை சரியாக புரிந்து கொண்டு, நரித்தன வஞ்சகமாக… குயுக்தியோடு…
இராவணன் , பிரபாகரன் , வீரப்பன், அதிரடிப்படை அதிகாரிகள் , பெண்கள் , தமிழ் பத்திரிக்கையாளர்கள் தமிழக அரசு என்று ஒட்டு மொத்த தமிழர்களையும் அவமானப்படுத்தி இருக்கிறார் ராம் கோயபல்ஸ் வர்மா .
இதை அப்படியே அனுமதித்து இருக்கிறது சென்சார் போர்டு .
ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்படவேண்டிய படம் இது .
திருட்டு விசிடியில் பார்க்கக் கூட தகுதி இல்லாத படம் இது .
கடைசியாக
ராம் கோபால் வர்மாவுக்கு ஒரு வார்த்தை …
காசு சம்பாதிப்பதற்காக இப்படி ஒரு படம் எடுப்பது என்பது,
கன்னட பிரசாத் ஆக இருப்பதை விடக் கேவலமானது .