வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர் விஷ்ணு விஷால். இதுவரை எட்டுப் படங்களில் நடித்திருக்கும் விஷ்ணு விஷால் இப்போது முண்டாசுப் பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை என்று தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்கள் கொடுத்து இருக்கிறார் . இந்த சந்தோஷத்தோடு பிறந்த நாள் சந்தோஷமும் வர, தனக்கு மீடியா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி சொல்ல பத்திரிக்கையாளர்களை சந்தித்து, பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடினார் .
மிகுந்த சந்தோஷமான நிம்மதியான உற்சாகமான மன நிலையில் பல விசயங்களை பகிர்ந்து கொண்டார் விஷ்ணு விஷால் .
பெயர் மாற்றம் ….
என்னோட நிஜமான பெயர் விஷால்தான். ஆனா நான் சினிமாவுக்கு வந்த போது நடிகர் விஷால் முன்னயே புகழ் பெற்று இருந்ததால விஷ்ணுன்னு பேர் வச்சுக்கிட்டேன் . ஒரு நிலையில சொந்தப் பெயரையே மறுபடியும் வச்சுக்கணும்னு தோணுச்சு. தவிர விஷாலும் நம்ம குளோஸ் ஃபிரண்ட் ஆகிட்டாரு . அவரும் தப்பா எடுத்துக்க மாட்டார் என்ற நிலை . அதனால பேரை விஷ்ணு விஷால்னு வச்சுக்கிட்டேன் .
ஆரம்ப காலப் படங்கள் …
வெண்ணிலா கபடிக் குழு என்னை நடிகனா ஆக்கின படம் … எனக்கு ஒரு அடையாளம் கொடுத்த படம் . அந்தப் படத்தின் வெற்றிதான் என்னை உருவாக்கியது . அடுத்து என் நடிப்பு மற்றும் தொழில் மேல எனக்கு பெரிய நம்பிக்கை வரக் காரணமான படம் நீர்ப்பறவை . அந்தப் படம் வந்த பிறகு நானும் அங்கீகரிக்கப்பட்டேன்.
காதல்….. கல்யாணம் …
நான் லவ் பண்ண காலத்துல நான் நடிகனா இல்ல. நடிக்க முயற்சி பண்ணி, முடியாம வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன். என் மனைவி கிட்ட அப்போ என் மாமனார் சொன்ன ஒரே விசயம் ” மகளே! நீ லவ் மேரேஜ் பண்ணிக்கிறதுல எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல . ஆனா உன் கணவன் ஒரு சினிமாக்காரனா இல்லாம பாத்துக்க” என்பதுதானாம். நான் லவ் பண்ண ஆரம்பிச்சப்ப (என் மனைவி) என்கிட்டே இதை சொன்னாங்க .
நான் என் சினிமா ஆசையையும் சொன்னேன் . ஆனா அவங்க பயப்படுல . ‘இவனுக்கு எல்லாம் எங்க சினிமா சான்ஸ் கிடைக்கப் போகுது?’ன்னு நினைச்சுட்டாங்க. எனக்கு வெண்ணிலா கபடிக் குழு படம் கன்ஃபார்ம் ஆனப்ப, அவங்கள் பீச்சுல உட்கார வச்சு , ரெண்டு மணி நேரம் பீடிகை போட்டு விஷயத்தை சொன்னேன் .
பயங்கர ஷாக் . “எங்கப்பா கல்யாணத்துக்கு கண்டிப்பா ஒத்துக்க மாட்டார்”னு சொல்லி அழ ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா ஆகிருச்சு. ”சரி .. நான் சினிமா சான்ஸ் வேணாம்னு சொல்லிடறேன் . வேலைக்கே போறேன்”னு சொன்னேன். அத அவங்க எதிர்பார்க்கல . ‘நமக்காக லட்சியத்தையே விட்டுத் தர்றானே’ன்னு நெகிழ்ந்து போய் ” பரவால்ல நீங்க நடிங்க”ன்னு சொன்னாங்க . அவங்க அப்பாவை கன்வின்ஸ் பண்ணாங்க . நான் நடிகனாவும் ஆனேன் . காதலிச்ச பொண்ணுக்கே கணவனாவும் ஆனேன் .
ஆனா படத்துல ஏதாவது லவ் சீன்ல நான் நடிச்சு இருக்கறத பார்த்தா கூட டென்சன் ஆயிடுவாங்க . ஆனா இப்போ அவங்க முன்னாடியே நடிக்கும்போது மத்த பொண்ணுங்களோட நான் ரொமான்ஸ் பண்றத பார்க்கும் அளவுக்கு முன்னேறிட்டாங்க. முதல் தடவை அப்படி பார்த்த போது மட்டும் ” பாவி.. இப்படி பண்றியே.. இது நியாயமா?”ன்னு கேட்டாங்க . இப்போ நோ பிராப்ளம் .
சினிமா நண்பர்கள் …..
விக்ராந்த் , விஷால் , ஆர்யா
விக்ராந்த் பல வருஷ நண்பன் . கிரிக்கெட் ஆடும்போது எங்களுக்குள்ள யார் அதிக ரன் எடுக்கறதுன்னு பயங்கர போட்டி இருக்கும் . ஆனா வெளிய ரொம்ப ஆழமான நண்பன் . படம் இல்லாம சும்மா இருந்த காலங்கள்ல அவன் வீட்டுக்கு போய் உட்கார்ந்து மணிக்கணக்கா புலம்புவேன் . அவன் ஆறுதல் சொல்லி அவ்ளோ எனர்ஜி கொடுத்து அனுப்புவான்.
பொதுவா ஒரு நடிகர் வந்து இன்னொரு நடிகர் ஹீரோவா நடிச்ச படத்தை ரிலீஸ் பண்ணிக் கொடுக்க மாட்டார் . ஆனால் விஷால் என் படத்தை ரிலீஸ் பண்ணிக் கொடுத்தார் . எனக்காக என்ன வேண்ணா பண்ணுவார் . எனக்கு ஒரு பிரச்னைன்னா முதல்ல வந்து நிப்பார்.
அதே மாதிரிதான் ஆர்யாவும். இன்று நேற்று நாளை படத்துல எனக்காக ஒரு கெஸ்ட் ரோல் பண்ணிக் கொடுத்தார் .இவங்க மூணு பேரும் எனக்கு ரொம்ப முக்கியமான ஃபிரண்ட்ஸ் .
விஷால் , ஆர்யா ரெண்டு பேருக்கும் கல்யாணம் …
அது எப்போ நடக்கும்னு யாருக்குமே தெரியலீங்க. இப்படியே காலத்த ஓட்டிடுவாங்க போல இருக்கு .
நடிகர் சங்க விவகாரத்தில் விஷால் …
ஒரு இடத்தில் நல்ல விசயத்துக்காக கேள்வி கேட்கறது தப்பு இல்லையே . அவர் கேட்கறார். அது சரியா இருக்கு. அதானால் அவர் பின்னாடி நிற்கறோம். அதுக்காக விஷால் கட்சி ஆரம்பிச்சா அதுல சேருவீங்களான்னு எல்லாம் கேட்கிறாங்க . சேர மாட்டேன் . எனக்கு அது தெரியாத விஷயம் . நான் அதுக்கு எல்லாம் லாயக்குப் படமாட்டேன் என்பது விஷாலுக்கும் தெரியும் .
ஐ பி. எல் லில் இருந்து சென்னை அணி நீக்கப்பட்டது பற்றி ..
என்ன நடந்ததுனு நமக்கு முழுசா தெரியாம நான் கருத்து சொல்ல முடியாது . ஆனா அடுத்த ரெண்டு வருஷத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ்அணி இல்லை என்பது ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரனா , கிரிக்கெட் ரசிகனா வருத்தம் . ஆனா சினிமாக்காரனா சந்தோசம் . ஐ பி எல் சமயத்தில் தமிழ் சினிமா வசூல் பாதிக்கப்படும் . ஆனா இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அந்த பிரச்னை இல்ல .
தொடர் வெற்றிப் படங்கள் …
எனக்கு அமைஞ்ச தயாரிப்பாளர்கள் , டைரக்டர்கள் அப்படி . அவங்கதான் முக்கிய காரணம் . என்னை நடிகனா ஆக்கிய சுசீந்திரன் மறுபடியும் ஜீவா படம் கொடுத்தார் . என்னோட காட் ஃபாதர்னா அது அவர்தான் . நீர்ப்பறவை படத்துல சீனு ராமசாமி என்னை இன்னொரு உயரத்துக்கு கொண்டு போனார் . இப்போ முண்டாசுப்பட்டி , இன்று நேற்று நாளை படங்கள் மூலமா தயாரிப்பாளர் சி.வி.குமார் என்னை தொடர் வெற்றிப் பட நாயகனா ஆக்கி இருக்கார் . இவங்க ஒரு பக்கம் . ஆரம்பம் முதலே மீடியாக்கள் எனக்கு கொடுத்து வரும் சப்போர்ட் , அக்கறையான விமர்சனங்கள் எல்லாம் இன்னொரு என்னை உருவாக்கி இருக்கு. யாரையும் நான் மறக்க முடியாது
இன்று நேற்று நாளை பார்ட் டூ .
பார்ட் டூ வரப் போறதா ஒரு செய்தி வந்திருக்கு . அதுல நான் நடிப்பேனா இல்லையா என்பதை தயாரிப்பாளர் , இயக்குனர்தான் முடிவு பண்ணனும் . கதை ரெடி ஆகிட்டு இருக்குன்னு டைரக்டர் சொன்னார் .
அடுத்த படங்கள் ..
சுசீந்திரன் கதை எழுதும் வீர தீர சூரன் உட்பட சில படங்கள் இருக்கு . பயணம் தொடருது .
ஆசை ..
வெற்றிப் படங்களைத் தரும் நல்ல நடிகன்னு பேர் வாங்கணும்
வாழ்த்துகள் விஷ்ணு விஷால் !