ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டநேஷனல் சார்பாக கமல்ஹாசன் மற்றும் மறைந்த சந்திரஹாசன் இருவரும் , ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்டுக்காக தயாரித்திருக்க,
கமல் ஹாசன், பூஜா குமார் , ஆன்ட்ரியா, சேகர் கபூர், ராகுல் போஸ், வஹீதா ரஹ்மான் நடிப்பில் கமல் எழுதி இயக்கி இருக்கும் படம் விஸ்வரூபம் 2. இது சொரூபமா ? அரூபமா ? பேசலாம் .
இந்திய முன்னாள் ராணுவ வீரரும் , பின்னர் இந்தியாவின் உளவு அமைப்பு RAW – வால் பணிக்கு அமர்த்தப்பட்டவருமான விஸாம் அஹமது கஷ்மீரி (கமல்ஹாசன்), நிருபமா (பூஜா குமார்), அஸ்மிதா (ஆண்ட்ரியா) ஆகியோர்,
முதல் பாகத்தில் அமெரிக்க ராணுவத்தோடு சேர்ந்து ஆப்கன் தீவிர வாதிகளை வேட்டையாடும்காபூல் ஆபரேஷனில் பங்கு பெற்றார்கள்
இதற்காக கஷ்மீரி ஆப்கனுக்கே போனதும் ….
அங்கே தீவிரவாதத் தலைவர்களில் ஒருவனான உமரிடம் (ராகுல் போஸ்) தானும் ஓர் இஸ்லாமியன் என்ற அடிப்படையில் பழகியதும் (இன்னொரு பக்கம் கதக் நடனக் கலைஞர் ) …..
தீவிர வாதத்தை விரும்பாத உமரின் மனைவிக்கு உதவ முயன்றதும் , உமரின் பிள்ளைகள் டாக்டர் என்ஜினீயர் என்று படிக்க ஆசைப்பட்டபோது அதற்கு உதவ முயன்றதும்….
ஒரு நிலையில் உமருக்கு விஷயம் தெரிய வர, அதற்குள் அமெரிக்கப் படைகள் களத்தில் இறங்கி வன்மத்தோடு ஆப்கன் மக்களை கொன்று குவிக்க ,
காஷ்மீரி மீதான வன்மத்தோடு உமர் தப்பிச் சென்றதுமே விஸ்வரூபம் முதல் பாகம் . (நினைவுக்கு வந்துருச்சா ?)
இந்த இரண்டாம் பாகத்தில் , விஸாம் அஹமது கஷ்மீரி அதே RAW அதிகாரியாக… இங்கிலாந்தில் தீவிரவாத நடவடிக்கைகளை ஒழிக்கப் போகிறார் .
லண்டன் தேம்ஸ் நதிக்கரையை ஒட்டிய கடலில் ஒரு காலத்தில் ஹிட்லரால் கொட்டப் பட்டு கிடக்கும் ஆயிரக் கணக்கான டன் வெடிகுண்டுகளை ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்து,
செயற்கையாக பெரிய சுனாமியை உருவாக்கி லண்டன் நகரையே கடலுக்குள் பத்து மீட்டர் ஆழத்துக்குள் மூழ்கடிக்க முயலும் தீவிரவாதிகளின் சதியை கடலுக்குள் இறங்கி கத்திச் சண்டை போட்டு ( அட.. சின்ன கத்திதாங்க!) முறியடிக்கிறார் .
அல்ச்மைசர் மறதி நோயால் பாதிக்கப்பட்ட தன் தாயும் கதக் கலைஞருமானவரின் முன்னால் நின்று , மகனையே யாரென்று தெரியாமல் பேசும் அவரைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார் .
மனைவிக்கும் தோழிக்கும் இடையே நடக்கும் மெல்லிய சக்களத்தி சண்டையை சமாளிக்கிறார் .
இந்த நிலையில் அவரைப் பழிவாங்க உமர் மீண்டும் வருகிறான். நண்பனாக நம்பிய தன்னை ஏமாற்றி துரோகம் செய்து மனைவி பிள்ளைகளை கொன்று விட்டதாக குற்றம் சாட்டுகிறான் .
அதற்காக கஷ்மீரி தரப்பில் ஒருவரையும் கண்டம் துண்டமாக வெட்டிப் போடுகிறான் .
ஆனால் தான் துரோகம் செய்யவில்லை என்பதையும் உமரின் மனைவி பிள்ளைகளை காப்பாற்றி அனுப்பி விட்டதாகவும் இப்போது உமரின் பிள்ளைகளில் ஒருவன் டாக்டருக்கும் , இன்னொருவன் என்ஜினீயருக்கும் படிப்பதாக சொல்கிறார்.
உமர் அதை நம்பினானா இல்லையா ? ஆம் எனில் நடந்தது என்ன ? இல்லையெனில் நடந்தது என்ன என்பதே இந்தப் படம் .
விஸ்வரூபம் முதல் பாகத்துக்காக எடுத்த எல்லாவற்றையும் முதல் பாகத்தில் வைக்க முடியாத நிலையில் , அதே நேரத்தில் ஒரே பாகத்தில் சுருக்கவும் முடியாத கட்டத்தில் , அவற்றை வீணாக்கவும் முடியாத மனநிலையில்
சில விசயங்களை முதல் பாகத்தில் முடிக்காமல் விட்டு விட்டு அவற்றை இந்த பாகத்தில் சொல்லி , அவற்றோடு சில விசயங்களை புதிதாக எடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறார் கலைஞானி கமல்ஹாசன்.
ஒரு ஹாலிவுட் படத்தை மொழி மாற்றி தமிழில் பார்ப்பது வேறு ;
ஆனால் ஹாலிவுட்டில் ஒரு படத்தை தமிழிலேயே தரமாக எடுத்து அதைப் பார்த்தால் எப்படி இருக்கும் ? அப்படி ஓர் அட்டகாசமான மேக்கிங் . கமல்ஹாசன் என்ற மாபெரும் தொழில்நுட்ப வித்தைக்காரனின் சாம்ராஜ்யமாக விரியும் படமாக்கல் .
வசனங்களில் வழக்கம் போல கமலின் குறும்பு .
முக்கியமாக RAW வுக்கு அவர் சொல்லும் விரிவாக்கம் செம செம …!
படத்தில் இன்னொரு சிறப்பம்சம் .. பூஜா குமார் , ஆன்ட்ரியா இருவருக்கு ஆக்ஷனில் பங்கு கொடுத்து இருப்பது .
அதுபோல அம்மாவாக வஹீதா ரஹ்மான் தோன்றும் முதல் காட்சியை முழுக்க அவர் நடிப்புக்கே கொடுத்து விட்டு தன்னை கமல் பின்னிலைப்படுத்திக் கொண்டு இருப்பதும் அழகு .
முந்தைய பாகத்தில் வந்த பாடல்களுக்கு வேறு மெட்டு அமைத்தும் இசை இணைப்பாகவும் பயன்படுத்திய விதத்தில் கவர்கிறார் இசை அமைப்பாலம்ர் ஜிப்ரான். ஆனால் மனதில் நிற்காத பாடல்கள் !
இப்போது கமல் அரசியல்வாதி வேறு அல்லவா?
எனவே படம் துவங்குவதற்கு முன்பு மக்கள் நீதி மையம் தொடர்பான – அறிவிக்கப்படாத நியூஸ் ரீல் ஓடுகிறது .
படத்தில் இந்தியா , அமெரிக்கா மட்டுமல்லாது இங்கிலாந்து அரசியல்வாதிகளையும் போட்டுத் தாக்குகிறார் .
படத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ எஸ் ஐ யின் கையாளாக வந்து சுடப்பட்டு சாகிறது ஈஸ்வர அய்யர் என்ற தமிழ் பேசும் கதாபாத்திரம் .
அவர் ஐ எஸ் ஐ யின் கையாள் என்று சொல்லப்படுவதற்கு முந்தைய ஒரு காட்சியில் அவர் கமலிடம் ” உண்மைய சொல்லுங்க .. நீங்க எங்க ஆளா இல்லையா ?” என்கிறார் .
அதற்கு கமல் , ” நான் உங்க ஆளே இல்லை ” என்கிறார் .
அதைக் கமலில் பிராமண எதிர்ப்பு வசனமாக நினைத்துக் கொண்டு கைதட்டுகிறது கூட்டம் .
ஆனால் அது உண்மையில் அய்யர் – அய்யங்கார் சண்டையாக இருக்குமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது .
ஏனென்றால் அந்த கதாபாத்திரத்துக்கு ஈஸ்வர அய்ய்ய்ய்யர் என்று ஸ்பஷ்ஷ்ஷ்ஷ்ஷ்டமாக பெயர் வைத்து இருக்கிறார் , ராஜ லக்ஷ்மி நாதன் சீனிவாசனின் சேயும் விஷ்ணுதாசனுமான , கமல்ஹாசன் .
அதே நேரம் படத்தில் தமிழ் பேசும் கதாபாத்திரங்கள் எல்லாம் (ஆன்ட்ரியாவைத் தவிர) பிராமணத் தமிழே (ஆண்ட்ரியாவின் அப்பாவாக நடிக்கும் வேற்று மொழிக்கார கதாபாத்திரம் உட்பட !) பேசுகின்றன .
இதன் மூலம் என்னவோ சொல்ல வருகிறார் ஆழ்வார் பேட்டை ஆண்டவர் .
கடலுக்கு அடியில் (சின்ன) கத்திச் சண்டை போடும்போது கூட முகத்தில் போட்ட பிளாஸ்திரி அப்படியே இருப்பதைப் பார்த்தால்… யாரு கண்டா .. அப்படி எதும் அப்பாடக்கர் பிளாஸ்திரி இருக்கோ இன்னாவோ ?
பொதுவாக ஹாலிவுட் படங்களில் கொஞ்ச நேரம் சளசளவென்று பேசிக் கொண்டே இருப்பார்கள் . திடீரென்று அதிர வைக்கும் ஆக்ஷனில் இறங்குவார்கள் . இதில் ஹாலிவுட் படங்கள் போலவே பேசுகிறார்கள் .
ஆனால் ஆக்ஷன் காட்சிகள் முதல் பாகத்தின் மிச்சங்களாகவோ அல்லது கோடம்பாக்கத்து ஆக்ஷன் காட்சிகளாகவோ (குறிப்பாக கிளைமாக்ஸ் மட்டுமில்லை , அண்டர் வாட்டர் என்பதை தவிர்த்து விட்டுப் பார்த்தால் லண்டன் சண்டைக் காட்சியும் கூட !) இருக்கின்றன .
எழுதி இயக்கியவர் கமல்ஹாசன் என்று டைட்டிலில் தனக்கே உரிய பாணியில் கம்பீரமாகப் போரிக்கிறார், தமிழ் சினிமாவின் பொக்கிஷமான கமல்ஹாசன் .
இயக்கியவர்… குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா !

எழுதியவர்தான் … கொஞ்சம் ஏமாந்தும் விட்டார் ; நம்மை ஏமாற்றியும் விட்டார் .
தனக்கான சரியான அரசியல் சமயத்தில் எம் ஜி ஆர் உலகம் சுற்றும் வாலிபன் படத்தைக் கொடுத்து அன்றைய தமிழ் நாட்டையே பிரமிக்க வைத்தது போல,
இன்றைய தமிழ்நாட்டை பிரம்மிக்க வைக்கும் ஒரு படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டத்தில் – கட்டாயத்தில் இருக்கிறார் , திரைக் கலைஞரும் மக்கள் நீதி மையத் தலைவருமான கமல்ஹாசன் .
அதற்கு … விஸ்வரூபம் 2 எல்லாம் யானைப் பசிக்கு சோளப் பொரி கூட இல்லை … அரிசிப் பொரி… அதுவும் குருணை அரிசிப் பொரி.