அவள் பெயர் தமிழரசி என்ற பாராட்டுக்குரிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராகக் காலடி எடுத்து வைத்தவர் மீரா கதிரவன். அடிப்படையில் நல்லதொரு எழுத்தாளர் இவர். பலதரப்பட்ட பெருமைக்குரிய பாராட்டுக்களுடன் பல திரைப்பட விருது விழாக்களை அலங்கரித்த பெருமை அவள் பெயர் தமிழரசி படத்துக்கு உண்டு .
அந்தப் படத்தை அடுத்து மீரா கதிரவன், மெயின்ஸ்ட்ரீம் சினிமா புரடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கி தயாரித்து, எழுதி இயக்கி இருக்கும் படம் ‘விழித்திரு’ .
தன் நண்பர்கள் நால்வரையும் சேர்த்துக் கொண்டு மீரா கதிரவன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், ஒரு நிலையில் தானும் தயாரிப்பாளராக இணைந்து படத்தை முடித்து வெளியிடுகிறார் சவுந்தர்யன் பிக்சர்ஸ் உரிமையாளர் விடியல் ராஜூ. படத்தில் விதார்த், கிருஷ்ணா, எஸ்.பி.பி.சரண், வெங்கட் பிரபு, தம்பி ராமையா , தன்ஷிகா, அபிநயா, தெய்வத் திருமகள் பேபி சாரா என்று ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டமே இருக்கிறது .

இது தவிர…
சத்யன் என்ற இசைஅமைப்பாளர் அறிமுகமாகும் இந்தப் படத்தில் சகலகலா வல்லவர் டி.ராஜேந்தர் ‘பப்பரபப்பாங்….’ என்ற ஒரு பாடலை எழுதியதோடு பாடி ஆடி நடித்திருக்கிறார் . இன்னொருவரின் மெட்டுக்கு டி. ராஜேந்தர் பாடல் எழுதி இருப்பது இதுவே முதல் தடவை .
இது போதாதென்று படத்தில் சந்தோஷ் நாராயணன், சத்யா உள்ளிட்ட ஏழு இசையமைப்பாளர்கள் சேர்ந்து பாடி இருக்கிறார்கள்.
பார்வையற்றவர்களின் உணர்வினை விளக்கும் ஒரு பாடலை , நிஜத்தில் பார்வை இல்லாத பாடகியான வைக்கம் விஜயலட்சுமி பாடி இருக்கிறார் .
மற்றொரு பாடலுக்கு முழுக்க எந்த இசைக் கருவிகளையும் பயன்படுத்தாமல் வாயால் ஒலி எழுப்பியே எல்லா இசையையும் உருவாக்கி இசை அமைத்து இருக்கிறார்கள் .
படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கலைப்புலி எஸ் தாணு, டி.சிவா, கதிரேசன் உள்ளிட்ட பல தயாரிப்பாளர்கள், எஸ்.பி.ஜனநாதன், சீனு ராமசாமி , சமுத்திரக்கனி, விக்ரம் சுகுமாரன் உள்ளிட்ட இயக்குனர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் .
ஒளிப்பதிவு , இசை , இயக்கம் என்று எல்லா வகையிலும் படத்தின் முன்னோட்டம் பரபரப்பாக விறுவிறுப்பாக இருந்தது . பாடல்கள் இனிமையாக இருந்தன . சிறப்பாக படமாக்கப்பட்டு இருந்தன
முழுக்க முழுக்க ஒரு இரவில் நடக்கும் கதையாம் இது . (இரவில் நடக்கும் கதைக்கு விழித்திரு என்று அருமையாக பெயர் வைத்திருப்பதில் இருந்தே மீரா கதிரவானின் ரசனையான திறமையை உணர முடியும்)
ஒரு பெண் குழந்தை காணாமல் போக , அதன் பின்னணியில் நடக்கும் கதை என்பதும் முன்னோட்டம் மூலம் புரிந்தது . ” தவளைக்கு பாம்பு எதிரி, பாம்புக்கு பருந்து எதிரி . பருந்துக்கு வேடன் எதிரி . இதுதான் வாழ்க்கை நியதி” போன்ற போன்ற வரிகளும் கதையைப் பூடகமாக உணர்த்தின .
பப்பரப்பாம் பாடலில் அட்டகாசமான கும்மாங்குத்து ஆட்டத்தில் பின்னிப் பெடல் எடுத்து பட்டையைக் கிளப்பி இருக்கிறார் டி. ராஜேந்தர். அப்படி ஒரு அதிரடி ஆட்டம்! அவர் எழுதி இருக்கும் வரிகளும் ”டேக்’ பண்ணிக்கோ இல்லன்னா ‘ஷேர்’ பண்ணிக்கோ…” என்று…. அவ்வளவு ‘டிரெண்டி” ஆக இருக்கிறது .
நிகழ்ச்சியில் பேசிய எஸ் தாணு ” ஒரு காலத்தில் அற்புதமான கவிதை வரிகளை கொடுத்த டி.ராஜேந்தர் இன்று இந்த காலகட்டத்துக்கு பொருத்தமாகவும் எழுதுவது சிறப்பு ” என்றார் .
“டி.ராஜேந்தர்தான் என் தலைவர் . சினிமாவுக்கு வரும் தன்னம்பிக்கையை எனக்கு கொடுத்தது அவர்தான் ” என்று ஆரம்பித்த இயக்குனர் பேரரசு “தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பார்கள் . ஆனால் சிம்பு எட்டடி பாய்ந்தால் டி.ராஜேந்தர் பதினாறடி பாய்கிறார் “என்றார் .
“மீரா கதிரவன் போன்ற எழுத்தாளர்கள் இயக்குனராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் வருவது சினிமாவுக்கு நல்லது.
ராஜேந்தர் இது போன்ற படைப்பளிகளுக்கு கை கொடுப்பது பாராட்டுக்குரிய விஷயம் ” என்றார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்
“நான் மதிக்கும் அற்புத சாதனையாளரான டி.ராஜேந்தருடன் இந்தப் படத்தில் இரண்டு ஷாட்களில் நடித்தது எனக்குப் பெருமை” என்றார் தம்பி ராமையா
படத்தின் அயல்நாட்டு உரிமையை வாங்கி இருக்கும் தயாரிப்பாளர் நடிகர் மற்றும் எம் எல் ஏ வான அருண்பாண்டியன் “இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் எடுக்கப்பட்ட விதம் மட்டுமல்ல …. படம் பல சிக்கல்களுக்கு இடையே உருவான விதத்தையும் பார்க்கும்போது,
எனக்கு ஆபாவாணனின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் நான் நடித்து உருவான ஊமை விழிகள் படம் நினைவுக்கு வருகிறது .
அந்தப் படம் சரித்திரம் படைத்தது போல இந்தப் படமும் சரித்திரம் படைக்கும்” என்றார் .
இசையமைப்பாளர் சத்யன் பேசும்போது
“எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்புக் கொடுத்த இயக்குனர் மீரா கதிரவனுக்கு நன்றி. நான் அழைத்த உடன் வந்து பாடிக் கொடுத்து சக இசையமைப்பாளர்களுக்கு அன்பான நன்றி. எழுதி பாடி ஆடிக் கொடுத்து எங்களுக்கு ஒரு அங்கீகாரம் தந்த டி.ராஜேந்தர் சாருக்கு மனமார்ந்த நன்றி ” என்றார்
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பேசும்போது ” ஒரு இயக்குனரே தயாரிப்பாளராகவும் இருந்து படம் எடுக்கும்போது, அவர் நல்ல படைப்பாளியாகவும் இருக்க விரும்பினால்,
என்னென்ன சங்கடங்கள் இழப்புகள் வரும் என்பது எனக்கு தெரியும். நான் அதை அனுபவித்து இருக்கிறேன் . இரண்டாவது படத்திலேயே அதை மீரா கதிரவன் சிறப்பாக செய்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்” என்றார்
ஏக கைதட்டலுடன் பேசத் துவங்கிய டி.ராஜேந்தர் ” எல்லோரும் என் தன் நம்பிக்கை பற்றி பேசினார்கள் . நான் மீரா கதிரவனிடம் இருந்த நம்பிக்கையைப் பார்த்துதான் இந்தப் படத்தில் பாடல்,எழுதி நடித்துக் கொடுக்க ஒப்புக் கொண்டேன். என் மகன் சிம்பு மிகப் பெரிய சாதனையாளன்.
நானும் எவ்வளவோ பார்த்து விட்டேன் . எனக்கு இனி புதிதாக புகழ் பணம் தேவை இல்லை . இனி வரும் காலங்களில் இது போல எழுதி ஆடி பாடி நடிப்பதன் மூலம் புதிய படைப்பாளிகளின் படங்களை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை செய்வேன் ” என்று பேசி முடித்த போது, அரங்கம் நெகிழ்ந்து கைதட்டியது .
மீரா கதிரவன் பேசும்போது ” முக்கால்வாசி படம் முடிந்தபோது பணம் இல்லாத நிலைமை. அந்த சமயத்தில் என்னை நம்பி என் படத்தில் தயாரிப்பாளராக இணைந்து படத்தை முடிக்கக் காரணமாக இருந்த விடியல் ராஜூவை மறக்க மாட்டேன்.
நான் ராஜேந்தர் சாரிடம் போய் இப்படி ஒரு பாடல் எழுதி நடித்துத் தர வேண்டும் என்று கேட்ட போது முதலில் மறுத்தார் . படத்தின் கதையை கேட்டுப் பாராட்டிவிட்டு . “இந்தப் படத்தின் வெற்றிக்கு நானும் ஒரு காரணம் ஆவேன் என்றால் சந்தோசம் ‘ என்று சொல்லி, நடித்துக் கொடுத்தார் .
பாடலில் அவர் மாடர்னாக எழுதிய வரிகளைப் பார்த்து அவரை கட்டிப் பிடித்துக் கொண்டாடினேன் . ரிகார்டிங் முடிந்த பின்னரும் அவ்வப்போது அவராகவே இம்ப்ரூவ்மென்ட் செய்து கொடுத்தார்.
ஆட வந்த போது, இப்போதுதான் முதல் படத்தில் நடிக்க வந்தவர் போல அவர் காட்டிய சிரத்தையும் முயற்சியும் பிரம்மிப்பானது . இளையதலைமுறை கலைஞர்கள் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் அது.
ஆடும்போது அவர் கொடுத்த எனர்ஜி அட்டகாசமானது . அந்தப் பாடல் படப்பிடிப்பின்போது நான் அவரிடம் பல விசயங்களை கற்றுக் கொண்டேன் ” என்றார் .
படம் சம்மந்தப்பட்டவர்களை, செழித்திருக்கச் செய்யட்டும் விழித்திரு !