அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் மரியாதைக்குரிய — கவனம் கவர்ந்த — இயக்குனராக அறிமுகமான மீரா கதிரவன் ,
அடுத்து இப்போது ஹயா மரியம் பிலிம் ஹவுஸ் சார்பில் நண்பர்களோடு சேர்ந்து தயாரித்து, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் விழித்திரு .
விதார்த், கிருஷ்ணா வெங்கட் பிரபு, தம்பி ராமையா, தன்சிகா, அபிநயா, எஸ் பி பி சரண் , சுதா சந்திரன், பேபி சாரா ஆகியோர் நடித்து இருக்கும் இந்தப் படத்தை தமிழகம் எங்கும் விடியல் ராஜு வெளிடயிடுகிறார் .
ஒளிப்பதிவு விஜய் மில்டன் மற்றும் ஆர் வி .சரண் , இசை சத்யன் மகாலிங்கம், எடிட்டிங் பிரவீன் கே எல்
வரும் பதினேழாம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தது படக் குழு
நிகழ்வில் படத்தின் முன்னோட்டத்தையும் பாடல்களையும் திரையிட்டனர் .
ஒரு இரவு, நான்கு கதைகள் , ஒரே இலக்கு என்ற விளக்க வாக்கியத்துடன் விரியும் முன்னோட்டம் , படம் முழுக்க முழுக்க இரவில் நிகழ்வதைச் சொல்கிறது .
அழகான ஷாட்கள், நல்ல ஒளிப்பதிவு , சிறப்பாக தொகுப்பு என்று வளர்ந்து , ஒரு ரிக்ஷாவில் இருந்து ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…’ என்ற எம் ஜி ஆர் பாட்டு ஒலிக்க, நிறைகிறது .
பப்பரப்பா என்ற பாடலுக்கு ,,அஷ்மிதா, சனா என்ற இரண்டு கவர்ச்சி நடிகைகளோடு சேர்ந்து அட்டகாசமான குத்தாட்டம் போடுகிறார் டி. ராஜேந்தர் .
ராஜேந்தரின் ரசிகையான தன்ஷிகா, ராஜேந்தர் நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பைப் பார்ப்பது போலவும் அவரோடு சேர்ந்து ஆடுவது போல கனவு காணும் வகையிலும் அந்தப் பாடல் படமாக்கப்பட்டு உள்ளது .
இவை தவிர இயக்குனர்கள் சசி, வெற்றி மாறன் வசந்த பாலன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமா வளவன்,
நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் ஆகியோர் படத்தைப் பற்றிப் பாராட்டும் காட்சிகளைத் திரையிட்டார்கள்
“ஒரே இரவில் நடக்கிற நான்கு கதைகளையும் அழகாகப் பின்னி எடுத்து இருக்கிறார் மீரா கதிரவன் . எல்லா கதைகளுக்கும் எல்லா கதா பாத்திரங்களுக்கும் சிறப்பான முடிவை கொடுத்துள்ளார் .
பிரச்சார நெடி இல்லாத , விழிப்புணர்ச்சி தரும் அரசியல் படம் இது. ” என்ற ரீதியில் எல்லோரும் பாராட்டி இருந்தார்கள்
நிகழ்ச்சியில் பேசிய விஜய் மில்டன் ” முழுக்க முழுக்க இரவில் நடக்கும்படியான ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதை மீரா கதிரவன் தானே தயாரிப்பதாகவும் சொன்னார் .
இரவு ஷட்டிங் என்பது செலவு அதிகம் பிடிக்கும் விஷயம் . எனவே இது கார்த்திகை தீப நாளில் நடக்கும் கதை என்று முடிவு செய்தோம் .காரணம் பின்னணியில் எரியும் விளக்குகளே போதுமானதாக இருக்கும்
நான் ஒளிப்பதிவு செய்த வரை பல நாட்கள் ஜெனரேட்டரே இல்லாமல் பணியாற்றினோம் . முழுக்க முழுக்க இரவில் எடுக்கப்படும் ஒரு படத்துக்கு,
ஜெனரேட்டரே இல்லாமல் பணியாற்றிய அதிசயம் இந்தப் படத்தில்தான் நடந்தது .
ஒரு நிலையில் என் பட வேலைகள் அதிகம் ஆனதால் , இந்தப் படத்தை ஆர் வி சரண் ஒளிப்பதிவு செய்தார் . அவரும் நன்றாக செய்துள்ளார்.
படம் நன்றாக வந்துள்ளது. கிருஷ்ணா, தன்ஷிகா விதார்த் எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர் . கிருஷ்ணா எப்போதும் எனர்ஜியாக இருப்பார் ” என்றார் .
எடிட்டர் பிரவீன் கே எல் பேசும்போது ” மீரா கதிரவன் நல்ல திறமை சாலி . எந்த கஷ்டம் வந்தாலும் தன்னம்பிக்கையோடு செயல்படுவார் .
இந்தப் படத்தில் அவர் பல சிரமங்களை எதிர்கொண்டாலும் தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் படத்தை சிறப்பாக கொண்டு வந்துள்ளார் ” என்றார் .
நடிகை தன்ஷிகா தன் பேச்சில் ” படத்தில் மிக நல்ல கேரக்டர் படம் நன்றாக வந்துள்ளது. டி ஆர் சாருடன் ஆடியது மறக்க முடியாத ஒன்று .
அவரோட எனர்ஜி லெவல் அட்டகாசம் . உண்மையை சொல்லப் போனா அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் நான் ரொம்ப கஷ்டப்பட்டு ஆடினேன் ” என்றார் .
விடியல் ராஜு பேசும்போது ” நான் தயாரித்த ஆள் படத்தில் நடித்தபோது விதார்த் எப்போதும் இந்தப் படத்தையும் மீரா கதிரவனையும் பாராட்டிப் பேசிக் கொண்டே இருப்பார் .
அதனால்தான் இந்தப் படத்தின் ஒரு ஃபிரேம் கூட பார்க்காமல் படத்தை வாங்கி வெளியிடுகிறேன் ” என்றார்
நடிகர் கிருஷ்ணா ” இந்த நிகழ்ச்சிக்காக நான் கொச்சியில் இருந்து படப்பிடிப்பை ஒரு நாள் முன்னதாக முடிக்க வைத்து விட்டு வந்து இருக்கிறேன் . காரணம் இது எனக்கு மிகச் சிறந்த படம் .
நல்ல கதை . என்னை எல்லோரும் எனர்ஜி என்கிறார்கள் ஆனால் விஜய் மில்டன் எப்போதும் ஒரு இடத்தில் நிற்காமல் பம்பரமாக சுழன்று கொண்டு இருப்பார் . விழித்திரு மிக சிறப்பான படமாக வந்துள்ளது ” என்றார் .
நிறைவாகப் பேசிய மீரா கதிரவன் ” ஒரே இரவில் நடக்கும் நான்கு கதைகளும் கடைசியில் அன்பும் மனிதாபிமானமுமே சிறந்தது என்றே சொல்லும் . அதுதான் படமும் .
ஈழப் பிரச்னைக்காக உயிர் நீத்த முத்துக் குமாரின் நினைவாக கிருஷ்ணா நடிக்கும் கேரக்டருக்கு முத்துக் குமார் என்ற பெயர் வைத்தேன் . இது கிருஷ்ணாவுக்கு முற்றிலும் வேறு மாதிரியான படம் .
ஒரு தடவை காலில் பெரிய காயம் இருந்த போது கூட அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பல காட்சிகளில் டூப் போடாமல் நடித்துக் கொடுத்தார் .
விதார்த் சிறப்பாக நடித்துள்ளார் . இன்று நிகழ்ச்சிக்கு விதார்த் வராதது ஏன் என்று தெரியவில்லை . அவர் அஜீத்தின் வீரம் படத்தில் நடிக்கப் போனதால் இந்தப் பட ஷூட்டிங் ஆறு மாதம் தள்ளிப் போனது.
அவர் இன்று வராதது முறையல்ல . எந்த நடிகர் நடிகையாக இருந்தாலும் அவர்கள் நடித்த படத்தின் புரமோஷனுக்கு கட்டாயம் வரவேண்டும்
படத்தில் தன்ஷிகாவுக்கு ” உனக்கு இருக்கிற திறமைக்கும் அழகுக்கும் நீ சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக நடிக்கலாம்’ என்று ஒரு வசனம் வைத்தேன்.
அந்த ராசியோ என்னவோ அவர் அதன் பிறகு கபாலி படத்தில் ஒப்பந்தமாகி சூப்பர் ஸ்டாருடன் நடித்தே விட்டார் .
விஜய் மில்டன் பகலில் அவர் பட ஷூட்டிங் இரவில் என் பட ஷூட்டிங் என்று தூக்கமே இல்லாமல் பல நாள் கஷ்டப்பட்டார்
படத்தின் இசை அமைப்பாளர் சத்யன் மகாலிங்கம் ஒரு பாடகர் . இசை அமைப்பாளராக விரும்பிய அவர் போட்டுக் காட்டிய பாடல்கள் சிறப்பாக இருந்ததால் அவரை இசை அமைப்பாளர் ஆக்கினேன் .
இப்படி பாடகரை இசை அமைப்பாளர் ஆக்கிய நிலையில் இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, ஜி வி பிரகாஷ் குமார், சந்தோஷ் நாராயண்,
எஸ் எஸ் தமன், சத்யா , அல்போன்ஸ் , டி.ராஜேந்தர் ஆகிய இசையமைப்பலர்களைப் பாட வைத்தேன்.
முதலில் ராஜேந்தர் சாரை ஒரு பாடலுக்கு ஆடச் சொல்லிக் கேட்கப் போனபோது மறுத்து விட்டார் . நான் தொடர்ந்து பல முறை போக,
கோபப்படக் கூட செய்தார் . நான் ‘கதை சொல்கிறேன் பிடிச்சு இருந்தா ஆடிக் கொடுங்க’ என்று சொல்லி கதை சொன்னேன் .
கேட்டுக் கொண்டே வந்தவர் ஒரு நிலையில் நெகிழ்ந்து கண் கலங்கி ‘இந்தப் படத்துக்கு என்னால நல்லது நடந்த சந்தோஷம்யா . நான் பண்ணித் தர்றேன்’ என்று சொன்னார் .
அவரே பாடி அவரே ஆடினார் . மூன்று நாட்கள் கால்ஷீட் கொடுத்தவர மேலும் இரண்டு நாள் கொடுத்து ஆடிக் கொடுத்தார் .
அது மட்டுமல்ல ,, தனது திரையுலக வரலாற்றில் ராஜேந்தர் இதுவரை இன்னொருவர் இசையில் பாடல் எழுதியதில்லை . இந்தப் படத்துக்குத்தான் முதன் முதலில் எழுதி இருக்கிறார் . அது எங்களுக்கு பெருமை
இரவில் நிகழும் படம் என்றாலும் இது ‘தூக்கமின்றி விழித்திரு’ என்றுசொல்வதை விட , ‘உணர்வால் அறிவால் எப்போதும் விழித்திரு ‘ என்று சொல்லும் படம் ” என்றார் மீரா கதிரவன்
வெற்றியில் செழித்திருக்க வாழ்த்துகள் !