தி ஷோ பீப்புள் நிறுவனம் சார்பில் நடிகர் ஆர்யா தயாரித்து கதாநாயகனாக நடிக்க , சந்தானம் , தமன்னா ஆகியோர் உடன் நடிக்க, எம் ராஜேஷ் இயக்கி இருக்கும் படம் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க. சுருக்கமாக வி எஸ் ஒ பி .
இதே ராஜேஷும் ஆர்யாவும் சந்தானமும் சேர்ந்து முன்பு கொடுத்த பாஸ் என்கிற பாஸ்கரன் படம் வெற்றி பெற்ற நிலையில் , அதே பாணி நகைச்சுவை, கிளாமர் , பொழுது போக்கு என்ற நோக்கில் உருவாகி இருக்கிறதாம் இந்த வி எஸ் ஒ பி .
படத்தின் பாடல் வெளியீட்டில் பேசிய இசையமைப்பாளர் டி. இமான்
“வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்பதன் சுருக்கம்தான் வி எஸ் ஒ பி என்பதே என் எண்ணமாக இருந்தது . அந்தப் பெயரில் ஒரு மது இருப்பது எனக்குத் தெரியாது” என்று கூற , தன் பேச்சில் அதற்கு பதில் சொன்ன சந்தானம் ” இன்னிக்கே இமான் செலவுல ஒரு பார்ட்டி வச்சு வி எஸ் ஓ பி ன்னா என்னன்னு சொல்லிடுவோம் ” என்றார் .
இயக்குனர் ராஜேஷ் பேசும்போது
” என்னோட ஆல் ஆல் அழகுராஜா படம் நன்றாக ஓடாத நிலையில் என்னை நம்பி தன் சொந்தப் படத்தை என்னிடம் கொடுத்து உள்ளார் ஆர்யா . அவருக்கு நன்றி . சந்தானம் பிரம்மாதமா பண்ணி இருக்கார். தமன்னா சிறப்பா நடிச்சு இருக்கார். படம் நல்லா வந்திருக்கு. உங்களுக்கு பிடிக்கும் ” என்றார் .
அடுத்து பேசிய சந்தானம்
” பொதுவா பட விளம்பரங்களில் காமெடி நடிகரை சின்னதா போடுவாங்க . ஆனா ராஜேஷ் இயக்கின பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல நான் நடிச்ச அப்புறம்தான் என்னை போஸ்டர்ல ஹீரோவுக்கு இணையா போட ஆரம்பிச்சாங்க. அதுக்கு காரணம் ராஜேஷும் அந்த அளவுக்கு என் கேரக்டர்க்கு முக்கியத்துவம் கொடுத்த நண்பன் ஆர்யாவும்தான் காரணம்.
இப்போ அந்த இரண்டு பேரும் சேர்ந்து பண்ற இந்த ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்துல நாங்க எல்லாம் மறுபடியும் சேர்ந்து நல்லா பண்ணி இருக்கோம் .
ஆனா ஆர்யா செம கலாட்டா பண்ணுவான் . எனக்கு காமெடி சூப்பர் ஸ்டார்னு பட்டம் கொடுத்ததே அவன்தான் . அதோட விட்டு இருக்கலாம். ஒரு முறை ரஜினி சார் கூட அவன் பேசிட்டு இருந்திருக்கான். இப்போ பல பேர் காமெடி சூப்பர் ஸ்டார்னு பட்டம் போட்டுக்கறத பத்தி அப்போ பேச்சு வந்திருக்கு .
அப்போ இவன் ரஜினி சார் கிட்ட ‘சந்தானம் கூட காமெடி சூப்பர் ஸ்டார்னு பட்டம் போட்டுக்கறார்’னு போட்டுக் கொடுக்க, அப்புறம் நான் ரஜினி சாரைப் பார்த்து, ‘பட்டம் போட்டு விட்டதே அவன்தான்சார்’னு சொல்லிட்டேன் ” என்று பேசி கலகலக்க வைத்தார் .
ஆர்யா தன் பேச்சில் ”சிவா மனசுல சக்தி படத்துல ஒரு கெஸ்ட் ரோல் பண்ணப் போனபோதுதான் ராஜேஷ் கூட பழக்கம் ஏற்பட்டது. சந்தானம் முன்னயே பழக்கம். பாஸ் என்கிற பாஸ்கரன் படம் எங்க காம்பினேஷன்ல நல்லா வந்தது . அவரை வச்சு சொந்தப் படம் பண்ண நான் தயாராத்தான் இருந்தேன். அவர் ரெண்டு படங்கள் பண்ணி முடிக்க டைம் ஆச்சு. அப்புறம் இப்போதான் சமயம் அமைஞ்சது . படம் நல்ல வந்திருக்கு.
சந்தானம் மூணு ரைட்டர்ஸ் டீம் வச்சு இருக்காரு. ஒரு காட்சியில் ஒரு வசனம் பேசணும்னா கூட உடனே மூணு டீம்கிட்ட இருந்தும் கேட்பார். ஆளுக்கு அஞ்சு வசனம் கொடுப்பாங்க . மொத்தம் பதினைஞ்சு வரும் . அதுல பெஸ்ட் எதுவோ அதை எடுத்து பேசுவார் . அந்த அளவுக்கு ஒவ்வொரு காட்சிக்கும் சிரத்தை எடுத்துக்குவார்.அதனால இந்த உயரத்துக்கு இருக்கிறார்” என்றார் .
படமும் இப்படியே கலக்கட்டும் !