தி ஷோ பீப்புள் நிறுவனம் சார்பாக நடிகர் ஆர்யா தயாரிக்க , ஆர்யா, சந்தானம், தமன்னா ஆகியோர் நடிக்க , சிவா மனசுல சந்தியா , பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குனர் எம்.ராஜேஷின் இயக்கத்தில் ஆர்யாவின் 25ஆவது படமாக வந்திருக்கிறது ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. ரசிகர்களுடன் ஒண்ணாவுமா படம்? பார்க்கலாம் .
வாசுவும்(சந்தானம் ) சரவணனும்(ஆர்யா) பால்யகால பள்ளிக்கூட நண்பர்கள். மிக நெருக்கமான — ஒருவரின் வாழ்வில் இன்னொருவர் அதிக உரிமை எடுத்துக் கொள்ளும் – நண்பர்கள் . வாசுவுக்கு சீமாவோடு (தாமிரபரணி பானு) திருமணம் நிச்சயம் ஆகிறது.

சீமா தன் நண்பனுக்கு பொருத்தமான பெண்ணா என்பதை இன்டர்வியூ நடத்தி முடிவு செய்வது முதற்கொண்டு முதலிரவு அறையின் கட்டில் காலை உடைத்து வைத்து நட்புக் கலாய்ப்பு என்ற பெயரில் வாசு சீமா தம்பதியின் முதலிரவு தள்ளிப் போகக் காரணமாவது வரை…..வாசுவின் வாழ்வில் சரவணன் பிடிக்கும் அதீத அடமும் அதற்கு வாசு கொடுக்கும் அபரிமித இடமும் சீமாவை கொந்தளிக்க வைக்கிறது .
‘சரவணின் நட்பை விட்டு விட்டு வந்தால்தான் நமக்குள் முதலிரவு’ என்று வாசுவிடம் சீமா சொல்லி விடுகிறாள் . அதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாத வாசு, சரவணனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்து விட்டால் பிரச்னை மட்டுப்படும் என்று முடிவு செய்கிறான். திருமணத் தகவல் நிலையத்துக்கு வாசுவும் சரவணனும் போக, அங்கு பணியாற்றும் ஐஸ்வர்யா (தமன்னா) மீது சரவணுக்கு காதல் வருகிறது .

ஆனால் ஐஸ்வர்யா சரவணனை ஒரு கோமாளியாகவே பார்க்கிறாள் . எப்படியாவது ஐஸ்வர்யாவையும் சரவணனையும் சேர்த்து வைத்து விட்டு , தன் மனைவியோடு ‘குடும்பம் நடத்த’ ஆரம்பிக்கும் ஆசையில் , வாசு ஓர் ஐடியா செய்கிறான் . ஐஸ்வர்யாவின் குண்டு தோழியான கௌசல்யாவை (வித்யுலேகா ராமன் ) சரவணன் காதலிப்பது போல நடித்தால் பொறாமையில் ஐஸ்வர்யாவுக்கு காதல் வரும் என்று திட்டமிட்டு அப்படியே செயல்படுத்த , கௌசல்யாவின் குடும்பமோ ரொம்ப உற்சாகமாக சரவணனை தங்கள் மருமகனாக ஆக்கிக் கொள்ள களம் இறங்குகிறது .
அதோடு கௌசல்யாவின் அசமஞ்ச அண்ணனுக்கு ஐஸ்வர்யாவை திருமணம் நிச்சயமும் செய்கிறது .

அப்புறம என்ன ஆச்சு ? வாசு சரவணின் நட்பு நிலைத்ததா? என்பதே இந்த வாசுவும் சரவணும் ஒண்ணா படிச்சவங்க . நட்பு , காதல் , காதலால் நட்புக்கு பிரச்னை, நட்பால் காதலர்களுக்குள் கசப்பு என்பது எவர் கிரீன் கோதுமை மாவு . அதை எடுத்துக் கொண்டு காமெடி அல்வா கிண்டி இருக்கிறார் எம் ராஜேஷ் . கூடவே கவர்ச்சி , குத்தாட்டம் போன்ற முந்திரி(?) பிஸ்தா(?) தூவல்களும் !
தன்னை கலாய்க்கும்போதும் அதை ஜாலியாக எடுத்துக் கொண்டு “செம கலாய் மச்சி .. செம கலாய் ” என்று பாராட்டி சந்தோஷப்படும் சரவணன் கதாபாத்திரம்…. அடடா ! ஆணவம் இல்லாத நட்பின் புத்தம்புது உச்சம் . அருமை

என்ஜாய் என்ற வார்த்தைக்கு பதில் மகிழ்ந்திரு என்ற தமிழ் வார்த்தையை படத்தின் மூலம் பிரபலப்படுத்தி இருக்கும் இயக்குனருக்கு நன்றி .
கௌசல்யா மீதான காதல் நாடகம் எதிர்பாராத திருப்பம் அடைவது சுவாரஸ்யமான பகுதி .
ஆர்யா சந்தானம் இருவருக்கும் படத்தில் பேச்சுதான் நடிப்பே . இந்தக் கூட்டணி மீது இன்னும் அவ்வளவாக கடுப்பு வரவில்லை என்பதே ஆச்சர்யமான விசயம்தான் . தங்கள் பங்குக்கு சிறப்பாக செய்துள்ளனர் இருவரும்.
சந்தானத்தின் நகைச்சுவை வசனங்களில் சில சும்மா கடந்து போனாலும் பல வசனங்கள் புன்னகைக்கோ , வாய் விட்ட சிரிப்புக்கோ வழி வகை செய்கின்றன .

தமன்னாவிடம் இருந்து இதுவரை காட்டாத….. சில முகபாவனைகள்(ங்க! அய்யய்யோ.. அவசரப்படறீங்களே!) சிறப்பு.. சிறப்பு !
தமன்னா, ஆர்யா , சந்தானம் உட்பட முக்கியக் கதாபாத்திரங்களுக்கான ஆடை வடிவமைப்பும் அழகு .
”இந்த மனுஷன் மட்டும் எந்த கடைலப்பா லென்ஸ் வாங்கறாரு…?” என்று சந்தோஷமாக அங்கலாய்க்கும் அளவுக்கு

வண்ணத் தூய்மையில் அசத்துகிறது நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு .
இமானின் இசை படத்தில் கேட்கும்போது சுகமாக கடந்து போகிறது .
படத்தின் உச்ச கட்டங்களில் ஷகீலா ரசிகராக சில காட்சிகளில் நடித்து இருக்கிறார் விஷால் . மனைவியை ஏமாற்றி சமாளித்து எப்படி நட்பையும் இரகசியமாக பராமரிப்பது என்று சொல்கிறார் .
நகைச்சுவையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் .
சீரியஸ் காட்சியாக சொல்வதா காமெடி காட்சியாக சொல்வதா என்று சில காட்சிகளில் குழம்பி இருப்பதை தவிர்த்து இருக்கலாம்.

பாருக்குள் உட்கார்ந்து படம் பார்க்கிறோமோ என்ற சூழல் உணர்வு ஏற்படும் அளவுக்கு மதுபானக் காட்சிகள் வருவதை தவிர்த்து இருக்கலாம் .சரக்கடிக்கும் தமிழ் சினிமா கதாநாயகிகளின் எண்ணிக்கையை அதிகமாக்காமல் இருந்திருக்கலாம்.
காமெடியோ சீரியசோ இன்னும் கொஞ்சமாவது அழுத்தமான புதுமையான காட்சிகளை முயன்று இருக்கலாம் .
எனினும் காதல் நட்பு கலந்த கலர்ஃபுல் கலகலப்போடு வந்திருக்கிறது இந்த வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க .
Comments are closed.