படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தபோது , இது இந்திய – பாகிஸ்தான் எல்லையான வாகா என்ற ஊரை மையமாக வைத்து நடைபெறும் கதை என்பது புரிந்தது . விக்ரம் பிரபு நன்றாக உழைத்து இருந்தார் .
இன்னொரு ஹன்சிகா போல இருக்கிறார் ரன்யா .(முகத்தில் அதே மாதிரி ஒரு மரு வேறு )
இமான் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தன . மீகாமன் படப் புகழ் சதீஷ் குமாரின் ஒளிப்பதிவு நன்றாக இருந்தது.
நிகழ்ச்சியில் பேசிய மீகாமன் இயக்குனர் மகிழ் திருமேனி, “குமாரவேலன் எதையும் சிறப்பாக செய்பவர் . அவரது ஹரிதாஸ் படம் அதற்கு எடுத்துக் காட்டு .
அதில் இருந்து முற்றிலும் வேறு களத்தில் இந்தப் படத்தை எடுத்து உள்ளார் . படம் நன்றாக இருக்கும் என்பது இப்போதே தெரிகிறது ” என்றார் .
இயக்குனர் சசி பேசும்போது ” இங்கே, அரங்கு இருட்டாக்கப்பட்டு ஒலிக்க விடப் பட்ட , படத்தின் தீம் மியூசிக் பாடலை கண்ணை மூடிக் கொண்டு கேட்டு லயித்தேன் .
இப்படி ஒரு இசை வந்து இருக்கிறது என்றால் அது நல்ல படமாகத்தான் இருக்க வேண்டும் .
படம் கண்டிப்பாக வெற்றி பெறும் ” என்று வாழ்த்தினார்.
இயக்குனர் சீனு ராமசாமி ” ஒரு படம் பார்த்தால் அது எந்த ஊரில் , எந்த மண்ணில் எந்த மாதிரியான பின்னணியில் எடுக்கப்பட்டது என்பது தெரியவேண்டும் .
அந்த புவியியல் தன்மை ஒரு நல்ல படத்துக்கு முக்கியம் .
நமது பல படங்களில் வரும் வீடுகளும் தெருக்களும் ஊர்களும் பொத்தாம் பொதுவாக இருக்கின்றன . புவியியல் தன்மை இல்லாத படங்களை உலக சினிமா மதிப்பது இல்லை .
நம் ஊரை நம் அடையாளத்தோடு நம் சினிமா காட்டினால் அது உலக சினிமாவாக மாறிவிடும் . கமல்ஹாசன் நமது ஊரின் அடையாளங்களை தனது படத்தில் காட்டியதால்தான் உலக நாயகனாக மாறினார்.
காஞ்சிபுரம் பட்டு காஞ்சிபுரம் பட்டாகவே இருந்தால்தான் அது உலக அளவில் மதிக்கப்படும் .
அந்த வகையில் இந்த படத்தில், வாகா பகுதியின் புவியியல் தன்மை சிறப்பாக காட்டப்பட்டு இருப்பது படத்தின் சிறப்புக்கும் வெற்றிக்கும் உதவும் ” என்றார் .
விஜய் ஆண்டனி தன் பேச்சில்
“குமார வேலனின் முதல் மூன்று படங்களுக்கும் நான்தான் இசை . இந்தப் படத்துக்கு அழைத்தபோது நான் தயாரிப்பு நடிப்பு என்று இருந்ததால் என்னால் முடியவில்லை .
யாரை போடலாம் என்று குமார் என்னிடம் கேட்டபோது நான் இமான் பெயரை சொன்னேன் . இமானின் பாடல்கள் அருமையாக உள்ளன. படம் நன்றாக வந்திருப்பது தெரிகிறது ” என்றார் .
பிரபு பேசும்போது ” மிகுந்த சிரமப்பட்டு இந்தப் படத்தை எடுத்து இருக்கிறார்கள் . விக்ரம் பிரபு மிகுந்த உழைப்பைக் கொட்டி இருக்கிறார் .
காஷ்மீரில் படப்படிப்பு நடந்தபோது மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு இருக்கிறார்கள் . காஷ்மீரின் இன்றைய முதல்வர் மெஹபூபா முஃப்தியின் கணவர் தமிழ் நாட்டுக்காரர்தான் .
அவர் பட யூனிட்டுக்கு உதவிகளும் பாதுகாப்பும் கொடுத்து உள்ளார் . அவர்களுக்கு நன்றிகள் ” என்றார் .
“இந்தப் படத்தைப் பார்த்த பிறகு ராணுவ வீரன் மீது இன்னும் மரியாதையை வரும் ”
என்றார் விக்ரம் பிரபு
நிகழ்சியில் பேசிய எல்லோரும் தெறி படத்தில் இயக்குனர் மகேந்திரனின் நடிப்பை பாரட்டியதோடு அவரின் சிறப்புகளையும் பேசி இருக்க , மகேந்திரன் தன பேச்சில் படக் குழுவை வாழ்த்தியதோடு,
” எல்லோரும் இப்போது என்னை கொண்டாடுகிறீர்கள். ஆனால் கமல்ஹாசன் இல்லை என்றால் நான் இல்லை.
நான் முதன் முதலில் இயக்கிய முள்ளும் மலரும் படத்தின் படத்தின் கதையை ஒரு தயாரிப்பாளரிடம் சொன்னபோது அவர் அந்தக் கதையைப் பற்றிக் குறை சொல்ல , ”இவங்களுக்கு விஷயம தெரியல .
இது நல்ல கதை . நீங்க வேற தயாரிப்பாளர் பாருங்க ‘ என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தவர் இயக்குனர் ஜி என் ரங்கராஜன் . அவரது மகன்தான் இந்தப் படத்தின் இயக்குனர் குமாரவேலன் .
அப்புறம் தயாரிப்பாளர் கிடைத்து படம் எடுத்தோம் .
ஒரு நிலையில் படத்தின் சில முக்கியக் காட்சிகளை எடுக்க தயாரிப்பாளர் ஒத்துக் கொள்ளவில்லை.
‘படம் நல்லாவே இல்லை; செந்தாழம் பூவில் பாடலை படம் பிடிக்க வேண்டாம் வேண்டாம்’ என்கிறார் தயரிப்ப்பாளர் . அதன் முந்தைய காட்சி உட்பட பல காட்சிகளும் எடுக்கபடாமல் இருக்கிறது
அந்தப் படத்தில் கமல் நடிக்கவில்லை . அந்தப் படத்துக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லை .ஆ னால் அவர் எனக்காக தயாரிப்பாளரிடம் வாதாடுகிறார் . அப்போதும் தயாரிப்பாளர் சம்மதிக்கவில்லை
கடைசியில் கமல்ஹாசன் காசு கொடுத்தார் . அந்தக் காசில்தான் அவை எடுக்கப்பட்டன . கமல் காசு தராவிட்டால் அந்தப பாடலும் சில முக்கியக் காட்சிகளும் படத்தில் வந்திருக்காது .
அவை வராவிட்டால் முள்ளும் மலரும் ஓடி இருக்காது . முள்ளும் மலரும் இல்லாவிட்டால் நான் இல்லை . ” என்றார் நன்றியின் உச்சியில் நின்று .
இதற்குப் பதில் சொன்ன கமல்ஹாசன்
” மகேந்திரன் சொன்னது சரிதான் . அனால் கொஞ்சம் ஓவர் .
நான் உதவாவிட்டாலும் முள்ளும் மலரும் ஓடாமல் போயிருந்தாலும் மகேந்திரன் அடுத்து ஒரு படத்தின் மூலம் வந்து இருப்பார்..
அதுல பாருங்க .. ஜி என் ரங்கராஜனும் கூட அப்போ மகேந்திரன்கிட்ட , வேற தயாரிப்பாளரை பாருங்கன்னுதானே சொல்லி இருக்காரு . வேற கதையை எழுதுங்கன்னு சொல்லலியே .
என்ன காரணம்? மகேந்திரன் அப்படி ஒரு திறமைசாலி. அதனாலதான் எனக்கும் உதவும் எண்ணம் வந்தது . உதவி செய்தேன். ” என்று கூறி ,
” வாகாக ஒரு கதை….வாகாக ஒரு ஹீரோ…. வாகாக ஒரு இசை அமைப்பாளர் ….வாகாக ஓர் இயக்குனர் இருக்கும் இந்த வாகா படம் வாகாக் வெற்றி பெறுவதில் ஐயம் இல்லை ” என்று படக் குழுவை வாழ்த்தினார்.
நிறைவுரை ஆற்றிய இயக்குனர் குமாரவேலன்
” இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது . சகதியிலேயே உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு அந்த ஒத்துழைப்பு இருந்தது .
படத்தில் காஷ்மீரில் நடக்கும் ஒரு கதைப் பகுதியை, செலவை குறைப்பதற்காக குளு மணாலியில் எடுக்க முனைந்தபோது , ‘பரவாயில்லை , காஷ்மீருக்கே பொய் எடுங்கள்’ என்று அனுப்பும் அளவுக்கு,
தயாரிப்பாளர் தந்த ஒத்துழைப்பு சிறப்பானது ” என்றார் .