மில்லியன் ஸ்டுடியோ சார்பில் எம் எஸ் மன்சூர் , அப்துல் காதர் ஆகியோர் தயாரிக்க, , சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப், ராஜீவ் பிள்ளை நடிக்க,குகன் சென்னியப்பன் இயக்கி இருக்கும் படம் வெப்பன். ஆயுதம் என்பதன் ஆங்கிலச் சொல்.
1940களின் இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்து கொண்டு இருக்கும்போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜெர்மனியில் ஹிட்லரைச் சந்தித்தபோது , நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்துக்காக , ஒரு வேதிப் பொருளை உடம்பில் செலுத்துவதன் மூலம் அதீத வலிமை கொண்ட , ஆயுதங்களின் தாக்குதல்களால் எந்தப் பாதிப்புக்கும் ஆளாகாத சூப்பர் ஹியூமன்களை தருவதாகச் சொல்ல, அதனால் வெள்ளைக்காரர்களை வெல்லும் வாய்ப்பு கிடைத்தாலும் பின்னாளில் அது இந்திய மக்களுக்கே எதிராகப் போகும் என்பதால் மறுத்து விட்டு வருகிறார் நேதாஜி ஆனால் நேதாஜியுடன் போன ஒருவர் பல வருடங்கள் அங்கேயே இருந்து அதை ரகசியமாகத் திருடிக் கொண்டு இந்தியா வருகிறார் . அதைக் கண்டு பிடிக்க வரும் ஹிட்லரின் படை அவர் வீட்டில் தாக்குதல் நடக்க, அந்த சூப்பர் ஹியூமன் சீரம் எதிர்பாராத விதமாக அந்த வீட்டு சிறுவன் உடலில் செலுத்தப்பட்டு அவர் வளர்ந்து சூப்பர் ஹியூமன் ஆகிறார் ( சத்யராஜ்) .
இந்த விஷயம் அறிந்து வித்தியாசமான விசயங்களைப் படமாக்கி வெளியிடும் ஒரு யூ டியூபர் குழு ( வசந்த் ரவி , தான்யா ஹோப்) அவரைத் தேடி, அவர் இருப்பதாகக் கருதப்படும் தேனியில் நியூட்ரினோ மையம் அமைந்துள்ள காட்டுப் பகுதிக்குப் போகிறது .
ஒரு சிறுவன் உட்பட சிலர், உருவம் தெரியாத மனிதனால் ( இன்விசிபிள் மேன்) காப்பாற்றப்படும் அல்லது கையாளப்படும் வீடியோக்களை வைத்து அவர்கள் அந்த சூப்பர் ஹியூமனைத் தேடுகின்றனர்.
இல்லுன்மினாட்டிகள் போன்ற பிளாக் கேங் டிவிஷன் நம்பர் 09 என்ற குழுவும் அதன் தலைவரும் ( ராஜீவ் மேனன்) சூப்பர் ஹியூமனை ஆயுத வியாபாரம் மற்றும் சட்ட விரோத செயல்களுக்குப் பயன்படுத்த சூப்பர் ஹியூமனையும் அதன் உடம்பில் செலுத்தும் வேதிப் பொருளையும் தேடுகின்றனர்.
அதற்காக ஒரு நபரை ( ராஜீவ் பிள்ளை) பிளாக் கேங் தலைவர் அனுப்புகிறார் .
அனைவரும் சந்திக்கும் போது என்ன நடந்தது என்பதே படம் .
வித்தியாசமான ஈர்ப்பான புதுமையான சயின்ஸ்ஃபிக்ஷன் கதை .
மில்லியன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்புத் தரம் அட்டகாசம் .
குகன் சென்னியப்பனின் ஷாட்கள், பிரபு ராகவின் ஒளிப்பதிவு இரண்டும் பிரமாதம்
லொகேஷன்கள், படத்தின் டோன் நாம் ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது .
சத்யராஜின் தோற்றப் பொருத்தம் சிறப்பு.
வசந்த் ரவி உற்சாகமாக நடித்துள்ளார் . மற்றவர்களும் குறை இல்லை .
ஜிப்ரனின் பாடல் இசை , பின்னணி இசை இரண்டும் கவனிக்க வைக்கிறது.
சுபேந்தரின் கலை இயக்கம் எம் ஆர் ராஜா கிருஷ்ணனின் ஒலி வடிவமைப்பு மற்றும் ஒலிக்கலவை , ஸ்ரீயின் வண்ண அமைப்பு, , இவற்றோடு டிஜிட்டல் இமேஜிங், வி எப் எக்ஸ் ஆகியவற்றில் உழைப்பும் தெறிப்பும் தெரிகிறது.
ஒட்டுமொத்தப் படமும் விசாரணை ரீதியில் போவது, இன்னும் எளிமையாக சொல்லாதது, வித்தியாசமான கதைக்கு அப்பா மகன் செண்டிமெண்ட் என்று வழக்கமான காட்சிகள் வைத்தது இவை பலவீனங்கள்
கிளைமாக்சில் சத்யராஜும் வில்லனும் பிறகு சத்யராஜும் வசந்த் ரவியும் மோதிக் கொள்வது போல இன்னும் பல விஷுவல் அசத்தல் காட்சிகளை படம் முழுக்க வைத்த தெளிவான திரைக்கதை , அழுத்தமான வசனங்கள் ஆகியவை இருந்திருந்தால் இன்னும் ரசிகர்களைக் கவர்ந்து இருக்கும் .
வெப்பன் … வித்தியாசமான ஹைடெக் முயற்சி .