வேலன் புரடக்ஷன்ஸ் சார்பில் வி எம் முனிவேலன் தயாரிக்க, நட்டி, ஷில்பா மஞ்சுநாத், மொட்டை ராஜேந்திரன், முரளி, அனன்யா மணி, ஷாஷ்வி பாலா, சுபப்ரியா மலர் நடிப்பில் ஹாரூன் என்பவர் இயக்கி இருக்கும் படம்.
ஐ டி வேலை, ஆளை அசத்தும் சம்பளம் அதனால் மது, மற்றும் பலவித போதைப் பழக்கங்களுக்கு ஆளான சில பெண்கள். மது போதைக் கேளிக்கை அரங்கில், ஆண்களை கிண்டல் கேலி அவமானம் செய்வதும் உண்டு .
அப்படி ஒரு நாள் கேளிக்கை இரவு முடிந்து , காலையில் கண் விழித்தால் ஒரு பழைய கட்டிடத்தில் கட்டிப் போடப்பட்டு இருப்பதை உணர்கிறார்கள்..ஒரு கால் பாதிக்கப்பட்ட- அதற்கான ஊன்று கோலில் கனமான இரும்புக் குண்டு பதித்த ஒரு நபர் (நட்டி) மற்றும் அவரது உதவியாளர் பெண் ஒருவர் சேர்ந்து இவர்களை அடிக்கிறார்கள் . ஊசி போட்டு மயக்கத்தில் வைக்கிறார்கள்.
ஏன் எதற்கு எப்படி ? அந்தப் பெண்களின் தப்பிக்கும் முயற்சிகள் என்ன ஆனது ? அப்புறம் நடந்தது என்ன என்பதே படம் .
கவர்ச்சியாய் உடை அணிந்த நாலு இளம்பெண்கள் , பப், டான்ஸ் , அவர்களைக் கடத்தும் ஒரு நபர் , அழுதாலும் அலறினாலும் கவர்ச்சி குலுங்கத்தான் அந்தப் பெண்கள் நடமாட வேண்டும்… ஒரு பங்களாவுக்குள் பெரும்பகுதி சூட்டிங். எல்லாம் சரிதான் . ஆனால் ஒரு நல்ல கதை , சிறப்பான திரைக்கதை , தேர்ந்த இயக்கம் வேணாமா?
கோழிக்கறி வாங்கப் போனால் கோழி முட்டையாவது வாங்கி வர வேண்டும் இல்லையா? கோழி முடியை வாங்கி வந்தால்?
துணிச்சல் மிக்க பெண் என்பது ஓகேதான் … ஆனால் கொஞ்சம் கூட சூழ்நிலையை உணராமல் தப்பான முக பாவனைகளோடு படம் முழுக்க சீன் போடுகிறார் ஷில்பா. எரிச்சல்தான் வருகிறது .
கடத்தி வைக்கப்பட்டு இருக்கும் தங்களைப் பற்றி டிவியில் செய்தி வருவதை , என்னமோ வீட்டில் ஹாயாக உட்கார்ந்து முறுக்கு சாப்பிட்டு டீ குடிப்பது போலப் பார்க்கிறார்கள் இந்தப் பெண்கள் . அப்படி ஒரு டைரக்ஷன் !
போலீஸ் ஜீப் சத்தம் கேட்கிறது . காவல் அதிகாரியை மட்டும் கொன்று தூக்கிக் கொண்டு வருகிறார் நட்டி. அவ்வளவு பெரிய அதிகாரி ஜீப்பை தானே ஓட்டி வரப் போவது இல்லை. ஆக மற்றவர்களுக்கு என்ன ஆச்சு என்று இந்த அறிவாளிப் பெண்களுக்கு தோணவே இல்லை
நிம்மதியாகத் தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணை தூக்கிக் கொண்டு போய் ”ஆ…. ஊ …”சத்தம் எழுப்பி விட்டு , பிறகு, ”இதயம் நின்று போனதால் அழுத்தம் கொடுத்து சரி செய்தேன்” என்கிறார் நட்டி . காதில் ஏதோ கொஞ்சமா பூ சுத்தலாம் . இப்படி ஆளுயர மாலையையே கட்டித் தொங்க விட்டால் எப்படி?
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் . ஆனால் இவை கூடப் பரவாயில்லை
கடைசியில் டுவிஸ்ட் என்ற பெயரில் அடிக்கிறார்கள் பாருங்கள் கூத்து . உயரத்துக்குப் போன குடை ராட்டினம் அத்துக் கொண்டு அந்தரத்தில் இருந்து சுத்தியபடியே கீழே விழுந்து சுக்கு நூறாவது மாதிரி ஆச்சு படம் .
”பணத் திமிரில் குடித்து விட்டுக் கூத்தடித்துக் கொண்டு போதையில் காரை ஓட்டி சாலையில் போகும் அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடாதீங்கடி / டா .
பாதிக்கப்பட்ட எல்லோருமே அழுதுட்டு அப்பால போயிட மாட்டான் . எவனாவது கிளம்பி வந்து புடிச்சு அடிச்சு கிழிச்சு கொன்னு அறுத்து போடுவான்/ள் ”
இந்தக் கதையை நேரடியாக சொல்வதற்கு என்னப்பா கஷ்டம் உங்களுக்கு ? சொல்ல விடாமல் தடுத்த மந்திரவாதி யாரு?
தொடரும் பல ஜென்மப் பகையில் தயாரிப்பாளரை இயக்குனர் இந்த ஜென்மத்தில் பழி வாங்கி இருக்கிறார், இந்தப் படத்தின் மூலம் . பகை தொடருமா முடியுமா என்று தெரியவில்லை
ஷில்பா மஞ்சுநாத் தவிர மற்ற மூன்று பெண்களும் கவர்கிறார்கள் . ரசிக்க வைக்கிறார்கள் . அவர்களுக்காகப் படத்தைப் பார்க்கலாம்
கிறிஸ்டோபர் ஜோசப்பின் ஒளிப்பதிவு , அருண் சங்கர் துரையின் கலை இயக்கம் இரண்டும் ஓகே.