
நேமிசந்த் ஜெபக் மற்றும் ஹிதேஷ் ஜெபக் தயாரிக்க, கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்த ஜெய் கிருஷ்ணா தனது இருபத்தைந்து ஆண்டு கால திரைப் போராட்டத்துக்கு பிறகு வாய்ப்பு பெற்று எழுதி இயக்க, விஜய் சேதுபதி , கிருஷ்ணா , சுனைனா ஆகியோர் நடிக்கும் படம் வன்மம்.
எவ்வளவு நெருங்கிய உறவுகள் என்றாலும் பேசும் வார்த்தைகள் மிக முக்கியமானவை . ஒரு சில வார்த்தைகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி விடும் . சிலப்பதிகாரம் முதல் வசந்த மாளிகை சினிமா வரை ஒரு வார்ததை ஏற்படுத்தும் விளைவுகள் விபரீதமானவை.

ராதா (விஜய் சேதுபதி ) செல்லதுரை (கிருஷ்ணா) ஆகிய இரண்டு உயிர் நண்பர்களுக்கு இடையே சொல்லப்படும் ஒரு வார்த்தை என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை நாகர்கோவில் வட்டார வாழ்க்கைப் பின்னணி மற்றும் பேச்சு வழக்கில் சொல்லும் படமாம் இது.
போஸ்வெங்கட் , ஸ்ரீரஞ்சனி, எங்கேயும் எப்போதும் வினோதினி , கோலிசோடா மது சூதனராவ் என்று நிறைய குணச்சித்திர நடிகர்கள் நடித்திருக்கும் ‘குடும்பங்களின்’ படம் இது .
வன்முறை மட்டும் வன்மம் அல்ல. அதற்கு மேலும் இருக்கிறது என்று பேசும் இந்தப் படத்தின் திரைக்கதை ஒரு நிலையில் கிருஷ்ணா மீது விஜய் சேதுபதிக்கு (கதை மற்றும் கதாபாத்திரப்படி ) இவ்வளவு வன்மமா என்ற கேள்வியை ஏற்படுத்துமாம்

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை அடுத்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், பட முன்னோட்டத்தையும் எஸ் எஸ் தமன் இசையில் யுகபாரதி எழுதிய இரண்டு பாடல்களையும் திரையிட்டார்கள்.
ஏகப்பட்ட கதாபாத்திரங்களுடன் கூடிய கதை சொல்லும் டிரைலராக இருந்தது .ஒரு பாடலில் விஜய் சேதுபதியும் கிருஷ்ணாவும் கடற்கரை அலைப் பின்னணியில் உற்சாக நட்பாட்டம் போடுகிறார்கள் .
இன்னொரு பாடலில் கிருஷ்ணாவும் சுனைனாவும் ரசனையோடு கொஞ்சிக் கொள்கிறார்கள். கிருஷ்ணாவின் கையில் ஜம்ப் பண்ணி தஞ்சம் புகும் காட்சியில் ஜம்மென்று குதிக்கிறார் சுனைனா .
விஜய் சேதுபதி அழுத்தமாக நடித்திருக்க , இன்னொரு வகையில் உற்சாகமாக ஸ்டைலாக நடித்து இருக்கிறார் கிருஷ்ணா .

படம் பற்றி பேச வந்த இயக்குனர் ஜெய் கிருஷ்ணா “படத்தின் கதையை விஜய் சேதுபதியிடம் சொல்லும்போது அந்த செல்லதுரை கேரக்டரை யாரு பண்றாங்கன்னு கேட்டார், கிருஷ்ணா பேரை சொன்னதும் நல்ல தேர்வுன்னு பாராட்டினார் .
அதே போல கிருஷ்ணாவிடம் கதை சொல்லும்போது ராதா கேரக்டரை பண்ணப் போறது யாருன்னு கேட்டாரு . விஜய் சேதுபதின்னு சொன்னதும் சூப்பர் சூப்பர் னு பாராட்டினார்.
அப்பவே எனக்கு இந்த புராஜக்ட் நல்லா வரும்னு தோணிடுச்சு . அப்படியே வந்திருக்கு.
இந்தப் படம் இவ்வளவு சீக்கிரமா முடிய கேமராமேன் பாலபரணிதான் காரணம் . அவ்வளவு வேகமாவும் தரமாகவும் எடுத்துக் கொடுத்தார் .
படத்துல பணியாற்றும் எல்லோருமே, இத்தன வருஷம் கழிச்சு படம் பண்ற எனக்கு உதவணும் என்ற நல்ல எண்ணத்துல, பெரிய ஒத்துழைப்பு கொடுத்தாங்க ” என்றார் .
“விஜய் சேதுபதி கூட நடிச்சது சந்தோஷமான விஷயம். அது எனக்கு ரொம்ப நாள் ஆசை. கிருஷ்ணா கூட நடிச்சதும் உற்சாகமாக இருந்தது.ரெண்டு பேருமே அவ்வளவு பிரண்ட்லியா நடிச்சாங்க படத்துல எனக்கு நல்ல கேரக்டர் ” என்றார் போஸ் வெங்கட்.

வழக்கம் போல உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் பேசிய கிருஷ்ணா ” நான் உண்மையிலேயே வேற ஒரு கதையை எடுத்துகிட்டுதான் ஹிதேஷ் ஜெபக் கிட்ட போனேன்.
ஆனா அவர் ‘நான் சொல்ற டைரக்டர் கிட்ட ஒரு கதையை கேளுங்க. அப்புறம் சொல்லுங்க’ என்றார். டைரக்டர் ஜெய் கிருஷ்ணா இந்த படத்துக் கதையை சொன்னார்.
உடனே நான் இந்தப் படத்தில் நடிக்க முடிவு பண்ணினேன் .
விஜய் சேதுபதி கூட நடிச்சது சந்தோஷமான விஷயம்.
பொதுவா ரெண்டு ஹீரோன்னாலே யாருக்கு அதிக முக்கியத்துவம் என்ற கேள்வி வரும் .எனக்கும் அந்த பயம் இருந்தது. ஆனா டைரக்டர் என்கிட்டே ‘ எனக்கு ரெண்டு கேரக்டரும் ரெண்டு கண்ணு மாதிரி’ன்னு சொன்னார் .
அப்போ கூட நம்ம கேரக்டர் என்ற ஒரு கண்ணை நொள்ளைக் கண்ணா ஆக்கிடுவாரோன்னு நினைச்சேன் . ஆனா ரெண்டு பேருக்கும் சம பங்கு கொடுத்து அருமையா பண்ணி இருக்கார் ” என்றார் .

விஜய் சேதுபதி பேசும்போது “கிருஷ்ணா சொன்ன மாதிரி , டைரக்டர் ஜெய் கிருஷ்ணா வயசுல பெரியவரா இருந்தாலும் இப்போ உள்ள டிரெண்டை புடிச்சு அற்புதமா எடுத்தார் .
எனக்கு நாகர்கோவில் ஸ்லாங் பேச ஆரம்பத்துல பயமா இருந்தது . அது ஒரு மாதிரி அடித் தொண்டையில பேசணும். முதல்ல பாடல் காட்சி எடுத்ததால அந்த ஏரியா பழகியது.அப்புறம் ஸ்லாங் சரியா வந்துருச்சு.
அதே போல இந்தப் படத்துல டான்சும் ஆடி இருக்கேன் . நல்லா இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க . கிருஷ்ணா ரொம்ப நல்லா பண்ணினார் .
ஒரு நிலையில் ஏதாவது சீன் பத்தி டிஸ்கஸ் பண்ணும்போது ‘விஜய் சேதுபதி சொல்லிட்டா ஒகே ‘ன்னு சொல்லிடுவார்” என்றார் .

படத்தில் கதாநாயகி சுனைனா கிருஷ்ணாவுக்குதான் ஜோடி . விஜய் சேதுபதிக்கு ஜோடி இல்லை. இது பற்றி ஒரு பத்திரிக்கையாளர் விஜய் சேதுபதியிடம் “படத்தில் உங்களுக்கு ஜோடி இல்லையா ?” என்று கேட்க,
“என் ஜோடி வீட்ல இருக்கு சார் ” என்று தன் மனைவியை குறிப்பிட்டார் விஜய் சேதுபதி.
அப்படீன்னா .. படத்தில கதாநாயகியோடு ஜோடியா நடிக்கிறவங்களுக்கு எல்லாம் வீட்ல மனைவி இல்லையா என்ன?
என்னதான் வித்தியாசமான கேரக்டர்கள் எல்லாம் பண்ணுவதாக நம்ம ஹீரோக்கள் சொன்னாலும் படத்துல ஜோடி இல்லைங்கறது அவங்க மனசுக்குள்ளயே ஒரு குறையாதான் இருக்கும் போல !