ஸ்டுடியோ 9 சார்பில் சுரேஷ் களஞ்சியம் வழங்க , கிளாப் போர்டு மூவீஸ் சார்பில் விநாயக் தயாரிப்பதோடு கதாநாயகனாகவும் அறிமுகமாக, இயக்குனர் பூபதி பாண்டியனிடம் உதவியாளராக இருந்த டான் சாண்டி எழுதி இயக்கும் படம் மகாபலிபுரம்.
பொதுவாக தமிழ் சினிமாவில் மகாபலிபுரம் எதற்கெல்லாம் வரும்? கதாநாயகன் கதாநாயகி டூர் போய் ‘கல்லிலே கலைவண்ணம் கண்டான்’ என்றோ அல்லது ‘சிலையெடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு’ என்றோ பாடுவார்கள். அல்லது ஒரு திரில்லர் கதையோடு எம்ஜிஆரும் சரோஜாதேவியும் “பொன்னெழில் பூத்தது புதுவானில் ..” என்று பாடிவிட்டு ஸ்டுடியோவுக்கு வந்துவிடுவார்கள்.

ஆனால் இந்த மகாபலிபுரம் படம் முழுக்க மகாபலிபுரத்திலேயே எடுக்கப்பட்டது . மகாபலிபுரம் மக்களின் வாழ்க்கையை சொல்கிறது . ஆக,படத்தின் பெயரும் மகாபலிபுரம். எடுத்த இடமும் மகாபலிபுரம். ‘ரஜினி இன் அண்ட் அஸ் ராஜாதிராஜா’ என்று விளம்பரம் செய்தது போல, ‘ மகாபலிபுரம் இன் அண்ட் அஸ் மகாபலிபுரம்’ என்று விளம்பரமே செய்யலாம் இந்தப் படத்துக்கு !
பொதுவாக ஒரு இயக்குனரை பார்த்து,” உங்க படம் வில்லேஜ் சப்ஜெக்டா? இல்லை சிட்டி சப்ஜெக்டா/” என்று கேட்டால் , சப்ஜாடாக ஏதாவது ஒன்றைத்தான் கூறுவார். ஆனால் ஒரே படம் வில்லேஜ் சப்ஜெக்ட் சிட்டி சப்ஜெக்டாக மட்டும் இல்லாமல் இன்டர்நேஷனல் சுப்ஜெக்டாகவும் இருக்கும் அதிசயம் நடக்குமா? மகாபலிபுரத்தை வைத்து படம் எடுத்தால் மட்டுமே அது சாத்தியம் என்கிறார் இயக்குனர்
“நமக்கெல்லாம் மகாபலிபுரம் ஒரு டூரிஸ்ட் ஸ்பாட். ஆனா உண்மையில அது ஒரு உலக நகரம் . நிலாவைக் காட்டி பிள்ளைக்கு சோறு ஓட்டிக்கிட்டு இருக்கற ஒரு சாதாரண கிராமத்து பெண்மணி கூட , தன்கிட்ட வந்து பேசற வெள்ளைக்காரங்க கிட்ட சர்வ சாதாரணமா இங்க்லீஷ்ல பேசிட்டு மறுபடியும் கிராமத்து பொம்பளையாகி சோறு ஊட்டற அதிசயத்தை இங்கதான் பாக்க முடியும் . இந்த ஊருல சிற்பம் செதுக்கறவங்களை நாம சிற்பியா பாப்போம் . டூரிஸ்ட் கைடை , கைடா மட்டும் பாப்போம் .
ஆனா அவங்க அப்படி இல்ல . விதைக்கிற காலத்துல விவசாயம் பாப்பாங்க. வேலை வந்தா சிலை செதுக்குவாங்க . சீசன்ல டூரிஸ்டு கைடா இருப்பாங்க . பாரினருக்கு ஹோட்டல் ரூம் எடுத்துத் தரும் ஏஜென்டா இருப்பாங்க . ஆக, எல்லாருமே பல வேலைக்காரர்கள். அப்படிப்பட்ட ஐந்து இளைஞர்களைப் பற்றிய கதைதான் இது. அங்கே வரும் வெள்ளைக்காரகள் பெண்கள் அவர்களோடு இவர்களுக்கு ஏற்படும் பழக்க வழக்கங்கள் , கலாச்சாரக் கலப்புகள் எல்லாம் சொல்லி இருக்கோம்.

ஒரு நிலை வரை ஜாலியா போற இவங்க வாழ்க்கையில இன்டர்வல் சமயத்தில் ஒரு சம்பவம் நடக்குது. அதுல இருந்து நிலைமை மாறுது . இந்தியா முழுக்க கவனிக்க வேண்டிய ஒரு பிரச்னையை இதுல சொல்லி இருக்கேன் . கடைசி நாற்பது நிமிடங்கள் மிக முக்கியமானவை” என்கிறார் இயக்குனர் டான் சாண்டி .
சூது கவ்வும் படத்தில் நடித்த கர்ணா , அந்தப் படம் மூலமும் நேரம் படத்தின் மூலமும் அறியப்பட்ட ரமேஷ், பட்டத்து யானை படத்தில் நடித்த கார்த்திக் , விஜய் டிவியின் கனாகாணும் காலங்கள் தொடரில் நடித்த வெற்றி , இவர்களுடன் விர்திகா ஷேரு, அங்கனா ராய் (அப்போ இங்கன என்னம்மா ?) ஆகியோர் நடிக்க, முகமூடி யுத்தம் செய் ஆகிய படங்களின் இசையமைப்பாளரான கே இசையமைக்க , மைனா , கும்கி படங்களின் எடிட்டரான எல்.வி. தாம்சன் படத்தொகுப்பு செய்ய, ‘…
இப்படியாக ஓரிரு படங்களின் மூலம் அறிமுகமாகி இருக்கிற மற்றும் புதிய சிற்பிகளை கொண்டு செதுக்குகிறார்கள் மகாபலிபுரம் என்னும் இந்த செல்லுலாய்டு சிற்பத்தை. படத்தின் ஒளிப்பதிவு சந்திரன் பட்டுசாமி.
“புதுசா என்ன சொல்லி இருக்க போறீங்க ? மகாபலிபுரத்தில் நடக்கும் ஒழுக்க மீறல்கள் , வரலாற்று சின்னங்களை சிதைப்பது , சிற்பக் கலையின் நலிவு … ஓரினச் சேர்க்கைகாக வெள்ளைக்கார கிழ போல்ட்டுகள் இங்கே வந்து அசிங்கம் செய்வது … இதுதானே ?” என்று கேட்டால் ,
“இது எல்லாம் படத்தில் வருது . ஆனா அந்த முக்கிய விஷயம் இதெல்லாம் இல்ல. சுவாரசியத்துக்காக அது ரகசியமா இருக்கட்டுமே ” என்கிறார்கள் டான் சாண்டியும் வினாயக்கும்

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கே ஆர், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் மற்றும் பிரபு சாலமன், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொள்ள நடந்த,
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ஸ்டுடியோ 9 சுரேஷ் “ஒரு படம் வெளியாகி முதல் காட்சி பத்து நிமிடம் ஓடுவதற்குள் படம் சரி இல்லை என்று சமூக வலைதளங்களில் கருத்து சொல்லி படத்துக்கு இக்கட்டை தரும் வழக்கம் இப்போது அதிகரித்துள்ளது.இது மாற வேண்டும் . நல்ல படம் என்றால் இப்படி உடனே சொல்லுங்கள். சரி இல்லை போன்று உங்கள் கருத்துக்கு தோன்றினால் அதை ரெண்டு நாள் கழித்து சொல்லுங்கள். அது படம் எடுத்தவருக்கு உதவியாக இருக்கும் ” என்றார்
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை முடித்த பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த படக் குழு. படத்தின் முன்னோட்டத்தையும் இரண்டு பாடல்களையும் போட்டுக் காட்டியது. ஒரே நேரத்தில் பல வெவ்வேறு கதைப் படங்களை எடுக்கும் அளவுக்கு மகாபலிபுரத்தில் விதம் விதமான லோக்கேஷன்களும் பின்புலங்களும் இருப்பது புரிந்தது .

“பொதுவாக நண்பர்கள்தான் உதவிக்கு வருவார்கள் என்பார்கள் . என் நண்பன் விநாயக் எனக்காக ஒரு படமே எடுத்து இருக்கிறார். எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் . பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் ” என்றார் இயக்குனர் டான் சாண்டி.

காதலிக்கும் பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?. எப்படி நடந்து கொள்ளக் கூடாது? மீறி தவறாக நடந்தால் என்னென்ன நடக்கும் ? என்பதை இந்தப் படத்தில் என் கேரக்டர் உணர்த்தும்” என்றார் நாயகி விர்திகா .
“ஸ்டுடியோ 9 சுரேஷ் களஞ்சியம் சார் படத்தை வாங்கிய உடனேயே எனக்கு வெற்றி உறுதி என்று புரிந்து விட்டது ” என்றார் தயாரிப்பாளரும் ஹீரோவுமான விநாயக்

அந்த நம்பிக்கை தந்த சுரேஷ் களஞ்சியம் பேசும்போது “என்னதான் உங்க ஆதரவை கேட்டாலும் நல்ல படங்களை மட்டும்தான் நீங்க பாராட்டி எழுதுவீங்க . என்னோட ஆறு மெழுகுவர்த்திகள், இப்போ சலீம் ஆகிய படங்களை நீங்க ஆதரிச்சது அந்த அடிப்படையில்தான் . இந்த மகாபலிபுரம் படமும் அந்த வரிசையில் வரும் . படத்தின் முதல் பாதி இயல்பான சுவையான விசயங்களோடு போகும் . இரண்டாம் பகுதி பிரம்மாதமா இருக்கு . அதிலும் கடைசி நாற்பது நிமிடங்கள் சூப்பர் . நிச்சயமா இதுவும் வெற்றிப் படமாக வரும்னு நம்பிக்கை இருக்கு ” என்றார் .
பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக நடிக்கும் இந்த சுரேஷ் களஞ்சியம்தான் ….
தமிழின் முதல் நேரடி 3 டி படமான அம்புலியை இயக்கிய ஹரி – ஹரீஷ் இரட்டையர்கள் அடுத்து இயக்கி இருக்கிற — நம் நாட்டுப் பேய்கள் மட்டுமல்லாது அயல் நாட்டுப் பேய்கள் எல்லாம் வருகிற — தமிழின் முதல் ஹாரர் அந்தாலாஜி (பேய்க்கதை தொகுப்புப்) படமான ஆ படத்தையும் அடுத்து வாங்கி வெளியிடுகிறார் .
‘ ஆ’ர்ப்பரிக்கும் வெற்றி பெற வாழ்த்துகள் … மகாபலிபுரத்துக்கு(ம்) !