தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் ஒரு படத்தை பிவிபி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்ற ஒரு செய்தியை படித்து இருப்பீர்கள் .
ஆனால் அதற்கு முன்பு…
அவர்களது கம்பெனியில் அஜித் நடிக்க விரும்பியும், அந்த கம்பெனி ‘அஜித் படத்தை தயாரிக்க முடியாது’ என்று ஒதுங்கிக் கொண்ட விஷயம் தெரியுமா?
இரண்டாம் உலகம் மூலம் பெரும் நஷ்டத்தை சந்தித்த இந்த நிறுவனம் அடுத்து சந்தானம் ஹீரோவான அறிமுகம் ஆன வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை தயாரித்தது.
இந்நிலையில் வீரம் படத்துக்கு பிறகு இயக்குனர் சிவா அஜித்தை வைத்து மீண்டும் படம் இயக்க விரும்பி, அஜித்திடம் ஒகே வாங்கி விட்டார் .
வீரம் படம் வெற்றிப் படம் என்ற ரீதியில்தான் நமக்கு தெரியும் . ஆனால் ஏகப்பட்ட தயாரிப்பு செலவு காரணமாக , படம் ரிலீஸ் ஆன அன்றே அதன் தயாரிப்பாளர் மூன்று கோடி ரூபாய் நஷ்டப்பட்ட கதை வெகு ஜன சினிமா ரசிகனுக்கு தெரியாது,
மீண்டும் வீரம் தயாரிப்பாளரை சிவா அணுக, பெரிய கும்பிடாக போட்டுஅனுப்பி வைத்து விட்டார் தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி .
ஆரம்பத்தில் ‘ஆகா ஆனந்தம்!’ என்றுதான் பிவிபி சினிமாஸ் நிறுவனமும் காது கொடுத்தது .
ஒன்றாக உட்கார்ந்து உற்சாகமாக பட்ஜெட் போட ஆரமபித்தார்கள்.
பொதுவாக உங்களுக்கு வருமானம் வருகிறது என்றால் அதற்கான வரியை நீங்கள்தான் கட்ட வேண்டும் . அனால் தல அஜீத் அப்படி இல்லை . அஜித்துக்கு வருமானமாக வருகிற பணத்துக்கான வரியையும் தயாரிப்பாளர்தான் அஜீத்துக்கு தரவேண்டும் .
அந்த வகையில் அஜீத்தின் சம்பளம், வருமான வரி பிடித்தம் இல்லாமல் பதினைந்து கோடி . இதற்கான வரியையும் சேர்த்தால் சுமார் 22 கோடி சில்லறை வரும் . ஆக தயாரிப்பாளர் செலவுக் கணக்குப்படி அஜீத்தின் சம்பளம் 22 கோடி சில்லறை . சிவா வேறு, சிறுத்தை வீரம் என்று வெற்றிப் படங்களை கொடுத்தவர் . எனவே அவர் சம்பளம் ஏழு கோடி . ஆச்சா?
அஜீத்துக்கு ஜோடியாக அருக்காணியையா போட முடியும்? ஆக அந்த கதாநாயகியின் சம்பளம்…? ஒருவேளை கதை ரெண்டு கதாநாயகிகளை டிமாண்ட் செய்தால் இன்னும் சில பல கோடிகள் . போச்சா?
நூற்றி இருபது நாள் ஷூட்டிங் . அதற்கு ஆகும் பலபல கோடிகள் .
இப்படி எல்லாவற்றையும் கணக்கு போட்டபோது வந்த மொத்த கோடிகள் கணக்கை பார்த்த பிவிபி ஆட்கள் பாம்பு கடித்த கதையாக அலறி விட்டார்களாம்.
“ஆத்தாடி ! ஆரம்பம் மற்றும் வீரம் படங்கள் மாதிரி இல்லாமல் படம் உண்மையிலேயே நன்றாக ஓடினால் கூட அந்த தொகை திரும்ப வராதே…” என்ற உண்மை உரைக்க ஆரம்பிக்க,
கார்த்தியையும் நாகர்ஜுனாவையும் வைத்து, கைக்கு எட்டக் கூடிய வேறொரு கணக்கை போட்டு, தமிழ் மற்றும் தெலுங்கில் தனது அடுத்த படத்தை ஆரம்பித்து விட்டது .