இந்த X வீடியோஸ் (திரைப்) படம் எப்படி? பார்க்கலாம் .
ஃபிரான்ட்டியர் என்ற பத்திரிகையின் ஆசிரியர் , பெருகி வரும் ஆபாச வீடியோக்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி,
ஒரு கட்டுரை எழுதும்படி பத்திரிகையாளர் மனோஜை ( அஜ்யா ராஜ்) பணிக்கிறார் .
அதற்கான வேலையில்அவர் இறங்கும்போது , நண்பன் ஒருவனின் மனைவியின் ஆபாச வீடியோவைப் பார்க்க நேரிடுகிறது .
வீடியோ எடுப்பது தெரிந்தே ஆபாச வீடியோ எடுக்க அவள் சம்மதித்து இருப்பது தெரிகிறது .
அந்த பெண் தன் நண்பனை ஏமாற்றுவதாக கொந்தளிக்கும் மனோஜும் நண்பர்கள் சிலரும் அதை அவனிடம் காட்ட, நண்பன் அதிர்ச்சி அடைகிறான் .
அதோடு அந்த வீடியோவை பர்சனல் சந்தோஷத்துக்காக எடுத்ததே தான்தான் என்றும் ,தனது லேப்டாப்பில் பாதுகாப்பான கடவுச் சொல் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த வீடியோ,
எப்படி இணையதளத்தில் பதிவேற்றப் பட்டது என்பதே தெரியவில்லை என்றும் சொல்கிறான்
ஒரு நிலையில் நண்பன் தற்கொலை செய்து கொள்கிறான் . கணவன் தற்கொலைக்கான காரணம் தெரியாமல் மனைவி தடுமாறுகிறாள் .
அவளிடம் மனோஜால் சொல்லவும் முடியாத நிலைமை
மனோஜும் நண்பர்களும் தங்கள் போலீஸ் நண்பனான இம்ரான் (ஷான்) உதவியை நாடி , அந்த வீடியோவை எப்படியாவது அழிக்க வேண்டும் என்கின்றனர் .
”ஒரு முறை ஆபாச இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ அடுத்ததடுத்து பல்வேறு இணைய தளங்களுக்கு போய்க் கொண்டே இருக்கும் .
தரவிறக்கம் செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் வெவ்வேறு இணைய தளங்களில் ஏறிக் கொண்டே இருக்கும் .
வாழ்நாள் முழுக்க செலவழித்தாலும் அதை அழிக்க முடியாது’ என்ற உண்மையை அவன் கூறுகிறான் .
சரி நண்பனின் லேப் டாப்பில் இருந்த வீடியோ எப்படி இணைய தளத்துக்குப் போனது என்று ஆராய்ந்தால் ,
பத்திரிக்கையாளன் மனோஜின் தம்பிதான் அதை செய்து இருக்கிறான் என்ற அதிர்ச்சி உண்மை வெளிப்படுகிறது .
எப்படி எனில் , ஒரு நபருக்கு ஈ மெயில் அனுப்பி அவர் அதை திறந்து பார்த்தாலே போதும்: அவர் லேப் டாப்பில் – கம்பியூட்டரில் உள்ள எல்லா விசயங்களையும்,
திருடி விடும் அளவுக்கு தொழிலோ நுட்பம் வளர்ந்து இருப்பதை சொல்லி அதிர வைக்கிறான் அந்தத் தம்பி .
அதோடு , ஆபாச வீடியோ வெளியிட்டு கோடி கோடியாக சம்பாதிக்கும் இணைய தளத்துக்கு அந்த வீடியோவை, விற்ற விசயத்தையும் சொல்கிறான் .
அந்த இணையதளம் சம்மந்தப்பட்ட அந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தால் … வரும் செய்திகள் குலை நடுங்க வைக்கின்றன.
தொழில் முறையிலான ஆபாச வீடியோக்கள் பலருக்கும் பிடிக்காமல் போன நிலையில் , பக்கத்து வீடுகளின் படுக்கையறைகளை எட்டிப் பார்ப்பதில்,
மக்களுக்கு உள்ள அசிங்க ஆர்வம் காரணமாக, வீடுகளில் பர்சனலாக எடுக்கப்படும் ஹோம் மேட் வீடியோக்களுக்கு கிடைக்கும் வரவேற்பு …
அதைப் பார்க்க பணம் செலவழிக்க தயங்காத மன நிலை …
எனவே ஆபாச இணையதளம் நடத்துபவர்கள் அது போன்ற வீடியோக்களுக்கு அலையும் நிலை …
பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில் செல்போனில் எடுக்கப்படும் ஆபாச வீடியோக்களை எடுத்தவரே அழித்து விட்டாலும் ,
அந்த செல்போன்கள் சர்வீசுக்குப் போகையில் தகவல் மீட்புத் தொழில் நுட்பம் மூலமாக அழிக்கப்பட்ட வீடியோக்களையும் மீட்டெடுக்கும் செல்போன் கடைக்காரர்கள்,
அந்த வீடியோக்களை இது போன்ற ஆபாச வீடியோ இணைய தளங்களுக்கு நல்ல விலைக்கு விற்பது …
முகநூலில் பெண்களோடு பேசும் நபர்கள் அவர்களுக்கு பாலியல் தூண்டலை ஏற்படுத்தி கேமரா வழியே ஆபாச வீடியோக்களை பதிவு செய்து அவற்றை இந்த ஆபாச இணைய தளங்களுக்கு விற்பது ….
இலவச ஃஆபர்கள் தருவதாக பொய்யான செய்திகள் அனுப்பி அதை ஒருவர் திறந்து பார்க்கும் நொடியில் அந்த செல்போன் மற்றும் கணிப்பொறியில் உள்ள,
படங்களை திருடும் தொழில் நுட்பம் வளர்ந்து உள்ள நிலையில் அதன் மூலம் ஆபாசப் படங்களை பெறுவது…
பிளம்பர் வேலைக்குப் போகும் நபர்கள் வீடுகளின் பாத்ரூம் மற்றும் பெட் ரூமில் ரகசியமாக கேமராக்களை பொருத்தி அதன் மூலம் எடுக்கப்படும் ஆபாச படங்களை பெறுவது…
பல பெண்களை வீழ்த்தும் பிளே பாய்களுக்கு பணத்தாசை காட்டி , தாங்கள் சுகிக்கும் பெண்களை ஆபாசப் படம் எடுக்க வைத்து அவற்றை காசுக்கு வாங்கி இந்த இணைய தளங்கள் பதிவேற்றம் செய்வது…
இது போன்ற சம்பவங்களால் நடக்கும் அவமானங்கள் , பாதிப்புகள் , இழப்புகள் , இறப்புகள் ; அதில் தற்கொலைகள் , கொலைகள் , ஒரு முறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆபாசப் படத்தில் உள்ள பெண்ணின் அடுத்தடுத்த தலைமுறைகள் கூட ,
அதனால் காலகாலத்துக்கும் அவமானப் பட வாய்ப்புள்ள நிலை…
— எல்லாம் அதிர அதிர பதற பதற துள்ளத் துடிக்க வெளிப்படுகின்றன.
நம் ஊரில் இருந்து கொண்டே அப்படி நம்ம ஊர்ப் பெண்களின் ஆபாசப் படங்களை ஏற்றி அழியா அவமானத்தை ஏற்படுத்தும்,
அந்த இணைய தளக் கும்பலை மனோஜ் , இம்ரான் மற்றும் நண்பர்களால் கண்டு பிடித்து தண்டிக்க முடிந்ததா ? இல்லையா ?
அதில் சட்ட ரீதியாக உள்ள பிரச்னைகள் , ஓட்டைகள் என்னென்ன ?
செத்துப் போன நண்பனின் எதிர்கால மனைவிக்கு மனோஜ் செய்ய நினைத்த உதவி என்ன ? அவள்அதை ஏற்றாளா மறுத்தாளா?
ஆம் எனில் நடந்தது என்ன ? இல்லை எனில் மறுத்தது ஏன் ?
–என்பதே இந்த படம் .சபாஷ் இயக்குனர் சஜோ சுந்தர் !
இன்றைய கால கட்டத்துக்கு மிகவும் தேவையான அவசியமான முக்கியமான படத்தை எடுத்துக் கொடுத்து அதன் மூலம் ஒரு அதிபயங்கரமான விசயத்தில் சமூக விழிப்புணர்ச்சிக்கு வித்திட்டிருக்கும் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் .
அதே நேரம் கோவில் பற்றி படம் எடுத்தாலே ஒரு குத்துப் பாட்டு எடுக்கும் நம்ம சினிமாவில் கதையே ஆபாசம் சம்மந்தப்பட்டது என்ற போதும் அதை இஷ்டத்துக்குப் பயன்படுத்தாத உங்கள் நேர்மைக்கும் ஒரு கை குலுக்கல் .
ஆபாச இணைய தளங்களில் விரியும் — தொழில் முறையாக எடுக்கப்படாத — ரகசியமாக் எடுக்கப்பட்ட ஒவ்வொரு ஆபாச வீடியோவுக்குப் பின்னாலும் இவ்வளவு அலறல் ஓலம், கண்ணீர் கதறல் இருக்க வாய்ப்புண்டு என்ற நினைப்பே நடுங்க வைக்கிறது.
எப்போது ஒரு ஆபாசப் படம் செல்போன் மூலம் எடுக்கப்பட்டாலோ அல்லது எப்படி எடுத்தாலும் கம்பியூட்டரில் பதிவிறக்கம் செய்து வைத்தாலோ அவற்றை திருடுவதும்,
அதை ஆபாச இணைய தளங்களில் பதிவேற்றம் செய்வதும் கஷ்டமான விசயமே இல்லை என்பதை பொட்டில் அடித்தாற்போல சொல்கிறது இந்தப்படம் .
எல்லாவற்றையும் விட முக்கியமாக … ”பெண்களே ! கணவனோ அல்லது காதலனோ ..என்ன காரணம் சொல்லி உங்கள் மனதைக் கரைத்தாலும் சரி..
உங்களை ஆபாசமாக நிர்வாணமாக படம் பிடிக்க மட்டும் அனுமதிக்காதீர்கள்” என்ற கருத்தை ஆணி அடித்துச் சொல்லும் இடத்தில் கம்பீரமாய் நிற்கிறது இந்தப் படம்.
பணம் செலுத்தி ஆபாசப் படம் பார்க்கும் அரசியல்வாதி ஒருவரின் மகளின் ஆபாசப் படமே அவர் பார்க்கும் இணைய தளத்தில் வர,
ஒவ்வொரு வருடமும் மகளின் பிறந்த நாள் அன்று இரவு பனிரெண்டு மணிக்கு மகளை எழுப்பி பரிசு கொடுக்கும் அவர்,
அந்த வருடப் பிறந்த நாள் இரவு பனிரெண்டு மணி வாக்கில் மகளுக்கு மரணத்தை பரிசாகக் கொடுத்து விட்டு ,
குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் கதைப் போக்கு விதிர் விதிர்க்க வைக்கிறது . (அந்த அரசியல்வாதிக்கு காவி சட்டை போட்டு இருப்பது…. பலே பலே !)
நடுத்தரவயதுப் பெண்மணிகளும் கணவனின் ஆசைக்காக இப்படி ஆபாசமாக எடுக்க அனுமதித்து விட்டு பின்னர் கஷ்டப்படுவதை பட்டவர்த்தனமாக சொல்கிறது படம் .
ஆபாச இணைய தளம் வைத்து இருப்பவனின் வீடு சென்னை சவுகார்பேட்டையில் இருக்கிறது என்பதை,
படத்தில் இரண்டு முறை திட்டமிட்டு அழுத்தி சொல்வதன் மூலம் சட்டத்துக்கும் குளூ கொடுக்கிறார் சஜோ சுந்தர் .
“ஆபாசப் படம் என்பது பிளாஸ்டிக் மாதிரி . அதுக்கு பிறப்பு மட்டும்தான் உண்டு . இறப்பு கிடையாது ” என்ற வசனம் படைப்பாளியின் சுற்றுச் சூழல் அக்கறையையும் விளக்குகிறது . பிரம்மாதம் .
இப்படியாக 360 டிகிரி திரைக்கதையில் அசத்தி இருக்கும் சஜோ சுந்தர் இயக்கத்திலும் அசத்தி இருக்கிறார் .
எந்த கடற்கரையில் நண்பனிடம் அவன் மனைவியின் ஆபாசப் படத்தை பற்றி சொல்லி அவன் கொலைக்கு நாயகன் காரணமாக ஆனானோ,
அந்த இடத்திலேயே கடைசியில் அந்த பெண்ணிடம் நாயகன் பேசுவது .. அதே கடலில் அரசியல்வாதி செத்து பிணமாக மிதப்பது ….
அரசியல்வாதியின் நண்பராக சும்மா வந்து போய்க் கொண்டிருந்த நபர் கூட , ஒரே வசனத்தில் ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு உயர்ந்து நிற்பது இவை எல்லாம் சஜோ சுந்தரின் இயக்கத் திறமைக்கு கட்டியம் கூறும் காட்சிகள் .
அந்த கடைசிக் காட்சி … ஒருமுறை ஒரு பெண் ஆபாசப் படமாக இணைய தளத்துக்குள் சிக்கி விட்டால் என்றால் அவள் மட்டுமல்ல,
அவளது அடுத்தடுத்த தலைமுறைகள் கூட அவமானத்துக்கு ஆளாக வேண்டி வரும் என்று சொல்லும் அந்த கடைசி காட்சி ஒரு கண்ணீர் கவிதை .
ஜோகனின் அர்த்தமுள்ள பின்னணி இசை , கதையை ஒழுங்காக காட்சிப் படுத்துவதில் மட்டும் அக்கறை காட்டியுள்ள வின்சென்ட் அமல்ராஜின் ஒளிப்பதிவு,
நிறைய விவரங்கள், தகவல்கள், சம்பவங்கள் அடங்கிய கதையை , சஜோ சுந்தரின் தீர்க்கமான திரைக்கதையை,
குழப்பாமல் தொடுத்துக் கொடுத்திருக்கும் ஆனந்த் லிங்கக் குமாரின் படத் தொகுப்பு..
இவையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன .
அஜ்யா ராஜ், ஆக்ரிதி சிங், ரியாமிக்கா, விஷ்வா , ஷான் , பிரபூஜித், பிரசன்னா ஷெட்டி உள்ளிட்ட நடிக நடிகையர் அனைவரும் நல்ல பங்களிப்பு செய்துள்ளனர் .
இவர்களில் நாயகனாக வரும் அஜ்யா ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஷான்,ஆபாச இணைய தள உரிமையாளராக வரும் பிரபூஜித் ,
அவரது நண்பராக வரும் விஸ்வா , கணவனை இழக்கும் பெண்ணாக வரும் ஆக்ரிதி சிங் ஆகியோர் இன்னும் ஒரு படி சிறப்பாக செய்துள்ளனர் .
இந்தப் படத்தில் கதையின் நம்பகத் தன்மைக்கான சில டாப் லெஸ் காட்சிகளை இயக்குனர் வைத்துள்ளார் . ஆனால் அதில் ஆபாசம் முக்கியத்துவம் பெறவில்லை .
எனவே இது ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம்!
படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதாக சொல்கிறார் இயக்குனர் சஜோ சுந்தர் . அவருக்கு ஒரு அன்பு வேண்டுகோள்
அந்த இரண்டாவது பாகத்தை இந்த அளவுக்குக் கூட அரை நிர்வாணக் காட்சிகள் இல்லாமல் காட்சிப் படுத்தி ,
( உதாரணமாக U சான்றிதழ் படங்களில் கற்பழிப்பு மற்றும் முதலிரவுக் காட்சிகள் வருமே .. அந்த அளவில் )
அதை அனைவரும் பார்க்கும்படியான U சான்றிதழ் படமாக கொண்டு வந்தால் அது இன்னொரு இரும்புத் திரையாக ஜெயிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
மறுபடியும் சொல்கிறோம் .
இந்த X வீடியோஸ் …ஆண்கள் மட்டுமல்லாது முக்கியமாக பெண்கள் அவசியமாக பார்க்க வேண்டிய படம் .
மகுடம் சூடும் கலைஞர்
————————————-
சஜோ சுந்தர் .